Recent Comments

    மெதுமெதுவாக வாயைத் திறப்போம்!

    edit12ஜோர்ஜ் இ. குருஷ்சேவ்

    (செப்டம்பர் 2012ல் பூபாளம் இதழில் வெளியான ஏடு இட்டோர் இயல் இது. யுத்தம் முடிந்து இத்தனை நாளாகியும் எங்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இரை மீட்கும் போது சமிபாடடையலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் பிரசுரமாகிறது.) பெரியோர் வழி நட! ஊரோடு ஒத்தோடு! எமது சமூகத்தில் எங்களுக்கு சிறுவயதிலிருந்தே சொல்லித் தரப்படுபவை இவை. பெரியவர்கள் தங்கள் அனுபவங்களால் பெற்ற அறிவினால், வழிகாட்டுவதற்கு தகுதியானவர்கள் என்பதே எங்கள் சமூகத்தின் நிலைப்பாடு. அவர்களின் வழிகாட்டலை எந்தக் கேட்டுக் கேள்வியும் இன்றி விசுவசித்து அதன்படி ஒழுகுதல் என்பது சமூகக் கடமையாகவே கொள்ளப்படுகிறது. மறுபுறத்தில் ஊரோடு ஒத்தோடுவது என்பதே 'எல்லாரும் செய்வதால் அதில் ஏதோ விசயம் இருக்க வேண்டும்' என்ற உணர்வினால் ஆனதாக இருக்கலாம். அதைவிட, ஊர் செய்கின்ற ஒன்றுக்கு முரணாக நடந்தால், தங்களுக்கு கறுப்பு ஆடு என்று முத்திரை குத்தப்படும் என்ற பயத்தினாலும் இருக்கலாம். ஆனால், பெரியவர்களின் வழிகாட்டலின்படி தான் எங்கள் சமூகம் இதுவரை காலமும் நடந்திருந்தால், நாங்களும் கோவணாண்டிகளாக அம்பும் வில்லுடனும் தான் இருந்திருப்போம். அத்தோடு எந்தக் கேள்வியும் இன்றி, ஊரோடு ஒத்தோடுவது தான் எங்கள் பண்பாடு என்றால் நாங்கள் செம்மறிகளாகத் தான் இருக்க வேண்டும். எங்கள் சமூகம் சமூக விதிமுறைகளை யாரும் மீறுவதை ஏற்றுக் கொள்வதில்லை. இதனால், பலரும் 'எனக்கு ஏன் வீண் பிரச்சனை?' என்று மந்தைகள் போல, ஊரோடு ஒத்தோடுவது அனாவசியமான தொல்லைகளைத் தவிர்க்கும் என்ற எண்ணத்தில், வாயை மூடிக் கொண்டே ஊருக்குப் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். எங்கள் சமூகத்தில் பெரியோர்கள் முன்னால் எதற்குப் பின்னாலோ ஓடிக் கொண்டிருந்தார்கள். 'அவன் விசயம் தெரிஞ்சவன், ஏதோ விசயம் தெரிஞ்சு தானே ஓடுறான்' என்று நாங்களும் பின்னால் ஊரோடு ஒத்தோடிக் கொண்டிருந்தோம். விளைவு? இன்று மீள முடியாத அதல பாதாளத்தில் எல்லோரும், முழுத் தமிழினமும், வீழ்ந்து போயிருக்கிறோம். எமது சமூகம் குரூரமானது. எமது சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நம்பிக்கைகளை கேள்வி கேட்பவர்களை அது மன்னிப்பதில்லை. சாதி, சமயங்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்திய கம்யூனிஸ்டுகளையும் சரி, ஆயுதப் போராட்டத்துடன் கூடிய தமிழீழத்தை கேள்வி கேட்டவர்களையும் சரி, சமூகம் தீண்டத்தகாதவர்களாகத் தான் பார்த்திருக்கிறது. அரசியல் மட்டுமல்ல, சமூக