Recent Comments

    இணக்க அரசியலும் பிணக்க அரசியலும்

    Election

    பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி

    81ம் ஆண்டு ஜே.ஆரின் வாக்குறுதியை நம்பி, தமிழர் கூட்டணி போட்டியிட்ட மாவட்ட சபைத் தேர்தலின் போது கந்தர்மடத்தில் வாக்குச்சாவடியில் நின்ற இராணுவத்தினரைப் புலிகள் சுட்டதில் இருந்து, தமிழ்ப் பிரதேசங்களில் மட்டுமல்ல, தமிழர்கள் புலன் பெயர்ந்த நாடுகளிலும் தேர்தல் என்பது இன்று வரைக்கும் ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக இல்லாமல் ஒரு கேலிக்கூத்தாகவே இருந்து வருகிறது. அதற்கு முன்னால் ஏதோ ஜனநாயகம் பெரிதாக வாழ்ந்ததென்றும் இல்லை. அதுவரை நாள் ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு அப்புக்காத்து ஐயாமாரின் வழிநடத்தலில், அல்லது பின்னால், துப்பாக்கி ஏந்திய தம்பியின் வழிகாட்டலில் வோட்டுப் போட்டார்கள். அல்லது பகிஷ்கரித்தார்கள். அவ்வளவு தான் இவர்களின் ஜனநாயகம்! இந்தக் கூட்டத்தின் அறிவின் பெருமையை மெச்சித் தான் புலிகளும் தேர்தல் என்று வந்தால், தாங்கள் படுகொலை செய்தே அழித்த கூட்டணியின் உதயசூரியன் சின்னம் வேண்டும் என்று சங்கரியோடு சண்டைக்குப் போய், கடைசியில் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தோடு செட்டிலாகினர். 'போடு புள்ளடி வீட்டுக்கு நேரே' என்று போர் முரசம் இட்ட சமூகம் அல்லவா! ஆயுதம் தூக்கிய புலி போராட்டம் நடத்தினாலும், அரசியல், தேர்தல் என்று வந்தால், கடைசியில் வீடு தான் பேறு! இதன் தொடர்ச்சி தான் வெளிநாடுகளிலும், உலகத்திற்கு காட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடு கடந்த அரசு, கனடியத் தேர்தல்கள் என்பவற்றில் எல்லாம் கள்ள வோட்டுப் போட வைத்தது. (பிறகு பழக்க தோசத்தில் சுப்பர் சிங்கருக்கும்!) தங்களுக்கு ஜனநாயக தேர்தல் முறையில் நம்பிக்கையில்லாத ஒரு சமூகம், சகல சுத்துமாத்து வழிகளிலும் தங்கள் வெற்றியை உறுதி செய்து, அந்த தேர்தல் முறையை மற்றவர்களைச் சுத்துவதற்கான ஆதாரமாக இன்று வரை பயன்படுத்துவது தான் மிகப் பெரும் நகைச்சுவை! (கிட்டத்தட்ட இவர்கள் எழுதும் அகதிக் கோரிக்கைக் கதை மாதிரித் தான்!) அதிலும் இதுவரை நாள், தலைவருக்கு எல்லாம் தெரியும், சர்வதேசம் தலையிடத் தேவையில்லை என்று எச்சரித்து, கடைசியில் 22 நாடுகள் சேர்ந்து சதி செய்து விட்டன என்று புலம்பும் இவர்கள் அதே 22 நாடுகளுக்கு தாங்கள் ஒற்றுமையாக உள்ளோம் என்று காட்டுவதற்காக இந்த தேர்தல்களைப் பயன்படுத்த செய்யும் பகீரதப் பிரயத்தனங்கள் சொல்லி மாளாது. * * * புலிகள் எழுச்சிக் கொண்ட காலத்தில், போராட்டத்தை பின்னடையச் செய்ய விடக்கூடாது என்றோ, அல்லது மண்டையில் போடப்படலாம் என்று பயந்தோ, தமிழர்கள் தங்கள் அடிப்படை மனித, ஜனநாயக உரிமைகளை தேசியத் தலைவரின் காலடியில் ஒப்படைத்தார்கள். தங்களுடைய ஜனநாயக உரிமைகளை இழந்தது மட்டுமல்லாமல், ஜனநாயக ரீதியாக தங்களால் தெரிவு செய்யப்பட்டவர்களையும் புலிகள் போட்டுத் தள்ளிய போது, 'தேசியத் தலைவருக்கு அரோகரா, துரோகிகளுக்கு கோவிந்தா' கோஷத்தோடு எல்லாரும் தமிழீழத் திருவிழாவுக்கு போகும் ட்ராக்டரில் ஏறிக் கொண்டார்கள். அப்போதெல்லாம் பாராளுமன்ற ஜனநாயகம் என்பது தோல்வியுற்றதும், வேண்டத் தகாததும் ஆக்கப்பட்டு, 'அடுத்த பொங்கலுக்கு ஈழப் பிரகடனமாம்' என்று கிளப்பப்பட்ட புரளிகளை நம்பி, 'அடிச்சுப் பறிச்சு' 'மலரப் போகும்' தமிழீழத்தில் தேசியத் தலைவர் நல்லாட்சியில் ஜனநாயக உரிமைகளுக்கே தேவையில்லாமல் போகும் என்று, பட்டுத்துகிலுக்கு