Recent Comments

    ஏக பிரதிநித்துவம் கோரும் ஏகப்பட்ட பிரதிநிதிகள்!

    palmyrah சிண்டு முடியப்பன்

    புலன் பெயர் மகாஜனங்களே, தேசியத் தலைவர் திரும்பி வரும் வரையில் அவர் கையளித்த போராட்டத்தை சிரமேற் கொண்டு, நீங்கள் வீரம் செறிய அந்தப் போராட்டத்தை முகப்புத்தகத்தில் முன்னெடுப்பது குறித்து, வரவேண்டிய நேரத்தில் வருவதற்காக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் அவர் பக்கத்தில் சாமரம் வீசிக் கொண்டிருந்த பொட்டம்மானுக்கு மகிழ்ச்சி தெரிவித்ததாக அங்கிருந்து கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் தற்போதைய தேர்தலில் கூத்தமைப்புக்கும் குதிரையமைப்புக்கும் நீங்கள் வரிந்து கட்டிக் கொண்டு கயிறிழுத்து, பரஸ்பரம் துரோகி என்று முத்திரை குத்தி, தன்னுடைய வழிநடத்தலில் இருந்து தவறாமல் நடந்தது குறித்து பெருமைப்பட்டதுடன், மண்டையில் போடும் தன்னுடைய ஏகபோக உரிமைக்கு நீங்கள் உரிமை கோராததால், பெருமகிழ்ச்சியும் அடைந்துள்ளார். தேசியத் தலைவரின் கொள்கைகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், இந்த விடயத்தில் எங்களுக்கும் அது அளவில்லாத மகிழ்ச்சியே. குரங்கு கை பூமாலையும் தலைவர் கை துப்பாக்கியும் மாதிரி, உங்கள் கைக்கும் ஏதாவது கிடைத்திருந்தால், முள்ளிவாய்க்காலை விட பெருமளவு தலைகள் இந்த தேர்தலில் விழுந்திருக்கும். சுந்தரம் கொலையில் தொடங்கிய சகோதரப் படுகொலைகள் இன்னொரு சுழற்சியில் சுமந்திரனில் தொடங்கியிருக்கும். இரண்டு தரப்பும் தேர்தலைக் குழப்ப, எங்காவது வாக்குச்சாவடியில் காவலுக்கு நின்ற இராணுவத்தினருக்கு ஏதாவது செய்யப் போக, இராணுவம் வந்து சனத்தைச் சுட... திரும்பவும் யாழ்ப்பாணம் அனுமார் எரித்த இலங்கை மாதிரி, உங்கட புண்ணியத்தில் எரிந்திருக்கும். ஏதோ நல்ல காலம், கடவுள் காத்தது! கடவுள் தமிழனைக் காப்பாற்றா விட்டாலும், யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றியது பெரும் சந்தோசம். அதைவிடச் சந்தோசம், தேர்தலில் தான் ஆற்ரை பக்கம் எண்டு தேசியத் தலைவர் அறிக்கை விடாட்டியும், (அவற்ரை வழியில் உங்கட நாடு கடந்த பிரதமர் விட்டவர், ஆனா அவற்ரை அறிக்கையும் முதல்வரின்ரை மாதிரிக் குழப்பமாய் இருந்துது!) உங்களுக்குள்ள ஒரு 'பல கட்சிச்' சிந்தனை வந்து பிறந்திருக்கிறது. அதுவும் தமிழ்த் தேசியத்தின் ஏகபிரதிநிதி ஓய்வு முடிந்து வரும் வரைக்கும், அதற்கு உரிமை கோர ஒபீசியலா மூன்று கட்சிகள். ஊரில் றோட்டில் எந்த ஓட்டப் போட்டி நடந்தாலும், லவுட் ஸ்பீக்கர் கட்டிய காரில் அறிவிப்பு