Recent Comments

    புரியாத மர்மங்கள்: ஒரு தொடர்கதை

    electionwatch2

    சிண்டு முடியப்பன்

    நீதிபதிகள் தீர்ப்புச் சொல்லும் போது, தெளிவாக இருக்க வேண்டும். ஒரு முற்றுத் தரிப்பு என்ன, அரைத் தரிப்புகளில் கவனம் இல்லாவிட்டால் தீர்ப்பே தலைகீழாகி விடும். பிரிட்டிஷ் காலத்தில் தூக்குத் தண்டனைகளுக்கு மேல் முறையீடு செய்ய லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலுக்கு விண்ணப்பம் அனுப்பும் போது, அங்கிருந்து வரும் தீர்ப்புத் தந்திகளில் ஐந்து சொற்கள் மட்டுமே இருக்கும். Hang him not release him. இதில் அரைத்தரிப்பு Not க்கு முன்பா பின்பா என்பதை வைத்தே தூக்குத் தண்டனை முடிவாகும். அரைத் தரிப்பு தபால் கந்தோரில் இடம் மாறியதால், உயிர் போனவர்களும் பிழைத்தவர்களும் உண்டு. இந்த இளைப்பாறிய நீதிபதி விக்னேஸ்வரன் ஐயா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை கூட்டமைப்பை தூக்குவதா? இல்லை விடுதலை செய்வதா? என்பதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் எதையும் தெளிவாகச் சொல்லாமல், பூடகமாகச் சொன்னால் எதுவும் புரியாது. துரோகி என்று சொன்னால் மண்டையில் போடு என்று அவர்களே சொல்வார்கள். யதார்த்தவாதி என்று சொன்னால் அவர்களுக்கு விளங்காது. மண்டையைக் குழப்புவார்கள். உடனே, தேர்தலைப் பகிஷ்கரியுங்கள் என்று சொன்னால் தான் விளங்கும். இப்படிக்கொத்த கூட்டத்திற்கு, முற்றிப் பழுத்த சிவப்பழமான ஐயா விட்ட அறிக்கை, யானை பார்த்த குருடர் மாதிரி ஆளாளுக்கு வியாக்கியானம் கொடுக்க வைத்து விட்டது. திருமதி மண்ணெண்ணெய் கூட ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்கச் சொன்னதாக மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார் என்றால் ஐயாவின் அறிக்கையின் தெளிவு புரிந்திருக்கும். ஐயா, நாங்கள் தமிழர்கள். எங்களுக்கு உந்த hang, release எல்லாம் விளங்காது. சுவீட் அன்ட் சிம்பிள் ஆக, ஒண்டில் கூட்டமைப்பு துரோகி எண்டு சொல்ல வேணும். அல்லது கஜேந்திரன் கோஷ்டி  துரோகி எண்டு சொல்ல வேணும். சும்மா மதிலுக்கு மேல நிண்டு, வெற்றி பெறுவோருடன் இணைந்து செயற்படத் தயார், தமிழர் நலன்களைக் காப்போருக்கே வாக்களியுங்கள் என்று பூனை விளையாட்டுக் காட்டக் கூடாது. உங்க கனபேர் மகிந்தவைக் கழுவில ஏத்தி, இன அழிப்பை உலக அரங்கில் உறுதி செய்து, தீர்வு எடுத்துத் தருவியள் எண்டு நம்பிக் கொண்டிருக்கினம். அவையை உப்பிடி ஏமாத்தக் கூடாது. நீங்கள் உப்பிடி குழப்ப, அவையல்லே மாறி, பிழையான கூட்டமைப்புக்கு மண்டையில போடப் போகினம். * * * அது சரி, வித்தியாதரன் தலைமையிலான ஜனநாயகத்திற்கான போராளிகள் பற்றி வெளியில் வரும் கதைகள் சிக்கலாக இருக்கே! டெயிலி மிரர் பத்திரிகையில் டி.பி.எஸ்.