ஆசைப்பட்டு, கடைசியில் கோவணமும் பறிபோன பின்னால், 'ஆயுதங்களை மெளனிக்கச் செய்வதாக' மிகவும் பெருந்தன்மையுடன் தமிழ் மக்களின் ஜனநாயக வாக்குரிமை மீளளிப்புச் செய்யப்பட்டதில் இருந்து, ஆயுதங்களின் மேல் (ஆயுததாரிகள் மேலும்!) காதல் கொண்டிருந்த மனநோயாளிகள் எல்லாம், அவற்றை அம்போ என்று தவிக்க விட்டு, பாராளுமன்ற ஜனநாயகத்தின் மேல் தீராக் காதல் கொண்டுள்ளனர். இந்தப் பாராளுமன்ற ஜனநாயகம் என்ற ஒன்றின் மேல் மையல் கொண்டோரில் புலிகளால் வேட்டையாடப்பட்ட அமைப்புகளில் இருந்தவர்களையும் உள்ளடக்கி, துப்பாக்கி முனையில் திருமண பந்தத்தில் இணைக்கப்பட்ட, 'பொங்காத' தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதல் அவர்களுடன் தமிழ்த்தேசியத்திற்கான பாகப்பரிவினை வேலிச் சண்டைக்கு ரெடியான 'பொங்குதமிழ்' கூட்டமைப்பு வரை, 'சிங்களப் பேரினவாத' ஐ.தே.கவுக்கு தலையும் தமிழ்த் தேசியத்திற்கு வாலும் காட்டும் திருமதி மண்ணெண்ணெயார் முதல் 'பக்கத்து வீட்டுக்காரருக்கும்' புலிகளுக்கும் பாலமாய் இருந்த வித்தியாதரன் தலைமையில் சேர்ந்திருக்கும் முன்னாள் போராளிகள் வரைக்கும், ஜனநாயக நீரோட்டத்தில் சங்கமித்து ஞானஸ்நானம் பெற்றும், தமிழர்கள் கண்ணில் பாவம் கழுவப்படாதவர்கள் முதல் அரசியல் படுகொலைகளின் ஆரம்பப் பலிகளாக இருந்த சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் வரைக்கும், திறந்த கடிதம் எழுதியே களைத்து, இப்போது எழுதுவதற்கு ஆளே இல்லாமல், கொழும்பில் தேர்தலில் நிற்கும் சங்கரி முதல் தமிழீழத்தின் ஆஸ்தான விதூஷகரான சிவாஜிலிங்கம் வரைக்கும் அடக்கம். ஆக மொத்தத்தில் ஏகபிரதிநிதிகள் போய், ஏகப்பட்ட பிரதிநிதிகள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். இது போதாதென்று, மிரட்டலுக்குப் பயந்து பணம் கொடுத்து, கடை பூட்டி, ஆயுதப் போராட்டம் தான் முடிவென்று, கொடி பிடித்து கோஷம் போட்டு, தேசியத் தலைவர் திரும்பவும் வந்திறங்கி அருள் பாலிக்கும் வரை போராட்டத்தைக் கையில் எடுத்து, அவரது பாதுகைகளை வைத்துக் கொண்டு, தேர்தலில் நிற்காவிட்டாலும், அங்கு தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சக்தி தங்களுக்குத் தான் உண்டென்ற மிதப்பில் திரியும் புலன் பெயர்ந்தவர்கள் ஒரு பக்கம். இந்தத் தேர்தலில் எப்படியாவது தங்கள் ஆதரவு வேட்பாளரை பாராளுமன்றம் அனுப்பி, தமிழீழத்தை பெற்று விட வேண்டும் என்ற துடிப்பில் புலன் பெயர்ந்தவர்கள் வேறுவேறு குழுக்களின் பின்னால் அணி திரண்டிருக்கிறார்கள். தங்களை கிங்மேக்கர்களாகக் கற்பனை செய்து, தங்களைப் பற்றிய அதீதமான மதிப்பீடுகளுடனும் கனவுகளுடனும் வலம் வரும் இவர்களைப் பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை. பணத்தைக் கொடுத்து வேட்பாளர்களை வாங்க முடியும், வாக்காளர்களை வாங்க முடியாது என்ற உண்மை இவர்களுக்கு இன்னமும் புரியவில்லை. பாவம், பாராளுமன்ற ஜனநாயகம், திரௌபதி மாதிரி இவர்கள் எல்லோரையும் குஷிப்படுத்த படும் அவலத்திற்கு, ஒவ்வொரு இரவுக்கும் கட்டணம் அறவிடுவது லாபகரமாய் இருக்கும் போலிருக்கிறது. * * * சிங்களப் பேரினவாதம் முள்ளிவாய்க்காலில் தமிழ்த்தேசியத்தின் 'உச்சந்தலையில் ஆப்பாக இறக்கப்பட்ட' 'துன்பியல் சம்பவத்திற்குப்' பின்னால் பல தேர்தல்கள் நடந்தேறியிருக்கின்றன. ஒவ்வொரு தேர்தலிலும் 'சர்வதேசம்' தன்னுடைய வேலை வெட்டிகளை ஒருபுறம் வைத்து விட்டு, இந்தத் தேர்தல்களை 'உன்னிப்பாக அவதானிப்பதால்' சர்வதேசத்திற்கு எங்கள் ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என்று கதை