முன்னால் போக, தானும் ஒரு நம்பரைக் குத்திக் கொண்டு ஓடி, றோட்டோரம் கழியறை வாளியோடு நின்று ஓடுவோருக்கு தண்ணி வார்க்கும் பெருந்தமிழ் மனங்களின் புண்ணியத்தில் குளிக்கும் மனநலம் குன்றிய நம் ஊர் தாடி ஐயன் மாதிரி, இம்முறையும் கலந்து கொண்டிருக்கும் சங்கரியரின் கூட்டணியைச் சேர்த்தால் நாலு. அதோட தலைவருக்கு சிலையெடுக்கிற திருமதி மண்ணெண்ணெய், தலைவர் இறக்கவில்லை, காணாமல் போட்டார் எண்டிற அங்கயனையும் சேர்த்தால் ஏழு! (இதுக்குள்ள ஈரோஸும் கேக்குதாம்! இணையத்தில கூட அசுமாத்தம் இல்லை, பிறகெங்க!) ஏகபிரதிநிதிகளான ஒரேயொரு புலிகள் போய், ஏகபிரதிநிதித்துவத்துக்கு உரிமை கோர ஏழு கட்சி. இதுவும் வளர்ச்சி தானே! முந்தியெண்டா, புலிக்கு எதிராக எழுதப் பயந்து புனைபெயரில் எழுதின காலம் போய், புலிக்கு ஆதரவாக எழுதுறவை கூட இண்டைக்கு புனைபெயரில எழுத அளவுக்கு நிலமை வந்திருக்கு. அதிலயும் சொந்தப் பெயரில ஒருமாதிரியும் கள்ளப் பெயரில புலிக்கு ஆதரவாயும் எழுதிறவை ஒரு பக்கம். புலிக்கு எதிராக எழுதின எங்களை எல்லாம் 'ஊருக்கு வா, கவனிக்கிறம்' எண்டவை எல்லாம் இண்டைக்கு 'இங்கை வைச்சு அடி விழுந்தாலும், கேட்க ஆளில்லை' என்ற பயத்தில புனைபெயரில எழுதுகினம். இதுவும் எங்களைப் பொறுத்தவரைக்கும் வளர்ச்சி. முகப்புத்தகத்தில் உங்களுடைய நண்பர்கள் விடும் பதிவுகளும், பின்னூட்டங்களும் உங்களுடைய தரப்புக்குத் தான் வெற்றி என்று உங்களைப் புல்லரிக்க வைத்திருக்கும். அந்த மகிழ்ச்சிக்குள் கடுப்பேற்ற மற்றப் பக்கத்தினர் வந்து எதையாவது போட்டு உங்களை மனம் உளையப் பண்ணியிருப்பார்கள். தேர்தல் நெருங்க நெருங்க, உங்களுக்கு உள்ளூர, நீங்கள் ஆதரிக்கிற கட்சி கவிழ்ந்து விடுமோ என்ற பயம் வேறு பீடித்திருக்கும். இதற்குள், முள்ளிவாய்க்கால் முடிந்த கையோடு இணையங்களுக்கு அறிக்கை விட்ட புதுசா முளைச்ச 'புலனாய்வுத் தளபதிகள்' மாதிரி, முன்பின் தெரியாதவர்கள் எழுதும் கடிதங்கள் எல்லாம் இணைய ஊடகங்களில் முன்னுரிமைப்படுகின்றன. முந்தி இப்படித் தான் ஆயுதம் ஏந்தியவர்கள் அனுப்பும் கடிதங்களை வீரகேசரி பிரசுரிக்கப் போக, அதை சீரியஸாக எடுத்து சிங்களத் தரப்பு கூக்குரலிட, அமிர்தலிங்கம் அதை 'புலியின் பிராண்டல்' என்று பாராளுமன்றத்தில் வர்ணித்திருந்தார். பல்கலைக்கழக மாணவர்கள், புலன்பெயர் பிரதிநிதிகள் எல்லாம், முன்னாள் நீதவான் விக்னேஸ்வரன் மாதிரி இல்லாமல், தெளிவாக ஆரை ஆதரியுங்கோ எண்டு விளம்பரம் போடுகினம். பிறகு தங்களுக்கு சம்பந்தமில்லை எண்டு மறுப்பறிக்கை விடுகினம். அனந்தி அக்கா கதையும் அதே. உங்கட