Recent Comments

    போட்டாரே! அவர் போட்டாரோ?

    (ஈழப் போராட்டம் தனது நோக்கத்தை அடைந்ததோ என்னவோ, தமிழ் மொழியில் பல புதிய சொற்களை அறிமுகப்படுத்திச் சென்றிருக்கிறது. 'மண்டையில் போடுதல்' என்ற வார்த்தை ஈழத் தமிழில் கொண்டிருக்கும் அர்த்தம் எவ்வளவு ஆழமானது? ஒரு உயிரிழப்பை, அதுவும் இன்னொரு சகோதரத் தமிழனின் உயிரிழப்பை அலட்சியமாக 'போட்டாச்சாம்!' என்ற அறிவிப்பதில் தொக்கி நின்ற மகிழ்ச்சி  எமது போராட்டத்தின் விளைபயனே அன்றி, வெறும் பக்க விளைவு அல்ல! போடுதல் என்ற figurative வார்த்தையை எமது அகராதிக்கு அறிமுகப்படுத்தியவர், அதன் literal அர்த்தத்தில் போடப்பட்ட போது, தாயகம் இணையத் தளத்தில் வெளிவந்த கவிதை இது.)

    Kalvettu

    'நக்'கல் வெட்டுக் கவிராயர்

    கடியரசு கொடுமொழி கோத்தபராயன்

    போட்டாரே! அவர் போட்டாரோ?

    பொட்டு வைச்சுப் பொட்டு வைச்சுப் போட்டுப் போட்டுத் தள்ளியவர் பொட்டுக்கேடாக பொட்டென்று போட்டாரோ? போட்டவர் போட்டாரோ? இல்லை!? போட்டவரைப் போட்டாரோ? போட்டவர் பொல்லாத் தொலைதூரம் சொல்லாமல் போட்டாரோ? இல்லை!? போட்டவரைப் பொல்லார் கொலை செய்து இல்லாமல் போட்டாரோ? போட்டாரே! அவர் போட்டாரோ? சில நேரம் அவரைப் பொட்டர் தான் போட்டாரோ? அட என்னது? போனது உள்ளேயே மேலேயோ என்று உளவுக்கே தெரியாமல்... பொட்டரும் போட்டாரோ? போட்டாரே! அவர் போட்டாரோ? காடு கலங்க களமாட வருவதற்கு கானகத்தில் கரந்துறைய வனவாசம் போட்டாரோ? படகோடு படையெடுத்து பகையோடு பொருதவென்று காணாத் தொலைதூரம் கடல் கடந்து போட்டாரோ? வாழுந் தலைவர்களை வான்வீட்டுக்கு அனுப்பியவர் வானம் மீது ஏறி வைகுண்டம் போட்டாரோ? சின்னம் சிறார்களை சிதறப் பலி கொடுத்தவர் சீடகோடிகளுடன் சிவலோகம் போட்டாரோ? கூக்குரலும் கண்ணீருமாய் கூடுகள் கலைத்தவர் கூண்டோடு கூண்டாக கைலாயம் போட்டாரோ? கருநீலகண்டன் போல கழுத்தில் நஞ்சோடு தற் கொடை செய்ய கரும்புலியை கூசாமல் அனுப்பியவர் பாதாள பங்கரோடு பரமசிவன் வாழுகின்ற பரலோகம் போட்டாரோ? எமனுக்கு எமனாக எமகண்டம் பாடியவர் எருமைக் கடா ஏறி எமலோகம் போட்டாரோ? போட்டாரே! அவர் போட்டாரோ? போட்டவர் போட்டாரோ? இல்லை, போட்டவரைப் போட்டாரோ? இம்மை மறுமையின்றி ஈன இரக்கமின்றி எண்ணுக்கணக்கின்றி எத்தனை பேரைப் போட்டவரை ஒரு துளி கண்ணீர் விடக்கூட ஒருத்தரின்றிப் போட்டாரோ? மாற்றுக் கருத்தினரை மண்டையிலே போட்டவரை மாற்றார் களத்திறங்கி ஒரே போடாய் மண்டையில் போட்டாரோ? பூப்பறித்து பொட்டழித்து பொற்தாலி பறித்தவரின் பத்தினியைப் பாதகர்கள் பார்வை முன்னால் பலி வாங்கிப் போட்டாரோ? விலங்கிட்டுக் கூட்டடைத்து வதை செய்து விசாரித்து வாய்க்குள் வைத்துப் போட்டவரை வாய்க்கரிசி போடக் கூட வகையின்றிப் போட்டாரோ? சுண்ணம் பூசிய மின்னம் கம்பத்தில் கள்ளர், சண்டியர் கனத்த காடையரை கயிற்றால் கட்டி வைத்து கொடுஞ் சமூக விரோதி என்று கழுத்ததனில் மட்டை கட்டி நெத்தியிலே பொட்டு வைத்து நேர்மையின்றி போட்டவரை நெத்தியில் பொட்டு வைச்சு கழுத்தில் மாலை போட்டு நெறியோடு வழியனுப்ப பேருக்கு ஓர் ஆளின்றி பரிதாபமாய் போட்டாரோ? பச்சை வள்ளம் ஏற்றி வயிறு கிழித்தவரை கச்சை உரிந்து காட்சிப் பொருள் ஆக்கிப் போட்டாரோ? வீதியிலே டயர் மூட்டி விடலைகளை உயிரோடு வீசி எறிந்து போட்டவரை விறகு வைத்து சிதை மூட்ட வழியின்றிப் போட்டாரோ? மனிதக் குண்டனுப்பி மாலை போட்டவரை மனைவி குண்டனுப்பி பழிவாங்கிப் போட்டாரோ? உலகெங்கும் காலில் விழுந்து உயிர்ப்பிச்சை கேட்ட பின்பும் வளர்த்து விட்டவர்கள் காலை வாரிப் போட்டாரோ? போட்டாரோ! அவர் போட்டாரோ? வருவாரோ? அவர் வருவாரோ? வரவேண்டிய நேரத்தில் வழுவாமல் வருவாரோ? கார்த்திகையில் காட்சி தர கஜ ரத துர பதாதிகளுடன் அஞ்ஞாத வாசம் முடித்து வனத்திலிருந்து வருவாரோ? வண்ண மயிலேறும் வள்ளி மணாளன் போல், வையம் வியந்து நிற்க வானத்திலிருந்து வருவாரோ? புதைகுழி இருந்து பூமியது பிளந்து புலன் பெயர்ந்த புலிவாலர் புல்லரிக்க புதுப் பிறப்பாய் புயலாக எழுவாரோ? கங்கை கடாரம் கொண்ட கரிகால் சோழன் போல, கனடாவில் கொடியோடு கவனம் ஈர்க்கும் கூட்டத்தை வளைத்துப் பிடித்து வணங்கா மண் ஏற்றி மாவீரர் ஆக்கவென மாவிலாறு வருவாரோ? சீவியத்தில் நேசித்தவர்கள் மரணத்தில் மறந்ததனால் அமைதியில் இளைப்பாறி ஆன்மா சாந்தியின்றி ஆவியாய் அலைவாரோ? இல்லை!? கடல் கடந்த அரசு என்ற கண்டறியா ஈழத்தின் கண் காணாத் தலைவனாக, வெறும் இணையத்தின் இலத்திரனாய் புதினத்தின் பதிவுகளில் பூச்சாண்டி காட்டுவாரோ?

    Postad



    You must be logged in to post a comment Login