Recent Comments

    வேர்களைத் தேடும் கேரள டயறீஸ்!

    விகடனில் மலையாளத்து கானம் படம் பற்றி சிலாகித்து எழுதியிருந்தார்கள். ஜேசுதாஸ் பாடல்கள் பற்றி விதந்துரைத்ததால், அந்தப் பாடல்களை எப்படியாவது கேட்க வேண்டும் என்ற ஆர்வம்.

    அதீதமான ஜேசுதாஸ் ரசனைக்கு காரணம் நண்பன் கேதீஸ்!

    மாம்பூவே, சிறு மைனாவேயில் மெய் சிலிர்த்து, முதல் ஸ்டீறியோபோனிக் பிரியா பாடல்களை ஸ்டீரியோவில் பதித்து... என்று ரசனையை எனக்குள் புகுத்தியிருந்தான்.

    எனக்கென்னவோ பிரியா பாடல்கள் பிடிக்கவேயில்லை! வெறும் டெக்னோலஜி கலையாவதில்லை!

    எழுபதில் செம்மீன் பாட்டுக்களை, ஊருக்குள் கலியாண வீட்டு லவுட்ஸ்பீக்கர்களின் கேட்ட போது ஜேசுதாஸ் பற்றி தெரியாது.

    எனவே கானம் பாடல்கள் கேட்டாக வேண்டும்.

    தற்போதைய கூகிளும் யூடியூப்பும் அன்றைக்கு இருந்ததில்லை, விரல் நுனிகளால் வரலாற்றில் காலப் பயணம் செய்ய!

    வீட்டில் பத்திரிகைகள் இருந்த அளவுக்கு ரேடியோ இருந்ததில்லை.

    வீட்டின் வேலிகளுக்கு அப்பாலும், ரோட்டில் சைக்கிளில் போகும் போது மதில்களுக்கு அப்பாலும், பஸ்ஸிற்கு காவல் நிற்கும் போது தேத்தண்ணீர் கடைகளிலும் ஒலிக்கும் இலங்கை வானொலியும், நகரத்து றெக்கோடிங் பார்களில் ஒலிக்கும் இசைத்தட்டுகளும், யாழ்ப்பாணத்து டவுன் கூல் பார்களின் வாசலில் பொக்ஸ்களை கதற வைக்கும் திறீ இன் வண் சிஸ்டங்களும், கலியாண வீட்டு ஒலிபரப்பு சவுண்ட் சேர்விஸ்களின் ஹிஸ் மாஸ்டர்ஸ் வொய்ஸ் கோண்களும் தான் நமது ரசனையை வளர்த்தன!

    ஆனால் அந்த ஐஸ் கிரீம் வான் மட்டும் 'இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கின்றான்?' பாட்டை லூப்பில் விட்டு ஊருக்குள் ஓடி வரும்!

    அந்த டிஜேக்களின் கருணையும் தெரிவுகளும் தான் நம் ரசனையை நிர்ணயித்தன!

    இலங்கை வானொலி அவ்வப்போது ஒலிபரப்பும் பிறமொழிப் பாடல்களில் கானம் பாடல்கள் கிட்டவேயில்லை.

    தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்

    யாழ்ப்பாணத்து றெக்கோடிங் பார்களுக்கு ஏறி இறங்கி அலைந்தால்...

    லெட்ஜர் சைஸ் கொப்பிகளில் அவர்களின் கைவசம் இருக்கும் படப் பாடல்களின் database இருக்கும்.

    தேடிப் பிடித்தால், ஞானம் ஸ்டுடியோவுக்கு அருகில் உள்ள விக்டர் அன் சன்ஸில் இருந்தது.

    கசட் வாங்க காசில்லாமல், வீட்டிலிருந்த பழைய கசட்டைக் கொடுத்து, இருப்பதை அழித்து, கானம் பாடல்கள் இருபது ரூபாவுடன் றெக்கோட் பண்ணித் தர...

    மைத்துனர் ஈராக்கில் இருந்து கொண்டு வந்திருந்த டு இன் வண்ணில், 'உவன் உதை உடைக்கப் போறான்' என்ற திட்டுதலையும் கடந்து, மெய் மறந்து கேட்பேன்.

    வேறு யாரும் அந்தப் பாடல்களை கேட்க விரும்புவதில்லை.

    நம்ம ரசனை அப்படி!

    அந்தக் கசட்டும் என்னோடு புலம் பெயர்ந்து அகதித் தஞ்சம் கோரியது.

    கசட்டில் இடம் இருந்தபடியால், டேட்டாபேஸில் இன்னும் கேள்விப்படாத ஜேசுதாஸ் பாடல்கள் சிலவற்றையும் பதிவு செய்யக் கேட்க, செய்து தந்திருந்தார்கள். வெறும் பாடல்களின் பெயரைப் பார்த்தே செலக்ட் பண்ணியது.

    அந்தப் பாடல்களும் நான் தேடித் திரிந்த இன்னொரு படப் பாடல் தான் என்பது போன வாரம் வரை எனக்குத் தெரியாது!

    கானம் படம் எடுத்தவர் படத்தின் வெற்றியில் கிடைத்த பணத்தில் கேரளாவில் கானம் ஹோட்டல் கட்டினார் என்பது இந்தப் பாடல்களின் வேர்களைத் தேடியபோது கண்டடைந்தது!

    என் இதயத்தை நொருக்கி, உடைந்த போன காதல் காலத்தில் இந்தப் பாடல்களும் கேட்டதால், அந்த நினைவுகளை இந்தப் பாடல்கள் எப்போதும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

    Postad



    You must be logged in to post a comment Login