Recent Comments

    காளியிடம் சாமி சரண்!

    பகுத்தறிவு கொண்டவர்களாயிருந்தால் என்ன, முற்போக்கு, பெண்ணிய சிந்தனை கொண்டவர்களாயிருந்தால் என்ன, சிலர் தங்களின் சாதி, பரம்பரைப் பெருமை பற்றி உள்ளூர கர்வம் கொண்டவர்களாய், சமயம் கிடைக்கும் போது  அடுத்தவனை மட்டம் தட்ட அந்தப் பெருமையைப் பயன்படுத்துவர்களாய் இருந்து, சுயரூபங்களைக் காட்டி விடுகிறார்கள். பலர் இரகசியமாக தெரிந்தவர்களுக்கு மத்தியில் கேலியும் கிண்டலுமாகப் பேசினாலும், பொதுவெளியில் வேடம் காட்டுவார்கள்.

    பாவம், வைகோ. கருணாநிதியின் சாதியைக் கிண்டல் பண்ணப் போய் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

    இதில் என்ன அதிசயம் இருக்கிறது? தமிழன் என்றாலே அவனது அடையாளம் அவனது சாதியாகத் தானே இருக்கிறது. தமிழன் தேசியம் பேசினால் என்ன, திராவிடம் பேசினால் என்ன, பச்சைத் தமிழியம் பேசினால் என்ன, தமிழீழம் பேசினால் என்ன, அவனுக்குள்ளே அந்த சாதி என்ற அரக்கன் உறங்கிக் கொண்டு தானே இருக்கிறான். தமிழன் தமிழன் என்று வாய் கிழியக் கத்தும் தமிழன் மற்றத் தமிழனை கிணற்றில் தண்ணீர் அள்ள விடாதது முதல் தன் மகளைத் திருமணம் முடிக்க விடாதது வரைக்கும் தன் சாதீயத்தைக் காப்பாற்றிக் கொண்டு தானே இருக்கிறான். தலைமுறை தலைமுறையாகத் தமிழ் பேசினாலும், பார்ப்பான், வந்தேறி என்றாவது மற்றவனை மட்டம் தட்டி,  தன் பெருமையை தமிழன் நிலைநாட்டாமல் இருந்ததில்லை.

    இதில் கோபாலசாமியின் கூற்று கருணாநிதியின் மனதைப் புண்படுத்தியிருக்குமா? கோபாலசாமி பிரிந்து போன போது, தமிழன் துரோகம் இழைத்து விட்டான் என்றா கருணாநிதி குமுறியிருப்பார்? அவரும் கோபாலசாமியை இழிவுபடுத்த எந்த கருவி இருக்கிறதோ அதைத் தானே பயன்படுத்தியிருப்பார்.

    விஜயகாந்த் அணியிலும் சிலர் வெளியேற்றப்பட்டதற்கு காரணம், அந்த அணியில் இருக்கும் திருமாவளவனுக்கு நாங்கள் எப்படி வோட்டுக் கேட்க முடியும் என்று கேள்வி கேட்டதால் தான். இப்படி சாதீயம் அப்பட்டமாகத் தெரியும் அளவிற்கு இருக்கிறது கூட்டணியில் இலட்சணம்!

    தமிழக அரசியலில் இதெல்லாம் சாதாரணம். எவருடைய மேடைப் பேச்சினாலும் எவரும் புண்பட்டு அவருடனான உறவைத் துண்டித்ததாக சரித்திரம் இல்லை. நாளைக்கு கூட்டணி தேவை என்றால், வைகோ கருணாநிதிக்கு துண்டு போர்த்தினால், இரண்டு பேரும் சிரித்துக் கொண்டே கட்டியணைத்து போஸ் கொடுப்பார்கள்.

