Recent Comments

    ஜனநாயகம் மலரட்டும்!

    Democracy(எங்கள் அரசியலில் இரண்டு முக்கிய விடயங்கள் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, இந்த முகப்புத்தகப் புலிவால்களின் தொல்லை தாங்காமல் வேறு எதையோ எழுதி மினக்கெட, 'அரசியல் வாடையே எனக்குப் பிடிக்காது' என்று அடம் பிடிக்கும் மக்கள் பேரவை வந்து தொலைத்திருக்கிறது. இரண்டு விடயங்களுமே இன்று பேரவை கொண்டிருக்கிற 'அரசியலால்' எழுந்தவை. எனவே கட்டாயம் அவற்றை எழுதியாக வேண்டும் போலிருக்கிறது. அதற்கு முன்னால் இரண்டு உரிமை மறுப்புகள். Disclaimers.
    1. கூட்டமைப்புக்கு ஆதரவு என்று யாரும் நினைக்கத் தேவையில்லை. சம்பந்தனோ, சுமந்திரனோ தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்றுத் தருவார்கள் என்று நம்பவும் இல்லை. இதை தேர்தல் காலத்தில் எழுதிய விடயங்களில் கண்டு கொள்ளலாம்.
    கடந்த தேர்தலில் கூட, புலிகளின் பிள்ளைபிடிகாரன் சிறீதரன் எப்படி அதிகப்படியான விருப்பு வாக்குகளால் வெல்ல முடிந்தது, சப்றா பினான்ஸ் மோசடி சரவணபவன் எப்படி பாராளுமன்றம் போக முடிந்தது, இந்த தமிழ் மக்கள் இவர்களை எல்லாம் எப்படித் தலைவர்களாக்க நினைத்தார்களோ என்று மயிரைப் பிடுங்காதிருக்க வசதியாக மொட்டையே அடிக்க வேண்டியிருந்தது. 2.  தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு அரசியல் கருத்துக்கள் சுதந்திரமாக உரையாடப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, அந்தக் கருத்துக்களை முன்னெடுக்கும் அரசியல், சமூக அமைப்புகள் உருவாக வேண்டும், அதன் மூலம் தான் எங்கள் இனம் ஜனநாயக வழியில் பயணம் செய்ய முடியும் என்பதிலும் நம்பிக்கை உண்டு. இவையும் தேர்தல் கால கட்டுரைகளில் எழுதப்பட்டிருக்கிறது. சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளாக அங்கஜனும், திருமதி மண்ணெண்ணெயும், பெயரே தெரியாத சிங்களக்கட்சிகளில் போட்டியிட்ட அடையாளம் தெரியாத தமிழர்களும் என பல்வேறு கட்சிகள் தேர்தலில் பங்கு பற்ற வேண்டும் என்பதும், தங்களை யார் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதை அங்கு வாழும் மக்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. எனவே புதிதாய் முளைத்த பேரவை குறித்த நமது கருத்துக்களை மேற்குறிப்பிட்ட கண்ணாடிகளுக்குள்ளால் பார்த்து, அவசரமும் உடனடியாகவும் சம்பந்தர் சார்பு முத்திரை குத்தும் வேலைகளுக்குப் போகாமல் இருப்பது நல்லது.) மேற்குலக ஜனநாயகத் தேர்தல் அரசியலில், வெற்றி பெறுவது என்பதை விட, தோல்வியை ஏற்றுக் கொள்ளுதல் (Conceding defeat) என்பது மிகவும் முக்கியமானதொன்று. (அப்ப, ஏகாதிபத்திய ஜனநாயகம் சரியெண்டிறீரோ என்ற விவாதம் தற்போதைக்கு வேண்டாம்!) தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு, கடைசி வாக்கு எண்ணப்படும் வரைக்கும் பொறுத்திருக்காமல், வாக்குகளின் போக்கைப் பார்த்து, தோல்வியடைந்தவர் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டு, வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துச் சொல்லுவார். தொலைக்காட்சிகளும் வெற்றி பெற்றவரின் உரையை கடைசியாக வைத்துக் கொண்டு, தோல்வி