ஊடகப்போராளி எலக்சன் அண்டு என்ன கண்ணி வெடி வைக்கப் போறாரோ தெரியேலை. சுமந்திரனுக்கும், கஜேந்திரனுக்கும் ரணிலும், மகிந்தவும் காசு குடுக்கினம் எண்டெல்லாம் மொட்டை அறிக்கைகள் வருகுது. கடைசி நேரத்தில் இப்பிடிச் செய்தால் சனம் நம்பும் என்ற நினைப்பு. முந்தி ஒருக்கா இப்படித் தான் இஸ்ரேல் தேர்தல் அண்டு காலமை ஒரு பஸ்ஸிற்கு குண்டு வைச்சாங்கள். தீர்வு தாறம் எண்டு நிண்ட சீமோன் பெரஸ்க்கு இருந்த ஆதரவு போய், தீவிரவாதம் பேசுற நெத்தனியாகு வந்து சேர்ந்தார். அதுமாதிரி, கடைசி நேரத்தில சனம் மனதை மாத்தும் எண்டு உங்க கனக்க ஜில்மால் விளையாட்டு எல்லாம் நடக்கும். எங்கட தமிழ்ச் சனத்தை மொக்குச் சனங்கள் எண்டு நம்பி, நீங்கள் எல்லாம் நடத்திற விளையாட்டைப் பாக்கச் சிரிப்பாக் கிடக்கு. அதிலயும் ஊரில கம்பியூட்டருக்கும் இணையத்துக்கும் வழியில்லாத சனங்கள் எல்லாம் உங்கட முகப்புத்தக பிரசாரத்தை நம்பும் என்ற எண்ணத்தில 'மக்களே, சிந்தியுங்கள்', 'துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்கள்' என்றெல்லாம் நித்திரை முழிச்சு ஸ்டேட்டஸ் போடுறதைப் பாக்கச் சிரிப்பாக் கிடக்கு. மலிவாக் கிடைச்ச செல்போனை வைச்சு முகப்புத்தகம் பாக்கிற சனம் உங்கள நம்பிறது இருக்கட்டும். இந்தச் சனம் ஆனானப்பட்ட புலிக்கே வேலையைக் குடுத்த சனம். சுதுமலையில 'இந்தியாவை நம்பி ஆயுதங்களை ஒப்படைக்கிறோம்' எண்டு சொல்லேக்கை கை தட்டி, சந்திரிகா யாழ்ப்பாணத்தை பிடிக்க வரேக்கை, கட்டாயமாய் வெளியேற்றிய புலிக்கு தடி குடுத்திட்டு திரும்பி ஆமிக்காரன் கட்டுப்பாட்டுக்க வந்திருந்து, ஆமிக்கு உள்ளேயிருந்தும், புலிக்கு வெளியே இருந்தும் ஆதரவு வழங்கின சனம். தனக்கு எது நல்லது எண்டு அதுக்குத் தெரியும். நீங்கள் உங்களைப் போல அது ஒரு மந்தைக் கூட்டம் எண்டும், அதுக்கு அரசியல் அறிவு வழங்க வேண்டியது உங்கட வரலாற்றுக் கடமை எண்டும் நினைச்சுக் கொண்டிருக்கிறியள். இண்டைக்கு நாளைக்கு தேர்தல் முடிந்து விடும். முகப்புத்தகத்தில் எங்களின் கருத்துக் கணிப்புப்படி, ஈழவிடுதலைக்கு தற்போதைய தடையாக இருப்பது சுமந்திரன் என்பதும் அதை வென்றெடுக்க கஜேந்திரகுமார் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதும் பெரும்பான்மையோரின் விருப்பமாக இருக்கிறது. அதிலும் கஜேந்திரகுமார் வெல்ல வேண்டும் என்பதை விட, சுமந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் உங்களுக்கு உள்ள கொள்கை உறுதி... அப்பப்பா! எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்று தங்களுடைய மூக்கை