விடுவதும், பாராளுமன்றம் போய் தமிழ் ஈழத்தையும், மாநில சுயாட்சியையும் சமஷ்டி அரசையும்  இந்தியா, சர்வதேச உதவியுடன் வென்றெடுப்பதுமாக தமிழர் தரப்பு முழக்கமிடும். இதற்குள் தமிழர்களுக்கு இந்த நாட்டில் உரிமையில்லை என்று சொன்ன சரத் பொன்சேகா முதல் இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன வரைக்கும் வாக்களிக்க வேண்டும் என்று வேறு இந்த தமிழ்த் தரப்பு தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தும். மகிந்த 'யதார்த்தவாதி' என்பதால், வாக்களிக்காமல் பகிஷ்கரித்த தமிழ் மக்களும் 'சொன்னபடி செய்யும் சுப்பர்களாக' சுப்பராக வாக்களித்து, இலங்கையின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் நாணயக் கயிறு தம் கையில் இருப்பதாக புல்லரிப்பர். ஒவ்வொரு தேர்தல்களிலும் முக்கியும் முனகியும் கயிறிழுப்புப் போட்டி நடத்தியவர்கள் தேர்தல் முடிந்ததும் தன் தன் வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள், அடுத்த தேர்தல் வரைக்கும்! புலன் பெயர்ந்தவர்கள் வாங்கிக் கட்டிய காயங்களை நக்கி ஆற்றுவதற்காக ஓய்வெடுப்பார்கள். ஆனால் வாக்களித்த தமிழ் மக்களோ, சுத்திச் சுத்திச் சுப்பற்ரை கொல்லை மாதிரி, நம்ம தலைவிதியும் இவ்வளவு தான் என்று தங்கள் நாளாந்த வாழ்வைக் கொண்டு நடத்துவதற்கான அவலத்தில் மூழ்கிப் போவார்கள். * * * 33 நாடுகளில் தமிழன் வாழ்ந்தும் தமிழனுக்கு நாடில்லை, எங்களைத் தேர்தலில் தெரிவு செய்யுங்கள், தமிழீழம் பெற்றுத் தருவோம், ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள வேண்டும், பழம் பழுத்தால் வெளவால் வரும் என்று சொன்ன தமிழர் விடுதலைக் கூட்டணி 77ல் கலந்து கொண்ட தேர்தலுக்கும் இத்தனை ஆண்டுகள் கழித்து கூட்டமைப்பு சர்வதேச, இந்திய உதவியுடன் உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்று சொல்லும் இந்தத் தேர்தலுக்குமான சுற்றில், ஈழம் கிடைத்ததோ இல்லையோ, 33க்கும் மேலான நாடுகளில் தமிழர்கள் அகதிகளாக இருக்கிறார்கள். அந்தந்த நாட்டு தேர்தல் ஜனநாயகத்தில் தாங்கள் பிரமுகர்களாவதற்கு, இந்த இளிச்சவாய் தமிழர்களின் முதுகில் சவாரி செய்ய பல பேர், தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இளிச்சவாயர்களும், இலங்கைப் பாராளுமன்றத்தில் இல்லாவிட்டால் என்ன, கனடிய பாராளுமன்றத்திற்கு சென்று ஈழம் பெற்றுத் தருவார்கள் என்று 'தமிழன் தமிழனுக்கு (இந்த முறை தமிழச்சிக்கு இல்லையாம்!) வாக்களிக்க வேண்டும்' என்ற இனமான உணர்வு மிகுந்து, ஒரே தொகுதியில் வேட்பாளராக நிற்கும் தமிழர்களில் யாரைத் தெரிவு செய்வது என்று இரு தலைக் கொள்ளி எறும்புகளாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கும் யாராவது இவர்களுக்கு வந்து 'யாருக்கு வாக்களிக்க வேண்டும்' என்று சொல்லிக் கொடுத்தால் தான் உண்டு! * * * வழமை போல, இந்தத் தேர்தலிலும் தமிழ் மக்களின் 'ஒரே நம்பிக்கை நட்சத்திரங்கள்' பல களத்தில் குதித்திருக்கின்றன. சூரிய(தேவ)ன் போய் இப்போது நட்சத்திரங்களில் வந்து முடிந்திருக்கிறது. இதில் எவருக்குமே தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான சரியான வேலைத் திட்டம் எதையும் முன் வைக்க முடியவில்லை. இந்தியா, சர்வதேசம் எல்லாவற்றையும் தங்கள் சாதுரியத்தால் வென்று தீர்வைக் கொண்டு வரப் போவதாக கூட்டமைப்பு சொல்வது எத்தனையாவது தடவை என்று எண்ணுக் கணக்கு வைக்க முடியவில்லை. அதே போல, வெறும் வெற்று வீராப்புக் கோஷங்களுடன் பாராளுமன்றம் போய் தமிழ் மக்களின் உரிமைகளை