அடைந்தவர் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டு நிகழ்த்தும் உரையின் முடிவில் தான் வெற்றி பெற்றவரின் உரையை ஒளிபரப்பும். அரசாங்கத்தை நடத்துவதற்கு தாங்கள் வைத்திருந்த பாதையை மக்கள் தெரிவு செய்யவில்லை, மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம் என்று, தோற்றவர் தங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறுவார். தோற்றவர் பெரும்பாலும் தோல்விக்கு மற்றவர்களைக் குற்றம் சாட்டாமல், பொறுப்பை ஏற்று சில நேரம் பதவி விலகக் கூடும். அல்லது கட்சி அடுத்த தலைவரைத் தெரிவு செய்யும் வரை இருக்கப் போவதாகக் கூறக் கூடும். அல்லது கட்சிக்கு அவர் ஒருவரே தான் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தால், அவரே வேறுவழியின்றி தலைமையில் தொடர வேண்டியதாயும் இருக்கும். தோல்வி அடைந்த கட்சி தோல்விக்கான காரணங்களை ஆராய மாநாடுகள் கூட்டி, புதிய தலைவருக்கான போட்டி அறிவித்து, அவர்கள் விவாதம் புரிந்து, ஆதரவு தேடி, தேர்தல் வைத்து புதிய தலைவர்களைத் தெரிவு செய்வார்கள். முன்னர் ஒரு போதும் கேட்டறியாத புதியவர் திடீரென்று தலைவராகக் கூடும். அதுவரைக்கும் எதிர்க்கட்சி, ஆட்சியின் மீது குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் போக்கில் இருக்காது... தற்காலிகத் தலைவர் அடிக்கடி 'உள்ளேன், ஐயா' என்று பத்திரிகையாளர் மாநாடு நடத்துவது தவிர!
    •  • •

    ஒரு கால் நூற்றாண்டு மேற்குலக வாழ்வில், கண்ட தேர்தல்களில் ஜோர்ஜ் புஷ், அல் கோர் தேர்தலின் போது, வாக்குகள் எண்ணப்பட்டு, electoral college  முடிவுகள் அறிவிக்கப்படும் போது, அல் கோர் தோல்வியை ஒப்புக் கொண்டு புஷ்ஷிற்கு வாழ்த்துச் சொன்ன பின்னால், புளோரிடாவில் எண்ணிக்கையில் சிக்கல் வந்ததும், ஒப்புக் கொண்ட தோல்வியை மீளப் பெற்றார். பிறகு அதெல்லாம் உச்சநீதிமன்றம் வரை போன கூத்து தெரிந்ததே. இங்கே ஒன்ராறியோவில் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவரான பொப் ரேயின் திட்டங்களை விரும்பாத தொழிலாளர் சங்கங்கள் அவரது காலை வார, மிகவும் அடிப்படை பழைமைவாதியான மைக் ஹரிஸ் ஆட்சிக்கு வந்த போது, ஒன்டாரியோ மக்கள் தங்கள் தலையில் சேறு பூசியது குறித்து பொப் ரே விசனப்பட்டிருந்தார். அது தோல்வியினால் வந்த காழ்ப்புணர்வாக இல்லாமல், தீர்க்கதரிசனமாகவே இருந்தது. மைக் ஹரிஸ் ஆட்சியிலிருந்த இரண்டு தடவைகளும் ஆடிய ஆட்டத்திற்கு அந்த நினைப்பே வாக்காளர் மனதில் இருந்து, கன்சர்வேட்டிவ் கட்சியை இன்றைக்கும் ஆட்சிக்கு வர விடாமல் வைத்திருக்கிறது. ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தலில் கூத்தாடிகளான போர்ட் சகோதரர்களில் தம்பிக்கு புற்றுநோய் வர, தமையனார் போட்டியிட்டுத் தோல்வியுற்ற போது, உமிழ்ந்தது காழ்ப்புணர்ச்சி தான். பண்போடு தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், வாக்காளர்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தார். இவை தவிர்ந்த மற்ற நேரங்களில் எல்லாம் பண்போடு தோல்வியை ஒப்புக் கொண்டு பதவி விலகியிருக்கிறார்கள். இது ஒரு அரசியல் பாரம்பரியமாகவே இங்கே இருக்கிறது.