அறுத்துக் கொள்ளும் தமிழ்ப் பாரம்பரியத்தில் சுத்த தமிழனுக்கும் தமிழச்சிக்கும் பிள்ளைகளாகப் பிறந்து சுத்த தமிழ் இரத்தம் ஓடும் உணர்வாளர்கள் அல்லவா நீங்கள்! * * * இப்போதும் சங்கரியரை நம்பி முன்பின் தெரியாத வேட்பாளர்களின் படங்களைப் போட்டு, வாக்களியுங்கள் என்று கேட்கும் சிறுபான்மையாக இருந்தால்... பாவம்... நீங்கள்! நல்ல காலம், முகப்புத்தகத்தில் ஸ்டேட்டஸ் போட பணம் தேவையில்லை. முன்பு போல, பசைவாளியும் நோட்டீஸும் தான் என்றால், அதற்கு உங்களுக்கு கட்சி நிதி இருந்திருக்காது. 'எங்கட உதயசூரியனுக்கு விளம்பரம் தேவையில்லை, சனம் அதைப் பாத்தவுடன வோட்டுப் போடும்' என்று கனவு கண்டிருந்திருப்பீர்கள். இவ்வளவு நாளும் கடிதம் எழுதின சங்கரி ஐயா ஏன் தமிழ் மக்களுக்கு கடிதம் எழுதேலை எண்டது விளங்கேலை? கொழும்பில நிக்கிறபடியால் தேவையில்லை எண்டு நினைச்சிட்டாரோ? அவற்ரை கட்சியில வடக்கில நிக்கினம் தானே! சுனாமிக்குள் அகப்பட்ட கிழுவந்தடி போல, தேர்தலில நீங்கள் நிக்கிற விசயமே ஒருத்தருக்கும் தெரியாது. சரி, தேர்தல் முடிந்த பின்னால், சங்கரி ஐயா பத்திரிகையில் விளம்பரம் போட்டு, வேட்புமனுவுக்கு ஆள் சேர்த்ததும், கட்சியில் கணக்குக் கேட்கக் கூடாது என்று சொன்னதும் என வந்த குற்றச்சாட்டுகளை கவனத்தில் எடுத்து சுயவிமர்சனம் செய்தால்... வேண்டாம், சுயவிமர்சனம் எண்டவுடன, இடதுசாரியள் அது தங்கட எண்டு சண்டைக்கு வந்திடுவினம். சங்கரி ஐயாவின் அடையாளம் தவிர, கட்சிக்குள்ள அடையாளம் உள்ள ஆரும் எங்கட நினைவில இல்லை. அவருக்குப் பிறகு கட்சியின் நிலை என்ன எண்டது உங்களுக்குக் கவலையாயிருக்கும். உங்களுக்கு கிடைக்கிற வாக்குகளைக் கூட்டிக் கழிச்சு, உங்கட வாக்கு வங்கிக் கணக்கைப் பார்த்து, கணக்கை மூடுவது பற்றி யோசிக்கலாம். அல்லது பேசாமல் தமிழ்த் தேசிய நீரோட்டத்தில் ஞானஸ்நானம் பெறலாம். அங்க உங்களுக்கு மதிப்புக் கிடைக்குமோ தெரியாது. ஆனால், சித்தார்த்தன், பிரேமச்சந்திரன், செல்வம் எல்லாம் பாவம் கழுவுப்பட்ட மாதிரி உங்கட பாவங்களும் கழுவுப்படலாம். இவையளைத் துரோகிகள் எண்டு சொன்னவை தான் இண்டைக்கு இவர்களுக்கு எல்லாம் வாக்களியுங்கோ எண்டு முண்டியடிக்கினம். அதுமாதிரி உங்களுக்கும் நடக்கும். ஆனால், மரியாதை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறது கொஞ்சம் டூ மச்! * * * திருமதி மண்ணெண்ணெயாருக்கு வாக்களியுங்கோ என்று யாரும் குதித்ததைக் காணவில்லை. அவரது ஊர் பிரமுகரே, தனது வன்னியில் இருக்கும் உறவுகளை கூட்டமைப்புக்கு வாக்களிக்கச் சொல்கிறார். ஊர்மான