மட்டுமல்ல, ஈழத்தைப் பெறப் போவதாகக் கூறுபவர்களின் எண்ணிக்கைக்கும் அளவில்லை. சிங்களவர்களே பெரும்பான்மையாக உள்ள இலங்கையின் பாராளுமன்ற அமைப்பு முறையில், இத்தனை பெரும்பான்மை இருந்தும் மகிந்தவை ஊழலுக்காக சிறையில் அடைக்க முடியாமல், அவர் மீண்டெழுவதற்கு எடுக்கும் முயற்சியைத் தடுக்க முடியாதவர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில், இவர்கள் எப்படி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கப் போகிறார்கள் என்பது இவர்களுக்கே தெரியாவிட்டாலும், அதை நம்புவதற்கு ஆளிருக்கிறது (புலன் பெயர்ந்த நாடுகளிலாவது!) என்ற துணிச்சல் அவர்களுக்கு நிறைய உண்டு. ஈரூடகப் படை, விமானப்படை என்றெல்லாம் வைத்திருந்து, காற்றுப் புகாத இடங்களுக்குள் கூட நுழைந்து சாகசம் காட்டி, இராணுவத்திற்கும் சிங்கள அரசியல் தலைமைகளுக்கும் 'சிம்மத்திற்கே சொப்பனமாய்' உயிர்ப் பயத்துடன் வாழ வைத்த ஒரு அமைப்பினால் சாதிக்க முடியாததை, தாங்கள் சாதிக்கப் போவதாக இவர்கள் சொல்வது, கேட்பவர்கள் எல்லாருமே கேனயர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் தானே. * * * இந்தத் தேர்தலில் இலங்கை வாழ் தமிழ் மக்களின் கருத்துக்கள் என்ன என்பதை அறிய விரும்புவோர், முகப்புத்தகத்திலும் இணையத்திலும் வானலைகளிலும் வெளியீடுகளிலும் புழுத்துப் போயிருக்கும் ஊடகவியலாளர்கள் நீட்டி முழக்குவதை மட்டுமே வாசித்தால், இவற்றை பிரசாரங்களுக்காகப் பயன்படுத்துவோர் அவிழ்த்து விடும் பொய்களை விசுவாசிப்பவர்களாகவே இருப்பார்கள். இணைய வெளியில் வரும் கருத்துக்கள் எல்லாமே, புலன் பெயர்ந்தவர்கள் மிகுந்த, சத்தம் போடும் சிறுபான்மை, (vocal minority) சொல்லும் கருத்துக்கள் தான். மெளனப் பெரும்பான்மை (Silent majority) என்ன நினைக்கிறது என்பது தேர்தல் நாளில் மட்டுமே தெரியும். இங்குள்ளது போல, கருத்துக் கணிப்புகள் அங்கு பரவலாக இல்லை. அப்படி கருத்துக் கணிப்பு என்றாலும் அடுத்தவனுக்கு உண்மையைச் சொல்லாமல், ஊரோடி ஒத்தோடுவதாக வெளியில் காட்டிக் கொண்டு, வாக்குச்சாவடியின் தனியறைக்குள் அடுத்தவர்களுக்குத் தெரியாமல் மட்டுமே தங்கள் கருத்துக்களை துணிவாகப் போடத் தெரிந்தவர்கள் தமிழர்கள். முறைப்பாட்டுப் பெட்டிக்குள் முறைப்பாடு போடப் போய் பச்சை மட்டை அடி வாங்கிய அனுபவமாக இருக்கலாம். வெளியே சொல்லப் போய் மின்கம்பங்களில் தொங்கியவர்கள் காட்டிய வழி காட்டலாக இருக்கலாம். வீடு தேடி வருகின்ற எல்லா வேட்பாளருக்குமே நாங்கள் உங்களோடு தான் என்று உள்ளம் குளிர வைத்து, 'உவரை நல்லா சுத்தியிட்டன்' என்று சுய இன்பம் கொள்ளும் வித்தையை நீண்ட காலமாகவே கற்றுத் தேர்ந்தவர்கள் ஈழத்தமிழர்கள். அந்தப் பொய்யை நம்பி மனக்கோட்டை கட்டியவர்கள் எத்தனை பேர்? மொக்கங்கடை கொத்து ரொட்டியும் சம்பளமும் வாங்கி குமார் பொன்னம்பலத்திற்கு 77ல் பிரசாரம் செய்தவர்களைத் தெரியும். மாட்டின் வீட்டில் வந்து ஆயிரக்கணக்கில் சாப்பிட்டு, பத்துக் கணக்கில் வோட் போட்டவர்கள் தமிழர்கள். குமார் பொன்னம்பலம் சத்தியம் வாங்கி, சேலைகளும் கொடுத்து, 'நாங்களும் ஈழம் தான்' என்று சொல்லியும், கொடுத்த சேலைகளை விட, விழுந்த வோட்டுகள் குறைவு என்பது சொல்லியா தெரிய வேண்டும்? பின்னால், குமார் பொன்னம்பலம் தமிழ்த்தேசியத்தின் குரலாக (தேசத்தில் குரல் அல்ல!) வந்து முடிந்து, இப்போது மைந்தன் தேர்தலுக்காக யாழ்ப்பாணம் வந்திறங்கியிருக்கிறார். சேலைக்கும் மொக்கங் கடைச் சாப்பாட்டுக்கும் சொந்தப் பணத்தைச் செலவிடப் பயமாக இருந்தாலும், வாரியிறைக்க ரெடியாக ஒரு புலன் பெயர்ந்த