Recent Comments

    மிரட்டிப் பணம் பறிப்போர் பற்றிக் கவனமாயிருங்கள்

    fraudதற்போது கனடாவில் பரவலாக கனடிய வரித் திணைக்கள அதிகாரிகள் போல பேசி, தொடர்பு கொள்ளும் ஏமாற்றுக்காரர்கள் பயமுறுத்தி ஏமாற்றி பணமோசடி செய்து வருகிறார்கள். அப்பாவிக் கனடியர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் இவர்கள், தங்கள் கனடிய வரித் திணைக்கள அதிகாரிகள் என்று கூறி, தங்கள் பெயர், தொழில் இட இலக்கம் என பொய்யான தகவல்களைக் கூறி, 'நீங்கள் கனடிய வரித் திணைக்களத்திற்கு ஆயிரக் கணக்கில் கட்ட வேண்டும். உடனடியாகப் பணத்தைக் கட்டாவிட்டால், பொலிசார் உங்களைக் கைது செய்வார்கள், உங்கள் சொத்துக்களைப் பறிமுதல் செய்வார்கள்' என்று பயமுறுத்துகிறார்கள். உடனடியாகப் பணம் செலுத்த வேண்டும் என்று வங்கிக் கணக்கு இலக்கத்தை தந்து, பணம் செலுத்துமாறு மிரட்டுகிறார்கள். அல்லது உங்கள் கிரடிட் கார்ட் இலக்கத்தைக் கேட்டு வாங்குகிறார்கள். 'உங்களைப் பொலிசார் உடனடியாகத் தேடி வரப் போகிறார்கள்' என்று மிரட்டியதும் பலர் பயத்தில் பணத்தைச் செலுத்துகிறார்கள். இது தற்போது கனடாவில் எங்கும் பரவலாக நடைபெறுகிறது. உங்கள் விபரங்களை முகப்புத்தகம் போன்ற இணைய வழிகள் மூலமாக பகிரங்க இடங்களில் பெற்றுக் கொள்ளும் இவர்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொண்டதும், பெரும்பாலும் ஆண்கள் வேலைக்கு செல்லும் போது பெண்கள் வீட்டில் இருப்பார்கள் என்று பகல் நேரங்களிலேயே இந்த மிரட்டல் தொலைபேசி அழைப்புகளை விடுக்கிறார்கள். அல்லது இவர்களின் அடுத்த இலக்கு வயதான பெண்கள். இவர்களின் மிரட்டல்களுக்குப் பயந்து பலர் உடனடியாகவே பணம் செலுத்துகிறார்கள்.  இவைகளில் பெரும்பாலான அழைப்புகள் இந்தியாவிலிருந்தே வருகின்றன. மிரட்டலுக்குப் பயந்து பணத்தைச் செலுத்தியதும் தாங்கள் தங்கள் கடனை செலுத்தி விட்டோம் என்று நிம்மதியாக இருக்கும்போது, நீண்ட நாட்களின் பின் கனடிய வரித் திணைக்களத்தில் இருந்து கடிதம் வரும் போது தான் உண்மையை உணரக் கூடும். இப்படியாக பயத்தில் வான்கூவரில் ஒரு வர்த்தகர் ஆயிரக்கணக்கான டொலர்களை இழந்துள்ளார். இன்னொரு பெண் தன்னைப் பொலிசார் கைது செய்யப் போகிறார்கள் என்ற பயத்தில் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு சரணடையச் சென்றிருக்கிறார்.          எதுவாக இருந்தாலும் சில உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள். கனடிய வரித் திணைக்களம் இவ்வாறாக மிரட்டிப் பயமுறுத்தும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. ஊருக்கு வா, கவனிப்போம் என்றோ, தலைவருக்கு 'பணம் தர மாட்டோம் என்று கடிதம் எழுதித் தா' என்றெல்லாம் மிரட்டியது போல, இங்கு மிரட்டுவதில்லை. நீங்கள் கட்ட வேண்டிய வரிப் பாக்கி ஏதாவது இருந்தால் கடிதம் மூலமாகவே தொடர்பு கொள்வார்கள். நீண்ட நாட்களாக பணத்தைச் செலுத்தாமல் நீங்கள் சுத்திக் கொண்டு திரிந்தால் அடுத்த நடவடிக்கைகள் பற்றி கடிதம் மூலமாகவே அறிவிப்பார்கள். முக்கியமாக கனடா வரித் திணைக்களம் உங்கள் கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், மருத்துவ அட்டை போன்ற தனிப்பட்ட விபரங்களை தொலைபேசி மூலமாகக் கேட்க மாட்டாது. அத்துடன் உங்கள் தொலைபேசிப் பதிவு கருவிகளில் உங்களைப் பற்றிய விபரங்களைப் பதிவு செய்ய மாட்டாது. எனவே தொலைபேசி மூலமாக மிரட்டுபவர்களிடம் அவர்களின் தொடர்பு விபரங்களைப் பெற்ற பின்னர், பொலிசாரிடம் இது பற்றி அறிவிப்போம் என்று நீங்கள் மிரட்ட ஆரம்பியுங்கள். தேவைப் பட்டால் முதலில் கடிதத்தை அனுப்புங்கள், நாங்கள் பணம் செலுத்துகிறோம் என்று கூறுங்கள். இப்படி நீங்கள் மிரட்ட ஆரம்பித்ததும் பெரும்பாலும் அவர்களே இணைப்பைத் துண்டித்து விடுவார்கள். முன்பு எங்கள் சமூகத்தில் யுத்தத்திற்கு வரியாகவும், கடனாகவும் வாங்கியவர்கள் இன்று கோடீஸ்வரர்கள் ஆகியிருக்கிறார்கள். இதைப் போல, ஏமாற்றுக்கார அயோக்கியர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாளியாகாதீர்கள். சுவடி ஆவணி-புரட்டாதி 2015 (ஏற்கனவே பணம் கொடுத்து ஏமாந்த கனடியத் தமிழர்கள் இங்கே இருக்கிறார்கள். உங்கள் நண்பர்கள் யாராவது இங்கே இருந்தால் அவர்கள் பயன் பெற தயங்காமல் பகிருங்கள்.)

    Postad



    You must be logged in to post a comment Login