Recent Comments

    சீதனம்: தமிழ்க் கலாசாரத்தின் நஞ்சு

    அன்பு லிங்கன்

    தமிழர்கள் தமிழிகளைத்தான் திருமணத்துக்குத் தேடுவார்கள். இவர்களது திருமணத்தில் நிச்சயமாகக் காதல் இருக்காது, லாபமே இருக்கும். நிச்சயமாக தமிழ் ஆண்கள் கொள்ளும் காதல் பெண்ணில் இல்லை, சீதனத்தில். இந்த ஆண்களுக்கான காதலிகளைத் தேடுதல் பெற்றோரின் இலக்கும், வேட்டையும், வேட்கையுமாகும். எமது ஆண்கள், அப்பாவையும் அம்மாவையும் காதலுக்காக நம்பும் விச விருப்பு நிறைய உள்ளது. தமிழர் கலாசாரத்தைக் கொடூரமாகக் காட்டுவது சாதிப் பிரிவு, பின் சீதனம். இது எமது பெண்களை இப்போதும் அடிமைத்துவத்துள் வைத்துள்ளது. இந்த சூழலில் சங்க இலக்கியங்களையும், இந்த சூட்டை நக்கும் புத்திலக்கியங்களையும் வாசிக்கும் வேளையில் எமது இனத்தின் மீது அன்பு வருவதில்லை, வெறுப்புதான் வருகின்றது.

    தழிழர்கள் ஐரோப்பிய இனப் பெண்களை திருமணம் செய்வது குறைவு. இதனது காரணம் சீதனமே. எப்படி வெள்ளைக்காரியிடம் அதனைக் கேட்பது? அவள்களுள் உள்ள காதல் விசாக்களுக்காகவே.

    Facebook வந்ததில் இருந்து தமிழர் கலாசாரம் உலகின் முதல் கலாசாரம் எனும் பித்தலாட்டங்களை ஊடகவியல்வாதிகள் செய்தல் ஓர் தொழில்போல. முகப்புத்தகத்தில் ஒவ்வொருநாளும் நிறையக் கோவில்களைக் காணலாம். தேர் எப்படி ஓடுவது என்பதை புகலிடத்தின் பிந்திய பிறப்புகள் அறிந்து அந்தத் தேரினை எப்படி இழுப்பதை என்பதைத் தமது பெற்றோர்களால் தமிழ் மொழியிலும், புகலிட மொழிகளிலும் கற்கும். இந்தக் கல்வியாலேயே புகலிடத்தின் பிந்திய பிறப்புகள் தமது பெற்றோர்களின் மூளைகளைக் காப்பவர்களாக மாறும் விதை நடக்கின்றது. புகலிட நாடுகளில் பிறந்து, இந்த நாட்டின் மொழிகளைக் கற்ற புதிதுகளும் சீதனத்தைத் தியானம் செய்யும்போது தமிழ் கலாசாரத்தை விரும்புவதா அல்லது வெறுப்பதா?

    தமிழ் எந்த இடத்தில் வாழ்கின்றதோ அந்த இடத்தில் சீதனம் ஓர் உயரிய அரியாசனையில் இருத்தப்படும். இந்தக் கொடூர விதியினாலேயே புகலிட நாடுகளில் சீதனங்கள் பூத்துக்கொண்டுள்ளன. இந்தக் கொடிய பூக்களுக்கான எதிர்ப்புகளை நிறையப் பெண்ணிலைவாதிகளும், பெண்ணிலைவாதத்தை ஆதரிக்கும் சில ஆண்களும் செய்துகொண்டு உள்ளபோதும் சீதனம் எப்போதுமே அரியாசனையில் உள்ளது.

    தமிழ்வாழும் தேசங்களில் நிறையப் பெண்கள் பெரிய வயதுகளிலும் கன்னிகளாக, கண்ணீர்க் குளத்தில் வாழ்கின்றார்கள். இந்தப் பெண்கள் மீது முகப் பத்திரிகையாளர்கள் எழுதமாட்டார்கள். இவர்கள் நிச்சயமாக சீதனத்தால் தயாரிக்கப்பட்டவர்கள், இவர்களது அரண்மனைகள் கோவில்களே. முகப் புத்தகங்களின் பக்கங்களில் சீதனக் கொடுமையுள் வாழும் எமது அனைத்துச் சகோதரிகள் மீதும் வரிகளைக் காணமுடியாது, பழையன காத்தல் மீதான அபூர்வமான செய்திகள் வரும்.

    பழையன காக்கப்படுவன அல்ல, காக்கப்படுவன எமது சகோதரிகளே.