கூட்டம் இருக்கிறது. தமிழ்நாட்டில் கை நீட்டி வாங்கிய பணத்துக்கும், சேலைக்கும், டிவிக்கும் துரோகம் இழைக்காமல், வாக்களித்து அரசுகளை மாற்றும் தமிழனுக்கு இருக்கக் கூடிய அடிப்படை நேர்மை கூட தமிழீழத் தமிழர்களிடம் இருந்ததில்லை. துரோகிகள் என்று சொல்லிக் கொண்டே, வேலைவாய்ப்புக்கும் இராணுவத்திடம் அகப்பட்ட பிள்ளைகளை எடுக்கவும் அரசாங்கத்துடன் சேர்ந்தவர்களிடம் தவம் கிடந்து உதவி பெற தலையையும், தேர்தல் வரும் போது தமிழ்த் தேசியத்திற்கு வாலையும் காட்டும் வித்தை தெரிந்தவர்கள் இவர்கள். தமிழினத்தின் அவலநிலைக்குக் காரணமான ஐ.தே.கட்சியைத் திட்டிக் கொண்டே, அந்தக் கட்சியில் தேர்தலில் நிற்பவர்களுக்கு வாக்களிக்கும் அளவுக்கு ஊர் உணர்வு மிகுந்தவர்கள் இவர்கள். * * * இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஆரூடம் சொல்வது ஒன்றும் சிக்கலானது இல்லை. தேர்தல் முறை தந்த வசதியால் ஊர்காரர்களின் வாக்குகளில் திருமதி மண்ணெண்ணையார் திரும்பவும் பாராளுமன்றம் செல்வதில் பிரச்சனை இருக்காது. ஐ.தே.க அரசில் தமிழர்களுக்கு உரிமை பெற்றுத் தருவார் என்று மற்ற தமிழர்கள் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் குறைவு. அரசாங்கத்தில் இருக்கும் போது செய்யாதவற்றை, இந்த அரசு செய்யாதது பற்றிக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும் ஈபிடிபியும் தனக்கான வாக்கு வங்கி மூலம் ஓரிரு ஆசனங்களைப் பிடிக்கலாம். இரண்டு தரப்பினருமே தங்கள் ஆதரவு அரசாங்கத்தில் மந்திரிப் பதவிகளைப் பெறுவதற்கு முன் நிற்பார்கள். இங்கே தங்களது பெயர்களும் சரித்திரத்தில் இடம் பெற வேண்டும் என்று தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் போன்று அங்குள்ள இடதுசாரிகளின் பெயரும் பட்டியலில் இருக்கும். அவர்களுக்கான வாக்குகளும் அதிதீவிர ஆதரவாளர்களினதாகவே இருக்குமே ஒழிய, ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அதிகமானதாகவும் இருக்காது. தமிழர்கள் இடதுசாரிகளுக்கு வாக்களிப்பார்கள் என்பது வெறும் கனவே. தங்கள் வாழ்வையே சமூகத்திற்காக தொலைத்தவர்களையும், போராட்டத்திற்கு அர்ப்பணித்தவர்களையும் இடதுசாரிகள் என்ற ஒரே காரணத்திற்காக தூக்கி எறிந்த சமூகம் இது. அதிகம் எதிர்பார்க்காதீர்கள்! * * * ஆனால் உண்மையான போட்டி பாராளுமன்றக் கதிரைகளுக்கானதல்ல, தேசியத் தலைவர் உட்கார்ந்திருந்த கதிரைக்கானதே. தமிழ்த் தேசியத்திற்கான வாக்குகளுக்கு ஏகபிரதிநிதிகளாக யார் உரிமை கோருவது என்பது தான் பிரச்சனையே. அதற்கான மும்முனைப் போட்டி பங்குபிரிப்புத் தான் இந்தத் தேர்தலின் கிளைமாக்ஸ். இந்தக் குடும்பக் குத்துவெட்டுத் தான் தமிழ்த் தேசியத்திற்கு ஏகபிரதிநிதித்துவம் கோருவோர் தங்களுக்குள் முட்டி மோதுதலாக உருவெடுத்திருக்கிறது. முகப்புத்தகத்தில் பெரும் பிரசன்னத்தைக் கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் அணி தங்களது ஒரே எதிரியாக கூட்டமைப்பைத் தான் வரித்துக் கொண்டிருக்கிறது. வித்தியாதரன் அணியின் அசுமாத்தம் எதுவும் முகப்புத்தகத்தில் கண்டதில்லை. அனந்தி எழிலனுக்கு கிடைத்த விருப்பு வாக்குகள் புலிகளுக்கானது என்று நம்பி, வித்தியாதரன் தலைமையில் முன்னாள் போராளிகள் கட்சியமைத்து, புலன் பெயர்ந்தவர்களின் இனமான உணர்வையும், பணபலத்தை நம்பி களமிறங்கியிருந்தாலும், அவர்கள் மண் கவ்வப் போவது நிச்சயம். பாராளுமன்ற அரசியலை நிராகரித்தது மட்டுமன்றி, அந்த அரசியல் முறையில் நம்பிக்கை கொண்டவர்களை கொலை செய்வதை அரசியலாக்கிய அமைப்பிலிருந்து வந்து