ஜெயராஜ் எழுதிய கட்டுரையில் சில சுவாரஷ்யமாக விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதெல்லாம் நம்ம தமிழுணர்வாளர்கள் கண்ணிற்கு புலப்படாது என்பதால் இதோ முக்கிய குறிப்புகள் நம்ம மொழிபெயர்ப்பில்... சிலந்தியின் படம் தான் இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சின்னம். அதை புலிமுகச் சிலந்தி என்று சொல்லி கதை விடுகிறார்களாம். வடிவேலும் நானும் ரவுடி தான் என்றது போல, நாங்களும் புலிதான் என்று தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்துதற்கான முயற்சி போலிருக்கிறது. தமிழரசுக் கட்சி ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி என்று சிங்களவரை ஏமாற்றியும் தமிழருக்கு அரசு வாங்கித் தரப் போகும் கட்சி என்று தமிழரை ஏமாற்றியதும் போலவும், தமிழில் போராளிகள் என்று தமிழரையும் ஆங்கிலத்தில்  Crusaders for Democracy  (சிலுவைப் போர் நிகழ்த்தியவர்கள் ) என்று மற்றவர்களையும் ஏமாற்றும் முயற்சி என்றே இது வர்ணிக்கப்படுகிறது. பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையில் கட்சித் தலைமையகம், திலீபன் உண்ணாவிரதம் இருந்த நல்லூர் கோவிலில் கட்சியின் உதயம் பற்றிய அறிவிப்பு என்றெல்லாம் புலிகளோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டே, தலைவர் உரையாற்றிய சுதுமலைக் கோவிலில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப் போக, தேர்தல் விதிகளைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதில் மிகவும் சர்ச்சைக்குரிய விடயம் என்னவெனில், இந்தப் போராளிகளுக்கு நிதியுதவி வழங்குவது தமிழ் சிஎன்என் கண்ணன் எனப்படுபவராம். இவர் லண்டனில் இருந்து இலங்கை வந்து பல வர்த்தக நிறுவனங்களை நடத்துபவர். இவருக்கு இலங்கை பாதுகாப்புப் படையினருடன் பலத்த தொடர்புகள் இருக்கின்றன. ஈபிடிபி மகேஸ்வரி நிதியம் ஊடாக நடத்தி வந்த மணல் வியாபாரத்துக்கு போட்டியாக இராணுவத்தினரின் உதவியுடன் இவர் மணல் வியாபாரம் நடத்தி வருகின்றார். இவர் இவர்களின் தேர்தலுக்கு 25 லட்சம் பணமும் இரண்டு வாகனங்களும் வழங்கியிருக்கின்றார். அரச படையினருடன் தொடர்புள்ள ஒருவர் போராளிகளுக்கு  தேர்தல் நிதி வழங்குகிறார் என்றால் எங்கேயோ உதைக்கிறதே? என்னவோ, தமிழ் மக்களின் பகுத்தறிவில் மிகுந்த நம்பிக்கை கொண்ட இவர்கள் எல்லாம் தேர்தலில் வந்து கதை சொல்கிறார்கள். கேட்பது கேனயர் கூட்டமாச்சே! ஏரோப்பிளேன் உருளைக் கிழங்குத் தோட்டத்துக்குள்ளேயும் ஓடும்! * * * புலிகளின் அழிவிற்கு குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்த கருணா, மகிந்தா-கோத்தாவின் அன்புக்குரியவராக மாறி, சுதந்திரக் கட்சியின் உபதலைவர் அளவுக்கு உயர்ந்திருந்தார். தற்போதைய தமிழ்க் கட்சித் தலைவர் ஒருவர் சொன்னதாக நண்பர் ஒருவர் சொல்வார்... 