Recent Comments

    மின்னோலை மர்மங்கள்

    Gmailதற்போது செல்பேசியும் மின்னோலை விலாசமும் இல்லாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். உங்கள் மின்னோலை விவகாரங்களுக்கு நீங்கள் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்தினாலும் ஜிமெயில் (Gmail) மிகவும் பிரசித்தமானது. வெறுமனே மின்னோலைகளை அனுப்பவும், பெறவும் பயன்படுத்தும் இந்த ஜிமெயில் மூலமாக பல்வேறு ஜிகினா விளையாட்டுக்களைச் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். சில நேரங்களில் அவசரத்தில் அனுப்பும் பட்டனை அழுத்திய பின் தான் தலையில் கை வைப்பீர்கள். அட, காதலிக்கு அனுப்ப வேண்டியதை மனைவிக்கு அனுப்பி விட்டேனே என்று! இவ்வாறான குடும்பஸ்தர்களின் வாழ்வில் நிம்மதி ஏற்பட கூகிள் வழி செய்திருக்கிறது. நீங்கள் அனுப்பும் பட்டனை அழுத்தியதும் சில செக்கன்களுக்கு ஜிமெயில் தாமதிக்க, அதை மீளப் பெறுவதற்கான பட்டன் திரையின் மேற்புறத்தில் இருக்கும். அந்த சில செக்கன்களுக்குள் மனமாற்றம் ஏற்பட்டால், அதை அழுத்தியதும், தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போகும். கூகிளின் இந்த இணையத்தளத்தில் விபரங்களைப் பெறலாம். உங்கள் ஜிமெயிலில் உள்ள பற்கள் உள்ள சில் படத்தில் அழுத்தி, Settings ஐ தெரிவு செய்யுங்கள். அதில் Labs என்ற Tab இல் தட்டுங்கள். அதில் Unsend ஐ தெரிந்து, enable என்ற ரேடியோ பட்டனை அழுத்தி, Save Changes என்று பக்கத்தின் அடியில் உள்ளதை தெரியுங்கள். இப்படியாக அட, தலை போகப் போகிறதே என்று தலையில் கை வைக்காமல் தலையைப் பாவித்து, இவ்வாறான கருணாநிதி ரேஞ்ச் மனைவி, துணைவி வேலைகளுக்குப் போவதைத் தவிர்ப்பதன் மூலமும் இந்த துன்பங்களிலிருந்து தப்பிக்கலாம். சில நேரங்களில் அவசரப்பட்டு நள்ளிரவில் பதில் அளிக்கப் போக, மறுதரப்பில் உள்ளவர்கள் நீங்கள் வேலை வெட்டி இல்லாமல் கணனியுடன் படுத்திருக்கிறீர்கள் என நினைக்கக் கூடும். இல்லாமல் தானாகவே, நீங்கள் குறிப்பிடும் நேரத்தில் மின்னோலைகளை அனுப்ப, Boomerang for Gmail என்ற plug in ஐ பயன்படுத்தி, அனுப்பும் செய்திகள் எந்த நேரம் அனுப்ப வேண்டும் என்பதை தெரிவு செய்தால், அது தானாகவே குறித்த நேரத்தில் ஓலையை அனுப்பும். இது Chrome, Firefox, Safari போன்ற உலவிகளில் பயன்படுத்தலாம். மாதம் 10 செய்திகளுக்கு மேல் அனுப்புவதாயின், பணம் செலுத்தி அவர்களின் சேவையைப் பயன்படுத்தலாம். இந்த இணைப்பில் சென்று நீங்கள் இதைப் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் ஜிமெயிலை வாசிக்கும் போது, யாருடன் தொடர்பில் இருக்கிறீர்கள் என்பதை அறிய Rapportive என்ற plug in ஐ பயன்படுத்தும் போது, மற்றவருடைய விபரங்கள் உங்களுக்கு பார்க்கக் கூடியதாக இருக்கும். உங்களுக்கு மின்னோலை அனுப்பியவரின் படம், விபரங்கள் போன்றன ஒரேயடியாகவே பார்வையில் விழும். இதன் மூலம் நீங்கள் ஓலை அனுப்புவது காதலிக்கா? மனைவிக்கா? என்பதை அறிந்து கொள்ள உதவும். சில நேரங்களில் நீங்கள் ஜிமெயில் அனுப்புவோர் தங்களுக்கு கடிதம் கிடைக்கவில்லை என்று அம்மாவாணை அடித்துச் சத்தியம் செய்யக் கூடும். அவர்களை கையும் மெய்யுமாய் பிடிக்க, Mail Track பயன்படுத்தினால் அவர்கள் எந்த நேரம் திறந்து வாசித்தார்கள் என்ற விபரம் கிடைக்கும். மறுபுறத்தில் uglyemail பயன்படுத்தினால், உங்களுக்கு யாராவது, அப்படி நீங்கள் எந்த நேரம் வாசித்தீர்கள் என்பதை அறியும் பொறி இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதைச் சொல்லும். ஆகவே மற்றவர்களை கையும் மெய்யுமாய் பிடிக்கவோ, நீங்கள் கையும் மெய்யுமாய் பிடிபடாமல் இருக்கவோ இவை இரண்டையும் பயன்படுத்தலாம். இணைய இணைப்பு இல்லாத போது ஜிமெயிலைப் பயன்படுத்த முடியாத போது, ஓலைகளைத் தயாரிக்க Gmail-offline பயன்படுத்தலாம். இது குறோம் உலவியில் பயன்படுத்தப்படுவது. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் கோளாறு புரிந்தும் பிடிபடாமல், நிம்மதியாக தூங்கி வாழும் தமிழனாக வாழுங்கள்.  

    சுவடி வைகாசி 2015

    Postad



    You must be logged in to post a comment Login