இன்று இலங்கை அரசியலமைப்புக்கு சத்தியப் பிரமாணம் செய்து பாராளுமன்றம் செல்வது ஒரு கேலிக் கூத்தாக இல்லையா? அரசியலை விட, ஆயுதங்களை நம்பியவர்களிடம் அரசியலை தமிழர்கள் ஒப்படைப்பார்களா? இதில் முன்னாள் போராளிகள் ஆயுதம் தாங்கியவர்கள் என்பதற்காக, முன்பின் தெரியாதவர்களுக்கு எல்லாம் வாக்களிக்கக் கூடியவர்கள் இல்லை இந்தத் தமிழர்கள். அனந்திக்காவது எழிலனின் நிழல் இருந்தது. இவர்களுக்கு எதுவும் இல்லை. கஜேந்திரகுமார் தலைமையிலான அணி ஏற்கனவே மண் கவ்விய அணி. பொங்குதமிழ் உணர்வலையில் குதிரையோடலாம் என்ற நினைப்பில் இறங்கியிருக்கிறார்கள். சென்ற தடவை இவர்களின் வாய்ச்சவடால்களில் புல்லரித்துப் போய், புழுதி கிளப்புவார்கள் என்று நம்பி இந்தக் குதிரைகள் மேல் பணம் கட்டிய புலன் பெயர்ந்தவர்கள் கடந்த தேர்தலில் இவர்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டு கட்சி தாவி விட்டார்கள். இந்த உண்மைகளை அறியாத இன்னொரு கூட்டம் இந்தக் குதிரைகள் மீது கட்ட இங்கே பணம் சேர்க்கிறது. சுமந்திரனும் சம்பந்தனும் துரோகி என்று புலன் பெயர்ந்தவர்கள் கொடும்பாவி எரித்தாலும், கடைசியில் இவர்கள் கூட்டமைப்புக்குத் தான் வாக்களிப்பார்கள். 'எண்டாலும், படிச்சவங்கள் அல்லே' என்றும், 'பிரச்சாரப் பீரங்கி' பிரேமச்சந்திரன் போன்ற புதிதாய் தோன்றிய 'வால்' (நம்பிக்கை) நட்சத்திரங்கள் 'வாயால் வெட்டி வீழ்த்தி' ஈழம் பெறுவார்கள் என்ற கனவும் வழமை போல 'போடு புள்ளடி வீட்டுக்கு நேரே' தான். தேர்தல் முடிந்ததும் வழமை போல, எலியின் முதுகில் மலையைச் சுமக்க வைக்க முயன்ற தங்களின் முட்டாள்தனம் பற்றிய வெட்கமின்றி, தாங்கள் தெரிவு செய்தவர்களால் தாங்கள் எதிர்பார்த்ததைச் செய்ய முடியாமல் போனதும், எந்த வித கூச்சமும் இன்றி துரோகம் இழைத்து விட்டார்கள் என்ற பல்லவியைத் தொடங்குவார்கள். இது சேர்.பொன்.இராமநாதன் காலத்தில் தொடங்கியது. அங்கயன் இராமநாதன் காலத்திலும் தொடரும். * * * நடக்கும் ஒவ்வொரு தேர்தலும் தமிழினத்தின் அரசியல் நிர்வாணத்தை அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இன்று வரைக்கும் எங்கள் சமூகத்திற்கு தலைமை தாங்க வருவோரில் கறை படியாத கரங்கள் கொண்ட நேர்மையாளன் என்று ஒருவரைக் கூட அடையாளம் காட்ட முடியாத அளவில் தான் எங்கள் சமூகம் இருக்கிறது. கிட்டத்தட்ட இதில் உள்ள எல்லாருமே ஏதோ ஒரு தரப்பினரால் துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டவர்களே. ஆயுதம் தாங்கிய புலிகள் மேல் வைத்த அதே கண்மூடித் தனமான நம்பிக்கையை இன்று எதையுமே சாதிக்க முடியாத, கையாலாகாதவர்கள் மீது வைத்து, அவர்கள் தீர்வைக் கொண்டு வருவார்கள் என்ற எதிர்பார்ப்போடு இருப்பதை என்னவென்பது? இதில் இன்னமும் நம்ப முடியாமல் உள்ள விடயம், வெறும் வாய்ச்சவடால்களை நம்புவதற்கு இன்னமும் ஆள் இருப்பது தான். குறிப்பாக புலன் பெயர்ந்த தமிழர்களில் பலர், ஈழ அரசியலில் வீராவேசப் பேச்சு பேசுவோர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை ஆச்சரியம் தரும் ஒன்று. அவர்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள், அவர்கள் வாயால் வெட்டி வீழ்த்தும் அளவுக்கு காரியம் சாதிக்கக் கூடிய அளவுக்கு திறமையுள்ளவர்களா என்ற கேள்விகள் இல்லாமல், சிங்கள அரசுக்கு சவால் விடுகின்றவர்கள் ஹீரோக்களாகப் பார்க்கப்படும் மன நிலையைப் பார்க்கும் போது, கூட்டணிக் கூட்டங்களில், கரகோஷம் பெறுவதற்காக, அங்கே நின்ற பொலிஸ்காரரைப் பார்த்து, 'இந்த சிங்கள அடக்குமுறை அரசின் ஏவல் நாய்' என்று