'கருணா ஒரு விசுவாசமான ஊழியன். தனக்கு தலைவர்களாக இருப்பவர்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்!' மகிந்தவின் வீழ்ச்சியை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளாததால், தன் மகிந்த ஆதரவு காரணமாக பாராளுமன்ற வாய்ப்பை இழந்து கொண்டார். தனக்கு தேசியப் பட்டியலில் இடம் அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டார்கள் என்பதில் கோபம் கொண்ட கருணா சிங்கள ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்று சர்ச்சைக்குள்ளானது. பிரபாகரன் உயிரோடு பிடிபட்டு, மகிந்தவினால் அடிக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டதாகவும், அவரது மனைவி, மகளுக்கு நடந்த மோசமான நிகழ்வுகள் பற்றியும் குறிப்பிட்டதுடன், இலங்கைப் பிரச்சனையின் திறவுகோல் தன்னிடம் மட்டுமே இருப்பதாகவும் கூறியதாக செய்திகள் வந்தன. பின்னர் திடீரென்று கருணாவே செல்பி வீடியோ ஒன்றில் தோன்றி அதை மறுத்திருந்தார். தங்கள் தலைவர் உயிரோடு பிடிபடாமல் தப்பித்தார் என்றும் வீர மரணம் அடைந்தார் என்றும் நம்பித் திரியும் புலி ஆதரவாளர்கள் துரோகி பொய் சொல்கிறான் என்று முகப்புத்தகத்தில் திட்டியிருந்தனர். பின்னர் கருணா தனது பேட்டியை மறுத்த பின்னர் அவர்களுக்கு கருணா உண்மை பேசுகிற உண்மை தெரிய வந்தது. 'பார்த்தீங்களா, தலைவர் சாகேலை எண்டு கருணாவே சொல்றான்!' என்று புல்லரித்துக் கொண்டார்கள். நமது ஊகம்... கருணா சொல்வதில் உண்மை இருக்கிறது. ஆனால் அந்த உண்மை வெளியே தெரிந்தால் வரக்கூடிய ஆபத்து பற்றி அரசு மிகக் கவனமாகவே இருக்கிறது. ஏற்கனவே யுத்தக் குற்றம், விசாரணை என்று தலைக்கு மேலே வாள் தொங்கிக் கொண்டிருக்கிறது. எனவே அரசியல், இராணுவ மட்டங்களில் இருந்து கருணாவுக்கு 'அறிவுறுத்தல்' வந்திருக்கலாம். அதுவே கருணாவின் அந்தர் பல்டிக்கு காரணமாக இருந்திருக்கலாம். அடித்த பல்டியில் தமிழ்த் தேசியத் கூட்டமைப்பில் விழுந்த கருணா தமிழ் மக்களை தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு கோரியிருக்கிறார். கேணல் என்றெல்லாம் தமிழுணர்வாளர்களைப் புல்லரிக்க வைத்த கருணாவின் வாழ்வு முற்றிலும் கோணலாகி விட்டது! (இவரது துரோகி விசா தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருக்கிறது.) * * * தமிழ் ஊடகவியலாளர்களும், முகப்புத்தகப் புழுக்களும் யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டிருப்பதால், பிள்ளையான் கிழக்கில் தேர்தலில் நிற்பது பற்றி யாரும் அலட்டிக் கொண்டிருப்பதாய் தெரியவில்லை. அதிலும் மைத்திரிபால சிறிசேனவின் கரங்களைப் பலப்படுத்தும் பிள்ளையானின் முயற்சி குறித்து தமிழுணர்வாளர்கள் கருத்துக் கூற மறப்பதால், அவர் இப்போதும் துரோகியா? அல்லது எதிரியாக அப்கிரேட் பண்ணப்பட்டாரா? என்பது பற்றி இன்னமும் ஊகிக்க முடியவில்லை. இருந்தாலும், கருணா மாதிரியில்லாமல், தனக்கென ஒரு பரிவாரத்தையும், கிழக்கு மக்களின் கண்ணில் ஒரு தலைவனாகவும் உருவா(க்)கிய பிள்ளையானுக்கு ஏறுமுகம் தான். பிள்ளையான் பிழைக்கத் தெரிந்தவர்!

    Postad



    You must be logged in to post a comment Login