    •  • •

    நம்ம ஊரில் தலைவர்களுக்கு பஞ்சம். எனவே தோல்வியடைந்தாலும் தலைவர்கள் பதவி விலகத் தேவையில்லை. தோல்விக்கு வாக்காளர்களை எப்போதுமே திட்டிக் கொள்ளலாம், கருணாநிதியைப் போல! தமிழா, உனக்கு தன்மானம் இல்லையா, முதுகெலும்பு இல்லையா என தனக்கு வாக்களித்தவர்களுடன் சேர்த்து, ஒட்டுமொத்தத் தமிழனையும் திட்டலாம். எனக்கு தந்த தண்டனை போதாதா என்று குற்றத்தைக் கூடக் ஒப்புக் கொள்ளலாம். பதவியை விட்டுக் கொடுக்க வேண்டிய தேவையே இல்லை. பெரும்பாலும் கட்சிகள் குடும்பச் சொத்துக்கள். வயது போனால் வாரிசுகளுக்கு போய்ச் சேரும். தோல்வியை ஏற்றுக் கொள்வதும், வெற்றியை வாழ்த்துவதும், தோல்விக்கான காரணங்களை அறிந்து பாதையை மாற்றுவதும் நம்மவர்க்கு பழக்கமில்லாத ஒன்று.
    •  • •

    முப்பது வருடங்களாக துப்பாக்கிக்குப் பயந்து வாய் மூடிக் கொண்டிருந்தது எங்கள் இனம். ஜனநாயக அடிப்படையில் தேர்தலில் நின்றவர்கள், மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் எல்லாம் துப்பாக்கி ஏந்திய ஒரு மனநோயாளியால் கொல்லப்பட்டார்கள். அதற்கு முன்னால் எங்கள் சமூகத்தில் ஜனநாயகம் பொங்கி வழிந்தது என்றில்லை. இராமநாதன், பொன்னம்பலம் என்றெல்லாம் காலத்திற்கு காலம் துரோகிகள் என்று எள்ளி நகையாடப்பட்டவர்களே. ஆனால் நல்ல காலம், இவர்கள் துப்பாக்கி ஏந்தி மண்டையில் போடுவதைப் பற்றிச் சிந்திக்காததால், தேர்தல் மேடைகளோடு அந்த துரோகிப் பட்டம் சென்றதே தவிர, மின்கம்பங்களுக்கு upgrade பண்ணப்படவில்லை. பின்னால் உணர்ச்சிக் கவிஞர்கள் இந்தத் துரோகிகளுக்கு இயற்கை மரணமில்லை என்று கவிதை படித்தாலும், குரங்கின் கை தீக்குச்சி மாதிரி, ஒரு முட்டாள் கையில் துப்பாக்கி வரும் வரைக்கும் எல்லாமே நன்னாத் தான் போய்க்கிட்டிருந்தது. மக்கள் ஆட்சி என்பது போய் மக்கன் ஆட்சி வந்த பின்னால், தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், மண்டையில் போடுவதும், தற்கொலைப் போராளியை அனுப்பி சிதற வைப்பதும் அரசியல் ஆகிவிட்டது. இந்த அரசியலுக்கு, பயத்திலும் அல்லது அதனால் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்திலும் பலரும் அதற்கு கொடி தூக்கிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் எல்லாம் முடிந்து, திரும்பவும் மக்கள் தங்களை யார் தலைமை ஏற்று வழி நடத்த வேண்டும் என்பதை தாங்களே தெரிவு செய்ய வசதியாக ஜனநாயக வழி முறைகள் வந்து விட்டன. ஆனால் முப்பதாண்டு ஆயுத அரசியலில் நம்மவர்கள் ஜனநாயக அரசியலை மறந்து விட்டார்கள் போலத் தோன்றுகிறது.