வீரப் பேச்சுப் பேசிய தமிழரசுக் கட்சியின் மாவை, காசி, வண்ணை என்ற வெத்துவேட்டுப் பிரசாரப் பீரங்கிகளின் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அவர்களின் வீராவேசப் பேச்சுகளை நம்பிப் போய், ஏமாந்து தான் ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட்டதாகத் தானே வரலாறு எழுதுகிறார்கள்? இத்தனை அழிவுக்கும் பின்னரும், அதே பழைய சுற்றில் இன்னொரு பயணம்! ஆயுதங்களால் சாதிக்கப் போய், 'மெளனிக்கச் செய்ய வேண்டி வந்த' நிலையையும் மறந்து, இன்னமும் இன்னொரு போராட்டம் நடக்கும் என்ற கனவுடன் புலன் பெயர்ந்தவர்கள் பலர் இருப்பதால் தான், இந்த வாய்ச்சவடால் வீரர்களுக்கு மவுசு ஏற்பட்டிருக்கிறது. சமூகம் தனது தோல்வியிலிருந்து பாடங்களை இன்னமும் கற்றுக் கொள்ளாமல், இன்னமும் இதே போராட்டக் கனவுடன் இருப்பதற்கான காரணம், இந்த வெத்துவேட்டு வீரர்களும் அவர்கள் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களும் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, யாரோ பெற்ற பிள்ளைகளை பலிக் களத்திற்கு அனுப்பலாம் என்று நம்பிக்கை கொண்டிருப்பது தான். இணக்க அரசியலை ஈபிடிபி மட்டுமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசினாலும் துரோகமாக்கப்படும் நிலை புலன் பெயர்ந்தவர்கள் மத்தியிலும், ஈழத்தில் இளைய தலைமுறையினர் மத்தியிலும் காணப்படும் நிலை தெரிகிறது. பிணக்க அரசியல் ஆயுதப் போராட்ட மட்டத்தில் இருந்தே தோல்வியடைந்த நிலையில், இடியப்பச் சிக்கலான இலங்கையின் பாராளுமன்ற அரசியலில் எவ்வளவு சாத்தியம் என்பதை நினைத்துப் பார்க்காமல், 'அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரண தேவி' என்று வீரப்பா வசனம் பேசுபவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பலி கொடுக்கத் தயாரா என்ற கேள்விக்குப் பதில் சொல்லத் தயாராக இருக்க வேண்டும். வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட மாகாண சபை அமுலாக்கப்பட்ட போதும், ஒஸ்லோ உடன்படிக்கையின் போதும், வலிய வந்த சீதேவிகளைத் தட்டிக் கழித்து, 'விட்டால் குடுமி, சிரைத்தால் மொட்டை' என்று போய் இன்று எதைக் கண்டோம்? இன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலையில், அதிலும் மேற்குலகுடன் நட்பாக உள்ள ஐ.தே.க மீண்டும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறக் கூடிய சந்தர்ப்பத்தில், விட்டுக் கொடுத்தல்களுடன், நடைமுறைச்சாத்தியமான தீர்வுகளைத் தேடுவது புத்திசாலித்தனமானது. அந்த நடைமுறைச் சாத்தியமான விடயத்திற்குள் தான் தமிழீழக் கோரிக்கை, யுத்தக் குற்ற விசாரணை எல்லாமே கைவிடப் படுகின்றன. மகிந்தவைச் சிலுவையில் அறைய வேண்டும் என்று எவ்வளவு தான் துள்ளிக் குதித்தாலும், சிங்கள அரசியல்வாதிகளாலேயே அதைச் செய்ய முடியவில்லை. தமிழ்த் தேசியத்தின் இந்த வெற்றுக் கோஷங்கள் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வழங்கிய வாய்ப்புப் போல யாருக்கும் வழங்கவில்லை. எதையுமே சாதிக்காமல், வெற்றுக் கோஷங்களை எழுப்பிக் கொண்டும், வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கிக் கொண்டும் அரசியல் நடத்தும் வசதியை தமிழ்த் தேசியம் செய்து கொடுத்திருக்கிறது. பொருளாதார ரீதியான அழிவிலிருந்து விடுபட்டு இனம் தனது சொந்தக்காலில் நிற்பதற்கு பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற தேவை தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லை. இதனால் தான் தொகுதிவாரியாக