மாற்றத்தை வேண்டியவர்களைக் கூட, ஏளனப் பார்வையுடன் தான் எமது சமூகம் பார்க்கிறது. சீதனம் வாங்க மாட்டேன் என்று ஒருவன் சீர்திருத்த நோக்கில் சொன்னாலும், 'உவருக்கு ஏதோ குறை போல' என்று வக்கிரபுத்தியுடன் சொல்வது தான் எங்கள் சமூகம். எங்கள் சமூகத்திற்காக நன்மை செய்ய யாராவது வந்தாலும் 'உவர் தனக்கு லாபம் இல்லாமல் உதைச் செய்யிறாரோ?' என்று சந்தேகம் கொள்வது தான் எங்கள் சமூகம். இங்கே எங்கள் சமூகம் செய்கின்ற மோசடிகளைப் பற்றிச் சொன்னாலேயே 'உவருக்கு என்ன பிரச்சனையாம்? தன்ரை காசையே தாறார்?' என்ற கேள்வி தான் எழும். இதனால், உண்மையான சமூக நோக்கம் கொண்டவர்கள் எல்லாம் விலகிப் போக... ஏமாற்றுக்காரர்கள் தான் இன்றைக்கு எங்கள் சமூகத்தில் கோலோச்சுகிறார்கள். எங்கள் சமூகம் இன்றைக்கு தனது இனத்தைப் பற்றிய கவலை இல்லாமல், வெறும் பாசாங்கு மட்டும் காட்டிக் கொண்டிருக்கிறது. எமது இனம் நன்றாகவே நடிக்கக் கற்றுக் கொண்டு விட்டது. இன்று கூட, ஒரு பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்கு எதிராக எதையும் சொல்ல முடியவில்லை. துரோகி, கைக்கூலி, காட்டிக் கொடுப்பவன், வளர்ப்புப் பிராணி என்ற பட்டங்கள் தொடக்கம் மரபணு மீதான சந்தேகம் வரையில்... வசைகளுக்கு ஆளாகாமல், எந்த மாறான கருத்தையும் சமூகத்தில் சொல்ல முடியவில்லை. விருப்பமோ, இல்லையோ, ஊரோடு ஒத்தோடித் தான் ஆக வேண்டும்! பெரியோர் வழி நடந்து தான் ஆக வேண்டும். ஊரோடு ஒத்தோடுவது என்பது ஒரு கால கட்டத்தில் மிகவும் கொடூரமாக அமுல்படுத்தப்பட்ட ஒன்று. ஓடாதவர்கள் கறுப்பு ஆடுகளாய் இனம் காணப்பட்டு, பலியிடப்பட்டார்கள். மற்ற ஆடுகள் பலியிடப்பட்டதைக் கண்டவர்கள் பலர் வாயை மூடிக் கொண்டார்கள். வேறு பலர், தாங்கள் பலியிடப்படாமல் இருக்க, நடிக்கத் தொடங்கினார்கள். நடிக்கத் தொடங்கியவர்கள் நல்ல பேர் வாங்க, புகழ்ந்து ஏத்தத் தொடங்கினார்கள். வாயைத் திறப்பது சாப்பிடவும், கொட்டாவி விடவும் மட்டும் தான்! தேவையென்றால் தேவனைத் துதிக்கவும், துரோகியைத் திட்டவும் திறக்கலாம். சமூகம் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்தை செய்வது பலவந்தமாக மறுக்கப்பட்டது. 'பெரியோர்' சொல்படி கேட்டு, ஊரோடு ஒத்தோடுவது என்பது உத்தியோகபூர்வமாக கடுமையாக அமுல்படுத்தப்பட்ட கொள்கையாகவே மாறி விட்டிருந்தது. யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகளாகி விட்டன. இன்னமும் யாரும் வாயைத் திறக்கிறார்கள் இல்லை. வாயைத் திறக்கவும் முடியவில்லை. வாயைத் திறப்பவனைச் சந்தேகத்துடன் பார்த்து, 'அரசாங்கம் பணம் கொடுக்காமல் வாயைத் திறந்திருப்பானோ?' என்று எவனாவது கிளப்பும் வதந்தியை நம்பும் அளவுக்குத் தான் எங்கள் சமூகம் இருக்கிறது. தமிழன் சொந்தமாக வாயைத் திறக்கும் அளவுக்கு சூடு சுரணை இல்லாதவன், இவனுக்கு வேறு யாரோ பணம் கொடுத்துத் தான் இவன் வாயைத் திறப்பான் என்கிற அளவுக்குத் தான் எங்கள் சமூகம் இருக்கிறது! 