    எமது தமிழ்ப் பெண்கள் சீதனக் கொடுமையால் எவ்வாறு விசரிகளாக வருதல் என்பது இப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. இந்தக் கொடுமையை நடத்தும் சீதனக் கொடூரத்தை அடக்க எமது அரசியல்வாதிகள் ஒருபோதும் எழுச்சியைக் காட்டவில்லை. இலங்கையின் அரசுகள் இந்தக் கொடுமையை ஒருபோதும் ஒழிக்கத் துணியவில்லை. ஆனால் தரப்படுத்தலை நிறுவி தமிழ் நிலங்களில் ஆயுதப் போராடங்களைத் துவக்கியது. எமது ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஒருபோதும் சீதனம், சாதிக்கொடுமைகள் மீதான முடிவின் அரசியல் குறிப்புகளைத் தெளிவாக வைத்தனவல்ல.

    சீதனம் மீது ஓர் வரலாற்றுக் குறிப்பு இதுவல்ல, இது ஓர் வாழ்வுக் குறிப்பு. இது எங்கு இருந்து வந்தது என்பதைத் தவிர்த்து 40 வயதுக்கும் அப்பால் கன்னிகளாக வாழும் எங்கள் பெண்கள் ஒவ்வொரு தினமும் வாழும் கொடுமைகள் நிச்சயமாக வெளிப்படுத்தப்படவேண்டும். சீதனம் தர முடியாத நிலையில் உள்ள பெண்கள் சுடலைகளில் கன்னிகளாக எரியும் சூழலில் தமிழ் கலாசாரத்தை முத்தமிடக் கூடாது, இதனை எரிக்க வேண்டும்.

    ஆம்! சீதனக் கொடுமையால் இப்போதும் தமிழ் தேசங்களில் காதல் பூக்கள் எரிகின்றன. எமது ஆண்களில் நிறையப்பேர் “தேசவழமை"ச் சட்டத்தை நக்குபவர்களே. இவர்களது தர உயர்வு இவர்கள் கேட்கும் சீதனத்தையும் உயர்த்தும். இவர்கள் புகலிடம் போனாலும், தமது செலவில் படிக்கப்போனாலும் சீதனம் இவர்களது தெய்வமே.

    அண்மையில் எனது சகோதரி போன் செய்தாள்.

    “நாங்கள் ஒருவருக்கு உதவி செய்யவேண்டும்.”

    “என்ன உதவி?” என நான் கேட்டேன்.

    “எமது சின்னம்மாவின் கடைசி மகளுக்குத் திருமணம்.”

    “நல்ல சேதியே!”

    “ஆம்! அவளுக்கு 38 வயது! 6 லட்ஷம் சீதனம்… நாங்கள் உதவி செய்ய வேண்டும்.”

    நான் நடுங்கினேன். அந்தப் பெண்ணின் வாழ்வின் கொடுமையால். ஆம்! எமது குடும்பத்தின் பலரால் அவளது வாழ்வின் கொடுமையை அழிக்க உதவி செய்தல் எனும் முடிவு எடுக்கப்பட்டது.

    ஓர் பெண் அல்ல. இலட்சக்கணக்கான பெண்கள் எமது தேசங்களில் கன்னிகளாகவே வாழ்வது கொடுமை. இந்தக் கொடுமையின் காரணம் சீதனம். இதன் மீது இப்போது படைப்புகள் வருவதில்லை. ஆம்! எமது படைப்பாளிகளுக்குச் சீதனம் பழசு, புதியதில்லைப் போலும். சீதனம் இப்போதும் புதியது, பின் நவீனத்துவமானது.

    இந்தச் சூழலில் தமிழ் நிலத்தின் பெருமைகள் பேசுதல் வெறுக்கப்படவேண்டியவையே.

    (இந்தக் குறிப்பில் இடம்பெறும் படங்கள் http://pavithulikal.blogspot.fr/2011/09/blog-post_26.html எனும் இணையக் குறிப்பில் இருந்து தரப்படுகின்றன. பவிக்கு எனது இனிய நன்றிகள்)

    விக்கிபீடியா “யாழ்ப்பாணத்துச் சீதன முறை”   எனும் தலைப்பில் தரும்   கட்டுரை சீதனம் பெண்களுக்கே என்று கூறுகின்றது. அது தமிழர் நிலங்களில் இல்லை. சீதனம் நிச்சயமாக ஆண்களுக்கே. இது ஓர் புதிய தேச வழமைச் சட்டம்.

    Postad



    You must be logged in to post a comment Login