    ஒரு கட்சியிலிருக்கும் போது மற்றக் கட்சிக் காரர்களைக் கேவலமாய் திட்டுவதும், பின்னர் கட்சி மாறும் போது, மானம், ரோஷம், வெட்கம், சூடு, சுரணை எதுவும் இல்லாமல், சேர்ந்த கட்சித் தலைவனின் புகழ் பாடி, முன்னாள் தலைவனைத் திட்டித் தீர்ப்பது தமிழக அரசியலில் வழமை. எத்தனை தடவை கட்சி மாறினாலும், பாவம் கழுவ, ஒரு துண்டும் மாலையும் போதும். மறப்போம், மன்னிப்போம் தான்!

    இதற்கெல்லாம் சிகரமாக முன்பு ஒருவர் இருந்தார். அவர் தான் காளிமுத்து!

    எம்.ஜி.ஆரோடு இருக்கும்போது, கருணாநிதியை நாயை விடக் கேவலமாகத் திட்டுவார். எம்.ஜி.ஆரிடம் இருந்து துரத்தப்படும் போது, கருணாநிதிக்கு மாலை போட்டு, 'நான் கலைஞரின் போர்வாள்' என்பார். பின்னர் கருணாநிதி சீட் கொடுக்கா விட்டால், திரும்பவும் எம்.ஜி.ஆரிடம் போவார். அவரும் துண்டையும் மாலையையும் வாங்கிக் கொண்டு சீட் கொடுப்பார்.

    காளிமுத்து கருணாநிதியைச் சாதி சொல்லித் திட்டியதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கூட்டம் போட்ட போது, அதில் வைகோ பேசியிருந்ததாக யாரோ குறிப்புப் போட்டிருந்தார்கள்.

    இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் ஒரே தொகுதியில் வை.கோவும் காளிமுத்துவும் எதிர் அணிகளில் போட்டியிட்டார்கள். வைகோ தோல்வியடைந்த போது, அப்போது தாயகத்தில் தலையங்கம் போட்டோம்.... காளியிடம் சாமி சரண்! நண்பர் ஜயகரனின் சில்மிஷம் அது!

    ஒரு தடவை காளிமுத்துவின் மனைவி பற்றி ஏதோ செய்தி குமுதத்தில் வந்தது. அதைப் பார்த்து ஜாஸ்மின் என்று இன்னொரு பெண் தான் தான் காளிமுத்துவின் மனைவி என்று குமுதத்திற்கு பேட்டி கொடுக்க... கொஞ்ச நாள் காளிமுத்து நாறி... குமுதம் காசு பார்த்தது!

    அந்தக் காளிமுத்துவின் மனைவி, துணைவி, இணைவிகளில் யாரோ ஒருவரின் பெண்ணைத் தான் பச்சைத் தமிழன், முப்பாட்டன் பேரன் சீமான் மணமுடித்திருக்கிறார்.

    ஜெயலலிதா, கருணாநிதி என்று சகலரோடும் கூட்டு கண்ட வைகோ, காளிமுத்து போலவே, சீமானும் ஜெயலலிதாவோடு கூட்டுக் கண்டவர் தான்.

    தமிழக அரசியலில் மேடைகளில் பேசப்படும் அவதூறுகள் பற்றி அவதூறுகளுக்கு உரியவர்களே பின்னால் அலட்டிக் கொள்ளாத போது, சம்பந்தமில்லாதவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு மோதுகிறார்கள்.

    நம்ம தேசியத்தலைவர் மாதிரி, துரோகம் இழைத்தவனுக்கு மண்டையில் போடும் அரசியலை கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் ஆரம்பித்திருந்தால், நிலைமை என்னாயிருக்கும் என்று நினைத்தாலே.....

    பரவாயில்லை, இப்படி புதிய எஜமானவர்களுக்காக பழைய எஜமானர்களைப் பார்த்துக் குரைத்து விட்டுப் போகட்டுமே என்று தோன்றுகிறது.

    Postad



    You must be logged in to post a comment Login