அபிவிருத்திக்குச் செலவிடப்படும் பணத்தை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புகிறார்கள். குளத்தோடு கோபித்துக் கொண்டு, செய்ய வேண்டியதைச் செய்யாவிட்டால், பாதிப்பு தங்களுக்குத் தான் என்பதை உணராத இனம் இது. வெறும் உணர்வுகளுக்குத் தீனி போட்டு வாழ நினைக்கிறது. இந்தத் தேர்தல்களினாலோ, அவற்றில் தெரிவு செய்யப்படுபவர்களாலோ தமிழ் மக்களுக்கு எந்த விதமான விமோசனமும் கிடைக்கப் போவதில்லை. இந்தத் தேர்தல் முடிந்த பின்னால் இவர்களில் எத்தனை பேர் இந்த மக்களிடம் அடுத்த தேர்தல் வரை திரும்பிப் போவார்கள்? இவர்கள் யாழ்ப்பாணம் போவதை விட, கனடா, சுவிஸ் போகவே முன் நிற்பார்கள். இது தான் தமிழ் அரசியலின் தற்போதைய துயர் நிலை. * * * ஆனால், இந்தத் தேர்தலில் சில நல்ல விடயங்களும் நிகழக் கூடும். புலிகளை முதன்மைப்படுத்தி அரசியல் செய்யும் அமைப்புகள் மக்களால் முழுமையாக நிராகரிக்கப்படும் போது, படிப்படியாக மக்கள் ஆயுத மோகத்திலிருந்து விடுபட்டு, ஜனநாயக வழிகளில் உரிமைகளைப் பெறக் கூடிய வழிவகைகள் பற்றிச் சிந்திக்கக் கூடும். அவ்வாறான ஒரு நிலை ஏற்படின், புலிகளின் நினைப்பில் கனவு காணும் புலன் பெயர்ந்தவர்களின் ஆதிக்கமும் குறையலாம். விரும்புகிறோமா இல்லையோ, சாத்தியமோ இல்லையோ, ஜனநாயக வழிகள் தான் மிஞ்சியிருக்கிற கோவணத்தைக் காக்கக் கூடிய வழி. இதிலிருந்து பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி இனத்தை சொந்தக் காலில் நிற்க வைப்பதற்கான வழி. இன்றைக்கும் அரசியலுக்கு அள்ளி எறியத் தயாராக இருக்கும் புலன் பெயர்ந்தவர்களின் எத்தனை பேர், தமிழ்ப் பிரதேசங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு முதலிடத் தயாராக இருக்கிறார்கள்? அடுத்தது, தேர்தல்கள் எதைச் செய்யா விட்டாலும், குறைந்தது தமிழர்களுக்கு பல கட்சி அரசியலை அவர்கள் அறியாமலேயே ஊட்டி விட்டுக் கொண்டிருக்கிறது. மந்தைக் கூட்டமாக ஒரே தலைவனின் பின்னால் அணி திரள்வது தன் இனத்திற்கு செய்யும் கடமை என்றும், அதை மீறுவது துரோகம் என்று கற்பிக்கப்பட்ட நாற்பதாண்டு அரசியல் போய், பச்சை இனவாதக் கட்சியான ஜே.வி.பிக்கு கூட யாழ்ப்பாணத்தில் கிளை அமைக்கக் கூடிய நிலை வந்திருக்கிறது. போராட்ட ஆரம்பத்தின் முதற்படியாக சிங்கள அரசுடன் இணைந்து செயற்படுபவர்கள் துரோகிகளாக்கப்பட்டு, அவர்களுக்கு இயற்கை மரணம் இல்லை என்று பகிரங்கமாகவே அரசியல் மேடைகளில் பேசத் தொடங்கி, அது ஆயுதம் தாங்கியவர்களால் செயற்படுத்தப்பட்ட ஒரு மண்ணில், இன்று அரச ஆதரவுத் தமிழ்க் கட்சிகள் மட்டுமன்றி, அந்த சிங்கள பெரும்பான்மைக் கட்சிகளின் சார்பில் உயிர்ப் பயம் இன்றி தமிழர்களே போட்டியிடும் நிலை உருவாகியிருக்கிறது. இது தான் ஜனநாயகத்தின் வெற்றி. கால் நூற்றாண்டு எந்த விதமான அரசியல் தெரிவும் இன்றி, ஆயுதத்திற்கு பயந்து வாழ்ந்த இனம், இன்றைக்கு தெரிவு செய்யும் தலைவர்களை பிடிக்காவிட்டால், கொடும்பாவி எரிக்க மட்டுமல்ல, அடுத்த தேர்தலில் தூக்கி எறியவும் வழி செய்யப்பட்டிருக்கிறதே, அதுதான் தமிழினத்திற்கு கிடைத்த வெற்றி! இந்த உரிமைக்காகத் தான் இதுவரை காலமும் குரல் எழுப்பியிருக்கிறோம். அயோக்கியர்களோ, கொலைகாரர்களோ, தங்கள் தலைவர்களை மக்கள் ஜனநாயக ரீதியில் தெரிந்தெடுக்க வழி இருக்க வேண்டும். ஆயுதம் தாங்கிகளால் பறிக்கப்பட்ட அந்த உரிமை மீண்டும் மக்களுக்குக் கிடைத்த பெருவெற்றிதான் இன்று கொண்டாடப்பட வேண்டியது. மற்றும்படி, அனாவசியமாக இந்தக் குருவித் தலைவர்களின் தலையில் பனங்காய்களை வைக்காதீர்கள்!

    Postad



    You must be logged in to post a comment Login