'வாயை மூடிக் கொண்டிரு, உனக்கு ஏன் தேவையில்லாத பிரச்சனை?' இதைத் தான் தாய்மாரும், மனைவிமாரும் இந்த மறத் தமிழர்களுக்குச் சொல்லி வீரப்பால் ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சமூகத்தின் அழிவிற்கான காரணங்களைப் பேசுவது கூட 'தேவையில்லாத பிரச்சனை' ஆகி விட்டது. எங்கள் பிள்ளைகள் எங்கள் கைகளிலிருந்து பறித்துச் செல்லப்பட்ட போது, கூக்குரலிட்டு அழக்கூட எங்களால் வாயைத் திறக்க முடியவில்லை. போர்க் களத்தில் பலியான எங்கள் பிள்ளைகளின் உடல்கள் வீடு வந்தபோது, கதறி அழவும் எங்களால் வாயைத் திறக்க முடியவில்லை. நாங்கள் வாயைத் திறக்காதன் காரணம், பால் மணம் மாறாப் பாலகன் கையில் வேலைக் கொடுத்து போர்க்களம் அனுப்பிய புறநானூற்று பாரம்பரியம் அல்ல, வாயைத் திறந்தால் வாய்க்குள் குண்டு போகலாம் என்ற பயம் மட்டும் தான்! 'எனக்கேன் தேவையில்லாத பிரச்சனை? தலை காக்க, நாமும் சேர்ந்து நடிப்போம்' பெரியோர் சொற்படி ஒழுக வேண்டியதன் கட்டாயம் எல்லோருக்கும் தெளிவாகப் புலப்படுத்தப்பட்டது. சமூகம் ஊரோடு ஒத்தோடியது. வாயைத் திறக்காமல், கண்ணை மூடிக் கொண்டே ஓடிப் போய் நந்திக்கடலில் விழுந்தது! பலர் தாங்கள் ஏதோ 'மரணத்துக்கு அஞ்சா மாவீரர்கள் போல' வாய் வீசிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஒன்றும் வாய்மூடிகள் இல்லை, அரசாங்கத்திற்கு எதிராக வாயைத் திறந்திருக்கிறோமே என்று வீரவசனம் பேசுகிறார்கள். இதைக் கேட்டதும் பழைய துணுக்கு ஞாபகம் வருகிறது. அமெரிக்கனும் ரஷ்யனும் சந்தித்த போது, அமெரிக்கன் சொன்னான், 'எங்கள் நாட்டில் சுதந்திரம் இருக்கிறது. நான் எங்கள் நாட்டு ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்னால் போய், 'எங்கள் ஜனாதிபதி ஒரு முட்டாள்' என்று திட்டலாம்.' ரஷ்யன் சொன்னானாம், 'உதென்ன பெரிய விசயம். எங்கள் நாட்டிலும் தான் சுதந்திரம் இருக்கிறது. எங்கள் நாட்டு ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்னால் போய் நின்று 'அமெரிக்க ஜனாதிபதி ஒரு முட்டாள்' என்று திட்டலாம்.' இன்றைக்கும் இது தான் நடக்கிறது. உலகில் எந்த மூலையில் இருந்தும் யாரும் மகிந்தவை கழுவில் ஏற்றுவதாக சபதம் செய்யலாம். இந்தியாவுக்கு சவால் விடலாம். நோர்வேயை மிரட்டலாம். ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடலாம். துரோகிகளுக்கு மரண தண்டனைத் தீர்ப்பும் வழங்கலாம். இது எந்த வடி கட்டின முட்டாளும் செய்யக் கூடியது தான். அதைத் தான் இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். செய்து முடிந்த பின்னால், வெள்ளைவான் கவலையின்றி ஊருக்கும் போய் வரலாம். ஆனால் மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக... பகிரங்கமாக, வாயே திறக்க மாட்டார்கள்! திறந்தால் துரோகி என்ற பட்டம் எந்த மூலையில் இருந்து வரும் என்று தெரியாத பயம். ஆனால் தனியே பேசும்போது மட்டும், மண்ணின் மைந்தர்கள் பற்றிக் கடுமையான விமர்சனம். வெளியில் சொல்லப் பயம். இதுதான் இந்த வாய்ச் சொல் வீரர்களின் இலட்சணம். ஒரு காலத்தில் ஊரோடு ஒத்தோடா விட்டால், ஊருக்கு வரும் போது கவனிக்கப்படும் என்ற எச்சரிக்கை எல்லோருக்குமே ஞாபகப்படுத்தப்பட்டது. பயத்தினால் பணத்தைக் கொடுத்தவரும் விடுதலைக்கு விரும்பிக் கொடுத்ததாய் நடித்தார். போராட்டத்திற்கு நானும் பணம் கொடுத்தேன் என்று வன்னியில் சோதனைத் தடை முகாமில் நெஞ்சை நிமிர்த்தினார். இன்றைக்கு, தான் இப்படி பனிக் குளிருக்குள் உழைத்து கொடுத்த பணத்திற்கு என்ன நடந்தது என்று கேள்வி...? வாயே திறக்க மாட்டார்! எனக்கேன் தேவையில்லாத வேலை? மற்றவை பேசாமல் இருக்கேக்கை எனக்கேன் வீண் பிரச்சனை? வாயை மூடிக் கொண்டு, பேசாமல் உன்ரை வேலையைப் பார் என்ற மறத்தமிழச்சிகளின் கொங்கைகளில் வீரப்பால் உண்ட மறவர்கள் தானே! மெளனம் தலை காக்கும்! ஆனால், ஆளுக்காள் பேசிக் கொண்டிருக்கும்போது மட்டும், பொருமல்கள் மற்றவர் காதுக்குக் கேட்காமல்! அடக்குமுறை அதிகாரங்கள் செய்வது இதைத் தான். அதிகாரம் தங்கியிருப்பது புலனாய்வுத் துறையில் மட்டும் தான். புலனாய்வுத் துறைக்கு எதிரியை விட, உள்ளே இருப்பவன் மீது தான் பயம் அதிகம். அதற்கு சரியான வழி, ஆளை ஆள் சந்தேகப்பட வைப்பது. யார் உண்மை பேசுவார்? எல்லோருமே நடிக்கப் பழகியே ஆக வேண்டும். இப்படி எத்தனை நாளைக்கு தொடரப் போகிறது இந்த நடிப்பு? யாருக்கு இப்போது பயப்படுகிறோம்? எந்த நிழலைப் பார்த்து இத்தனை பயம்? கடைசி வரையும் தான் கொண்ட நோக்கத்திற்காக நின்று உயிர் நீத்த தலைவனையும் உயிரைத் துச்சமாய் மதித்து இனத்திற்காய் போராடிய போராளிகளையும் காட்டிச் சேர்த்த பணத்தை விழுங்கி ஏப்பம் விட்ட கூட்டத்திற்கா இத்தனை பயம்? இதுவரை காலமும் பெரியோர்களின் வழி நடந்துதான் இந்த இழிநிலைக்கு வந்திருக்கிறோம். ஊரோடி ஒத்தோடித் தான் படுகுழிக்குள் விழுந்திருக்கிறோம். இந்த