Recent Comments

    உள்ளிப் பூவைக் கிள்ளிப் பார்த்த நாளல்லவோ!

    Garlicscapeஒரு பூந்தோட்டக் காவல்காரனின் நாட்குறிப்பிலிருந்து! (7)

    Pinkroseகொல்லைப் புறத்து பூந்தோட்டத்தில் எத்தனையோ புதினங்கள் நடந்து முடிந்து விட்டன. காவல்காரனுக்கு நேரப் பற்றாக்குறை. இதற்குள் இன்னொரு 'தோட்டத்திற்குள்' கொத்திக் கிளற வேண்டியதாயிற்று. 'தோட்டத்தில்' பயிர் நடாமல் இலக்கியப் பிழைப்பு நடத்தினால்...? அவர்கள் வேண்டப்பட்டவர்களுக்கு விருது கொடுப்பது போல, நாமும் நண்பர்களுக்கு மரக்கறிகளைக் கொண்டு போய் கொடுத்து, நமது கையும் கொடுத்துக் கொடுத்தே சிவக்கும் போல தெரிகிறது. கத்தரி, மிளகாய், தக்காளி எல்லாம் வேகம் பிடித்து வளரத் தொடங்க முன்னால், கீரை, முள்ளங்கி, சலாட் இலைகள் என அறுவடை ஆரம்பித்து விட்டது. அதிலும் கீரை பூத்து முற்றிப் போகும் முன்னால், பிடுங்கியாக வேண்டும். அளவுக்கு மீறிய விளைச்சல். தமிழ் மகன் நிர்வாக விற்பனை நிலையங்களில் கொடுத்து விற்கலாமே என்ற ஆலோசனைகள் வந்தாலும், இந்த தமிழ் மகன்களுடன் கொடுக்கல், வாங்கல்களில் பட்ட அனுபவத்தில், இவை வீணாய் போய் வீசி எறிந்தாலும் பரவாயில்லை, பெட்ரோல் காசு மிச்சம் என்ற எண்ணம்.Garlic1 இம்முறை அதிகமாய் விளைந்திருக்கும் உள்ளி பூக்கத் தொடங்கியிருக்கிறது. பூக்கும் உள்ளிகளை முற்ற விட்டால், அவை பூவிலேயே விதை உள்ளிகளாகி விடும். அவை சமையலுக்குப் பயன்படுத்த முடியாதபடிக்கு நுண்ணியவை. உதிர்ந்து கொட்டுண்டால், மீண்டும் உயிர்த்தெழுந்து, களையாகி அதுவே தலையிடியாகி விடும். களையெடுப்பு எல்லாம் தேசியத் தலைவரோடு போய் முடியட்டும். பூவில் விதைகள் உருவாகினால், நிலக்கீழ் உள்ளிக்கு சத்துக்கள் செல்லாமல் அவை நோஞ்சானாகி விடும் என்பது அடுத்த பிரச்சனை. எனவே இவற்றை கிள்ளி விட்டால் தான், இலையில் ஒளித்தொகுப்பில் உருவாகும் சத்துக்கள் விதைக்குச் செல்லும். வெங்காயப்பூவின் இனிமையான ருசி போல, இவற்றின் பூக்களும் சமையலுக்காக பெருவிலையில் கமக்காரர் சந்தைகளில் இங்கே விற்பனையாகும். Garlic Scape எனப்படும் இவை அபூர்வமானதாலும், சுவையானதாலும் விலை அதிகம். நமது நட்பு வட்டத்திற்குள்ளேயே பட்டயம் பெற்ற சமையல்காரர்கள்Garlic3 உண்டு. அவர்களுக்கு உள்ளிப் பூ மகிமை தெரியக் கூடும். இந்தக் கற்றுக்குட்டி நீட்டி முழக்குவது கண்டு அவர்களுக்கு புன்சிரிப்புக் (நக்கல்!) கூட வரக்கூடும். ஹ்ம்... வித்துவச் செருக்கு! எனவே இம்முறை தண்டோடு பூவை துண்டித்து சமைப்பதற்காக கொடுத்தால், வாங்கியவர்களுக்கு அதை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. முயற்சித்த ஒருவருக்கோ சுவை பெரிதாகப் பிடிபடவில்லை. உள்ளிப் பூ சமைக்கத் தெரியாதவர்களுக்கு இனிமேல் வீட்டில் போய் சமைத்துக் கொடுக்க வேண்டியும் நேரலாம்! சரி, நாம் சமைப்போம் என்று முறித்தாயிற்று. வெங்காயப் பூ என்றால், நீண்டிருக்கும். வெட்டித் தள்ளுவது சுலபமானது. இவை சுருண்டு போய் வேறு இருக்கும். சோம்பல் மிகுந்து, ஒரேயடியாய் குவித்து விட்டு குறுக்கும் மறுக்குமாய் நாலைந்து வெட்டு. வௌவ்வேறு சைஸ் துண்டுகளை தட்டைச் சட்டியில் எண்ணெய் விட்டு நற்சீரகம், கடுகு, கொஞ்சம் மிளகாய் தூள், உப்பு போட்டு வதக்க, சுவை அபாரம். வெந்தயம் போட்டால் நல்லாய் இருக்கும் என்ற எண்ணம். பிறகு அதற்கு குழம்பாக்க வேண்டுமோ என்ற சந்தேகம்.Garlic2 பிஞ்சுமில்லாமல், முற்றியதாகவும் இல்லாமல் இருக்கும் பயத்தங்காய் மா தன்மையுடன் இருப்பது போன்ற சுவை. நன்றாக இருந்தது. இருந்தாலும், பூவிற்கு குஞ்சம் கட்டியது மாதிரி நுனிப் பகுதியில், பூவிற்கு மேலாக பூவை மூடி தொங்கும் கவசத்தை வெட்டி விடுங்கள். வெறும் நாராக இருக்கும். வீட்டுக்காரர்கள் காகத்திற்கு சாப்பாடு போட்ட மாதிரி, நம்மில் தான் பரிசோதனை பண்ணுவார்கள். இப்படி அபூர்வமானவற்றை நான் சமைத்து, சாப்பிட்டு சுவையாக இருக்கிறது என்று சொன்ன பின்னால், ஏதோ விருப்பமில்லாத மாதிரி சாப்பிடுவார்கள். சுவை பிடிபட்டுக் கொண்டால், எந்த அங்கீகாரமோ விருதோ கிடைக்காது. இப்போது வீட்டுக்காரி போனில் உரையாடுபவர்களுக்கு (சதா!) உள்ளிப் பூவின் பெருமை சொல்லியாயிற்று. பிறகென்ன, விருதைத் தேடிக் கொண்டு போய் வழங்க வேண்டியது நான் தானே! (இதற்குள் இறால் போட்டால் இன்னும் சுவையாயிருக்கும் என்று அட்வைஸ் வேறு. சும்மா நான் உண்டு, நம்ம சமையல் உண்டு என்று நம்ம வாழ்க்கை இது வரைக்கும் நல்லாத்தான் ஓடிக் கிட்டிருக்கு! 'அப்ப வீட்டில சமையல் நீங்கள் தானோ?' என்றெல்லாம் பின்னூட்டம் விட்டு, குடும்பத் தகராறுகளுக்கு வழி பண்ணாதீர்கள்.)

    Postad



    You must be logged in to post a comment Login