    •  • •

    ஆயுத அரசியலின் எச்ச சொச்சங்களாக, புலி வாலில் தொங்கி, அதில் குளிர் காய நினைக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு, றிமோட் கொண்ட்ரோல் போராட்டம் நடத்த கனவு காணும் புலன் பெயர்ந்தவர்கள் உசுப்பேத்தி விட்டதன் பயனாக, கீரைக்கடைக்கும் எதிர்க்கடையாக கூட்டமைப்புக்கு ஒரு போட்டி வந்துதித்தது. முகப்புத்தகத்தில் கிளம்பிய புழுதியை மட்டுமே கணக்கிட்டிருந்தால், சைக்கிள்காரர்களுக்கு கிடைத்த மண்சரிவு வெற்றியால் கூட்டமைப்பு மண்ணுள் புதைந்திருக்க வேண்டும். அப்போது கூட, இந்தப் புழுதிப் புயலுக்குள்ளும் கூட்டமைப்புத் தான் வெற்றி பெறும் என்பதை முன்கூட்டியே தெரிவித்திருந்தோம். சம்பந்தர் கேட்டுக் கொண்டபடியே முழு ஆசனங்களும் கிடைக்காவிட்டாலும், புலன் பெயர்ந்தவர்களால் உசுப்பேற்றப்பட்டவர்கள் கூட்டமைப்பின் மண் சரிவில் மண் கவ்வினார்கள். ஜனநாயக அரசியலில் இதெல்லாம் சகஜமானது. மக்கள் என்றைக்குமே ஒரே கட்சிக்குத் தான் வாக்களிப்பார்கள் என்று எந்த உறுதியும் இல்லை. ஒரு கால கட்டத்தில் மக்கள் ஆதரித்த கட்சிகள் இன்று தேடுவாரற்றுக் கிடப்பது இந்தியாவிலும் இலங்கையிலும் காணக்கூடியதாக உள்ளது. இந்தியாவில் காங்கிரசும் இலங்கையில் கூட்டணியும் இதற்கான உதாரணங்கள். சரி, கூட்டமைப்பு வென்று விட்டது. எல்லாக் கட்சிகளைப் போலவுமே அது வழங்கிய வாக்குறுதிகளை மக்கள் நம்பி வாக்களித்திருக்கிறார்கள். அந்த மக்களின் தீர்ப்பை மகேசன் தீர்ப்பு என்று சொல்லி தலை வணங்கும் பண்பு தான் நம்மவர்களுக்கு இல்லாமல் போய் விட்டது. தோல்வி அடைந்தவர்கள் மக்களுக்கு நன்றி சொல்லவே நீண்ட நேரம் எடுத்திருந்தது. கிழக்கில் பிள்ளையானுக்கு இருந்த பண்பு இவர்களுக்கு இல்லையே என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தோம். தோல்வி அடைந்தவர்கள் ஜனநாயகப் பாரம்பரியத்தில் என்ன செய்திருக்க வேண்டும்? மக்களின் தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம், எங்கள் பாதையை மக்கள் ஆதரிக்கவில்லை, எனவே அதற்கான காரணங்களை கண்டுபிடித்து, அதற்கு பொறுப்பானவர்களை விலக்கி, புதிய தலைமையைத் தேடுவோம், அல்லது பாதையை மாற்றுவோம் என்று சொல்லியிருந்தால் இவர்களைப் பாராட்டியிருக்கலாம். ஆனால் இவர்களால் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. தாங்கள் ஆதரித்த அமைப்பு மண் கவ்விய உண்மையைப் பொறுக்க முடியாதவர்கள் இன்றைக்கு கூட்டமைப்பின் இயலாமை, அயோக்கியத்தனம், பொய்மை பற்றியெல்லாம் கிளர்ந்தெழுகின்றார்கள். அதைவிட, முகப்புத்தகத்தில் பதிவு போடத் தெரிந்த ஒவ்வொரு