உணர்வும், தேர்தல் அமைப்பும் மீண்டும் அம்மையாரின் கதிரைக்கு ஆபத்து வராமல் பண்ணலாம். வெண்டால் அமைச்சர் பதவி. தோத்தால் தொடர்ந்தும் மண்ணெண்ணெய் விக்கலாம் தானே! அவவின்ரை கட்சி தானே ஆட்சி அமைக்கப் போகுது! தமிழச்சி பாராளுமன்றம் போறதில தமிழுணர்வாளர்களுக்குப் பெருமை தானே. அதுவும் ஆட்சியில இருக்கிற அரசாங்கத்தில அமைச்சரா இருந்தா, உங்கட தொப்புள் கொடி உறவுகளுக்கு வேலைகளுக்கும் பிசினசுக்கும் உதவும். அதுவும் அவவின்ரை ஊர் எண்டால் விசேட கழிவு தானே! அங்கயனின் பணம் பாதாளம் வரையும் பாயுது. இணையத்துக்குள்ளயும் அங்கங்கே ஏதோ குரல் கேக்குது. மாகாண சபையோடு அதிகாரக் கனவு முடியலாம். தேசியத்தலைவரின் தீர்க்கதரிசனம் அந்தளவு! தமிழன் தலைவிதி! இப்படியானவர்கள் எல்லாம் அரசியலில் நுழைய வைத்திருக்கிறது! அதைவிடக் கேவலம், இவர்கள் எல்லாம் தங்கட பாட்டில, எந்த துரோகிப் பட்டமும் இல்லாமல் சுதந்திரமாய் வோட்டுக் கேக்க, தமிழ்த் தேசியத்துக்கு எண்டு துள்ளிக் குதிக்கிறவர்களை துரோகி எண்டிறதில நீங்கள் படுகிற சந்தோசம்... செல்வநாயகம் சொன்னது சரி, தமிழரைக் கடவுள் தான் காப்பாற்ற வேணும்... தமிழரிட்டை இருந்து! * * * ஈ.பி.டி.பிக்கு முகப்புத்தகத்தில் பெரும் ஆதரவு. அதிலும் மித்திரன், தினத்தந்தி  ரேஞ்ச் ஊடகங்களில் அது அதிகம். (அது அவர்களுடையது தான் என்கிறார்கள், சில முகப்புத்தகர்கள்!) தங்களுக்கான வாக்கு வங்கியைத் தவிர, தமிழ்த் தேசியத் கோட்டைக்குள் ஊடறுத்து நுழைவது கஷ்டம். அதிலும் துரோகிகள் என்ற முத்திரை, மகிந்தவுக்கான ஆதரவு, புலிகளோடு ஒட்டிக் கொண்டிருந்த சமூக விரோதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது என்ற கருத்து எல்லாம் இவர்களுக்குத் தடையாக இருக்கும். அந்த வாக்கு வங்கியில் ஓரிரு ஆசனங்கள். இவர்களிடம் நன்மைகள் பெற்றோரும், இவர்களின் முகத்திற்கு முன்னால் ஆதரிப்பதாக சொல்பவர்கள் வாக்களித்தாலும், இவர்களுக்கு அதிகமாய் வாக்குகள் கிடைக்கலாம். இவர்களுக்கு ஆசனங்களே கிடைக்காமல் போனால், தமிழுணர்வாளர்கள் பிறவிப் பெரும் பயன் அடைந்த மகிழ்வில் குதிப்பார்கள். ஆனால் சிதறிய தமிழ்த் தேசியத்தின் வாக்குகளால் சில நேரம் அதிர்ச்சிகளும் காத்திருக்கலாம். * * * சரி, தமிழ்த் தேசியத்தை குரங்கு அப்பம் பிட்ட மாதிரி பங்கு போட முயற்சிக்கும் கூட்டத்திற்கு வருவோம். வித்தி தலைமையிலான போராளிகள்... அதற்குக் கிடைக்கும் முகப்புத்தக ஆதரவைப் பார்த்தால், (கிட்டத்தட்ட பூச்சியம்!), புலியின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் சவப்பெட்டி