அழிவிலிருந்து மீண்டு வருவதாக இருந்தால் நாங்கள் வாயைத் திறக்கத் தொடங்க வேண்டும். கேள்விகளுக்கு அப்பாற்பட்ட தேவர்களும் இல்லை, புனிதர்களும் இல்லை. எல்லாரையும் எல்லாவற்றையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டும். பெரியோர்களின் வழிகளை புதியவர்கள் கேள்வி கேட்டதால் தான் உலகம் வளர்ந்தது. ஊரோடு ஒத்தோடாமல், வேறு பாதைகளை வகுத்தவர்களால் தான் உலகம் செழித்தது. எங்கள் முன்னால் உள்ள கேள்விகள் பல. மகிந்தவை 'யதார்த்தவாதி' என்று கூறி அரசு கட்டில் ஏற்றியது சரியா? கருணாவைத் துரோகி என்று பலம் இழந்தது சரியா? இந்தியாவைப் பகைத்துக் கொண்டு இறுதியில் கையறுந்தது சரியா? முழு உலகத்தையும் மதிக்காமல் திமிருடன் தனிமைப்பட்டு நின்றது சரியா? தோளோடு தோள் கொடுக்க சகோதரர்களை அழைக்காமல், மற்ற இயக்கங்களை அழித்தது சரியா? போராட்டத்தின் பெயரால் எங்களுக்குச் சொல்லப்பட்டவை எல்லாம் உண்மைகளா? எங்கள் இனத்தின் தலைவிதியையும் எதிர்காலத்தையும் ஒரு தனிமனிதனின் கையில் திணித்தது சரியா? இதெல்லாம் எங்கள் முன்னால் உள்ள கேள்விகளில் சில. இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இன்றைக்கு யாரும் இல்லை. பதில் சொல்ல ஆளில்லை என்பதால் கேள்விகளைக் கேட்பதை நிறுத்த வேண்டியதில்லை. எங்கள் தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால், நாங்கள் மனம் திறந்து பேச ஆரம்பிக்க வேண்டும். இதில் 'உப்படியெல்லாம் நடக்கும் என்று எங்களுக்கு எப்போதோ தெரியும்' என்று எங்கள் மேதாவித்தனத்தை மெச்சவும் தேவையில்லை. 'எங்களுக்கு உப்பிடியெல்லாம் நடந்தது என்று தெரியாது' என்ற பாசாங்கு காட்டி நடிக்கவும் தேவையில்லை. 'சரி, நடந்தது நடந்து விட்டது, ஆனால் இன்னொரு தடவை இப்படியொரு நிலைமை வர விடக் கூடாது. எனவே, என்ன பிழை நடந்தது என்பதை நாங்கள் அறிந்து கொண்டால் மட்டுமே, இன்னொரு தடவை அந்தப் பிழை நடக்காமல் பார்க்க முடியும்' இந்த எண்ணம் எங்கள் மனதில் வர வேண்டும். முன்பு தான், போராட்டம் நடக்கிறது, கேள்விகள் கேட்டால் போராட்டம் பின்னடையும் என்றெல்லாம் பெரியவர்கள் சொன்னார்கள். நாங்களும் ஊரோடு ஒத்தோடினோம். விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எங்கள் அடிப்படை மனித உரிமைகளை தாரை வார்த்தோம். இன்றைக்கு எதுவுமே இல்லை. இப்போது பேச என்ன தயக்கம்? எங்கள் சமூகம் இன்னொரு தடவை படுபாதாளத்தில் விழாமல் இருக்க வேண்டும் என்றால், எவருக்கும் பயமில்லாமல், நாங்கள் மெதுமெதுவாக வாயைத் திறக்க ஆரம்பிக்க வேண்டும்.

    Postad



    You must be logged in to post a comment Login