தமிழ் உணர்வாளனும், தேர்தலில் வாக்களிக்கத் தகுதியில்லாத புலன் பெயர்ந்தவனாக இருந்தாலும், சம்பந்தன் தனக்குப் பதில் அளிக்க வேண்டும் என்றும் தன்னிடம் கேட்டு விட்டுத் தான் சம்பந்தன் முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இருக்கிறான். இதில் உள்ள உண்மை, பொய் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் இங்கே நோக்கமில்லை. ஒரு ஜனநாயக அரசியலில் ஒரு கொள்கையைச் சொல்லி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அந்த பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் வரைக்கும் பணி புரிய வேண்டியவர்கள். பாராளுமன்றப் பிரதிநிதிகள் தங்கள் கடமையை சரியாகச் செய்யாவிட்டால், அவர்களை மீளப் பெறுவதற்கான சட்டங்களை இயற்றும் வரைக்கும் அது தான் நிலைமை. 'நாங்கள் நினைத்தபடி நீ நடக்கவில்லை, எனவே பதவி விலகி நம்மாளுக்கு வழிவிடு, அவர் சாதிப்பார்' என்பது போலத்தான் நம்மவர்களின் கருத்துக்கள் இருக்கின்றன. தாங்கள் விரும்பியவர் வரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, தெரிவு செய்யப்பட்டவர் மீது சேறு வாரித் தூற்றுவது எந்த விதத்திலும் நியாயமான தீர்வாக மாட்டாது. அது வாக்களித்த மக்களை அவமதிப்பதாகிறது. ஒருபுறத்தில் கூட்டமைப்புக்கு சேறு வாரிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இன்னொரு புறத்தில் கூட்டமைப்புக்கு குழி பறிக்கும் நோக்குடன் புதிய அமைப்பு உதயமாகியிருக்கிறது. மக்கள் அமைப்பு என்றால் அதில் அரசியல்வாதிகள் எதற்கு, அரசியல் தீர்வு பற்றி ஆய்வுகள் எதற்கு என்ற கேள்விக்குப் பதில் இல்லை. ஜனநாயக தேர்தல் முறையில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தங்கள் பதவிகளுக்கான குறுக்குவழியாக இவ்வாறான அமைப்புகளின் முதுகுகளில் சவாரி செய்யவே விரும்புகிறார்கள். போதாக்குறைக்கு விக்னேஸ்வரனுக்கு கொம்பு சீவி சம்பந்தனோடு ஜல்லிக்கட்டு விளையாட முயற்சிக்கிறார்கள். கூட்டமைப்பைத் துரத்தி விட்டு, இந்த பேரவை, சைக்கிள்காரர்களையோ, விக்னேஸ்வரனையோ, சுரேஷையோ பாராளுமன்றம் அனுப்பினால், அவர்கள் ஒரே இரவில் கைதிகளை விடுதலையாக்கி, இன அழிப்பு விசாரணையில் மகிந்தவைக் கழு ஏற்றி, சமஷ்டிக்கும் மேலான பிரிவினையைப் பெற்றுத் தந்துவிடுவார்கள் என்ற பகல் கனவிலேயே பலரும் இருக்கிறார்கள். இன்றைய அரசியல் நிலையில், அமெரிக்காவையும், இந்தியாவையும் மீறி இலங்கையில் தமிழ் அரசியல் இல்லை. எதைச் சொல்லி முரண்டு பிடித்தாலும், இறுதித் துளி இருக்கும்வரை ஈழம் தான் என்று 'அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரண தேவி' என்று கோஷம் போட்டாலும், அவர்களை