அரசியலுக்கு இறுதி ஆணியாக இந்த தேர்தல் இருக்கலாம்! குதிரைக்கூட்டமைப்புக்கு புலன் பெயர்ந்தவர்கள் என்ன தான் துள்ளிக் குதித்தாலும், தமிழரசுக் கூட்டமைப்பின் வீடு தான் தமிழனின் கடைசித் தஞ்சம். கஜேந்திரன் வென்றால், சினிமா நடிகைகள், சுப்பர் சிங்கர்கள் ரேஞ்சில் புலன் பெயர்ந்தவர்கள் கூடித் திருவிழா நடத்தி, அவரைக் கூப்பிட்டு சாமி தூக்குவார்கள். (கனடாவுக்கு விசா கிடையாது!). அவர்களுக்கு அது பெரு வெற்றி. அத்தோடு தமிழரசுக் கூட்டமைப்பின் ஏகபிரதிநிதி உரிமை கோரலுக்கு பலத்த அடியாக இருக்கும். தோற்றால், பெரிய பிரச்சனை இருக்காது. அவர் கொழும்புக்கு போய் விடுவார். அடுத்த தேர்தல் வரை ஆளைக் காணக் கிடைக்காது. (ஏதோ வென்றால், திரும்பி வந்து மக்களைச் சந்திப்பார் என்பது மாதிரி!) பிறகென்ன, கூட்டமைப்புத் தான். ஆயுதம் தூக்காத தமிழரசு, வாய்ச்சவடால் இளைஞர் பேரவை மாவை, துரோகிகள் எனப்பட்ட மாற்றியக்கங்கள் என்பன சேர்ந்து, உத்தியோகபூர்வ புலிகளை கவனமாகத் தவிர்த்த கூழாம்பாணி அமைப்பு அது. தேசியத் தலைவரின் சீரிய சிந்தனையில் உதித்த முத்து அது. புலன் பெயர்ந்த புத்திசீவிகளின் இறுதிப் புகலிடம். ஈழக் கோரிக்கையில் கூட்டணி கொம்பு சீவி விட்ட புலிகள், வளர்த்து விட்ட கூட்டணித் தலைவர்களின் மார்பில் பாய்ந்து குத்தி குதறி, முள்ளிவாய்க்காலில் துன்பியல் சம்பவமாகி, பழையபடி ஒரு சுழற்சி முடித்து, அறுபதுகளில் தந்தை செல்வா தூக்கிப் பிடித்த சமஷ்டியை றிசைக்கிள் பண்ணியபடி! இதைப் பெற்றுத் தருவோம் என்று சொல்லும் அயோக்கியர்களை விட, பெற்றுத் தருவார்கள் என்று நம்பும் கேனயர்களை என்ன சொல்ல? * * * சரி, இதெல்லாம் இருக்கட்டும்! நீங்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவாகவும் இருந்து விட்டுப் போங்கள். இந்த தேர்தலில் உங்கள் ஆதரவுக் கட்சி வெல்ல வேண்டும் என்பதை விட, நீங்கள் எதிர்க்கும் கட்சி தோற்க வேண்டும் என்பதில் உங்களுக்கு அதிக அக்கறை இருக்கும். அதற்காக உங்கள் கட்சி மூக்குடைபட்டாலும் உங்களுக்கு பிரச்சனை இருக்காது. எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்பது முக்கியம். உங்கள் கட்சி தோற்றிருந்தால்... தேர்தல் முடிவு வந்ததும், வென்றவர்கள் உங்களைக் கேலி செய்து அவமானப்படுத்தப் போகிறார்களே என்று துக்கம் உங்களை ஆட்கொள்ளும். கருணாநிதி போல, சூடு, சுரணை, தன்மானம், முதுகு எலும்பு இல்லாத தமிழா, எங்களுக்குத் தந்த தண்டனை போதாதா என்று, தொப்புள் கொடி உறவுகளைத் திட்டுவீர்கள். தமிழ் மக்களை இனிமேல் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று குமுறுவீர்கள். இருந்தாலும் எங்களுக்கு இத்தனை சீட்டுகள், வாக்குகள் கிடைத்தது தானே என்று உங்களைத் தேற்றிக் கொள்வீர்கள். வென்றவர்கள் எப்படி தங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றப் போகிறார்கள், இவர்களை எல்லாம் நம்பி வாக்குப் போட்டார்களே என்று புலம்புவீர்கள். உங்கள் ஆளைத் தெரிவு செய்தால் தீர்வு அடுத்த கிழமையே வந்திருக்குமே, இப்படி சீரழிஞ்சு போச்சே தமிழினம் என்று திரும்பவும் தலையில் கை வைப்பீர்கள். கவலை வேண்டாம், உங்கள் எதிர்த்தரப்புக்கு வாக்களித்தவர்களே இன்னும் கொஞ்ச நாளில் தங்களால் தெரிவு செய்யப்பட்டவர்களையே திட்ட ஆரம்பிப்பார்கள். துரோகிகள் என்று நாமம் சூடுவார்கள். சூடு சுரணையில்லாமல் அவர்களுக்கு வோட்டுப் போட்டோமே என்ற உண்மையை மறைத்து! சரி, நீங்கள் வாக்களித்த கூட்டம் வென்று விட்டதா? மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க நினைப்பீர்கள். ஆனாலும் உங்கள் வெற்றியில் மண் அள்ளிப் போட, உங்களுக்கு வேண்டப்படாதவர்களும் எதிரணியில் தெரிவாகியிருப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்தபடிக்கு ஏகபிரதிநிதித்துவத்திற்கான அங்கீகாரம் கிடைத்திருக்காது. இருந்தாலும், உங்கள் ஆள் 'மோட்டுச்' சிங்களப் பேரினவாதத்திற்கு மணியாக வேலையைக் குடுத்து, இந்தியாவுக்கு வெட்டி ஓடி, சர்வதேசத்தைப் பிடிச்சு தேசம் அல்லது சமஷ்டியை வாங்கித் தரப் போகிறார் என்று என்று பெருமகிழ்ச்சியாகத் தான் இருக்கும். ஆனாலும் ரொம்பவும் துள்ளாதீங்க. நீங்க தேர்ந்தெடுத்தவர் அடுத்த தேர்தல் வரைக்கும் யாழ்ப்பாணம் போகவே மாட்டார். சில நேரம் உங்களிடம் பறந்து வர, நீங்கள் திறந்து பிடிப்பீர்கள்... உங்கள் உள்ளத்தையும், மணிப் பர்ஸையும் தான்! கொஞ்ச நாளில் உண்மை ஓடி வெளிக்கும். அவரால் எதையும் பிடுங்க முடியாது என்பது. கொஞ்ச நாளில் அவருக்கு வோட்டுப் போட்ட முட்டாள்தனத்தை மறந்து, துரோகி என்று இந்த வல்லவர்கள் எல்லாம் பல்லவி பாடி, கட்சி மாறத் தயாராகுவீர்கள். கொஞ்ச நாளில் இந்த சந்தடி, அமளியெல்லாம் அடங்க, வழமை போல, மாவீரர் தினம், சுப்பர் சிங்கர் களியாட்டங்களுக்கு உங்கள் நேரம் போகும். அடுத்த தேர்தல் இனி வர கொஞ்ச நாள் செல்லும். ஆகவே, பெரிசாய் துள்ளிக் குதிக்காமல், அடக்கியே வாசியுங்கள்! தேர்தல் வரும், போகும்! ஆனால், தமிழனுக்கு விடுதலை வராது... உங்களைப்போல அறிவுக் கொழுந்துகள் அரசியல் பேசும் வரைக்கும்!

    Postad



    You must be logged in to post a comment Login