மீறி எதுவுமே செய்ய முடியாது. அது சைக்கிள்காரர்கள் தெரிவாகியிருந்தாலும் அதே நிலை தான். அவர்களால் ஒரு துரும்பைக் கூட நகர்த்தியிருக்க முடியாது. அவர்கள் செய்து முடித்திருக்கக் கூடியது, புலன் பெயர்ந்தவர்களைக் குஷிப்படுத்துவது மட்டும்தான். ஏக தலைவனாக பிரபாகரன் இருந்த போதே, புலிகள் சிங்களக் கைதிகளை விடுவிக்கவில்லை. இன்றைக்கு இழுபறியில் இருக்கும் கூட்டரசாங்கம் இருக்கும் நிலையில், அப்பாலே இனவாதத்தைக் கிளப்பி அரசியல் செய்ய பிணந்தின்னிக் கழுகுகள் தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒரே இரவில் கைதிகளை விடுவிக்க முடியாத நிலையில் இருக்கிறது அரசு. அதற்குக் கூட்டமைப்பைக் குற்றம் சாட்டி என்ன செய்ய முடியும்? இவர்கள் கோருகின்ற இனஅழிப்பு விசாரணைக்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஆதரவு தராத நிலையில் கூட்டமைப்பால் என்ன செய்ய முடியும்? ஐக்கிய இலங்கைக்குள் தான் தீர்வு என்ற நிலையில் அதன் உச்சபட்சமாக சமஷ்டியை மட்டும் தான் கோர முடியும். அதையும் பெற்றுத் தருவதற்கான அழுத்தங்களைப் பிரயோகிக்கும்படி இந்தியாவையும் அமெரிக்காவையும் மன்றாட மட்டும் தான் முடியும். இன்றைக்கு பேரவையோ, சைக்கிள்காரர்களோ அமெரிக்கா, இந்தியாவின் மிரட்டல்களுக்கு அடி பணிய மாட்டோம், எமது போராட்டத்தின் இறுதி இலக்கு ஈழம் தான் என்பதைப் பகிரங்கமாகச் சொல்வார்களா? அவ்வாறு சொன்னால் இவர்களை இந்த நாடுகள் பேச அழைக்குமா? இவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், கோட், சூட்டை மாட்டிக் கொண்டு போய் போஸ் கொடுத்து விட்டு, 'சுரேஷும், கஜேந்திரனும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை, இந்தியாவுக்கு காலக்கெடு' என்று தமிழ்ப் பத்திரிகைகளில் அறிக்கை விட மட்டும் தான் முடியும். அவர்களின் ஆதரவாளர்கள் அதை முகப்புத்தகத்தில் மறுபிரசுரம் செய்யத் தான் முடியும். அல்லது அவ்வாறு சொல்லி விட்டு, யுத்தத்தினால் எல்லாவற்றையும் இழந்து இப்போது தான் ஓரளவு நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் மக்களிடம் போக முடியுமா? முப்பது வருடம் துப்பாக்கியோடு காட்டுத் தர்பார் நடத்திய பிரபாகரனிடம் 'ஏன் தீர்வு கொண்டு வரவில்லை?' என்று தலை நிமிர்ந்து கேட்க முடியாதவர்கள், மூன்று ஆண்டுகளுக்குள் தீர்வு கொண்டு வரவில்லை என்று சம்பந்தனிடம் கேள்வி கேட்பதில் என்ன நியாயம்? இன்றைக்கு சம்பந்தனால் தீர்வு பெற்றுத் தரமுடியவில்லை, கைதிகளை விடுவிக்க முடியவில்லை, சர்வதேச விசாரணைக்கு வழி வகுக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டுபவர்கள் இதற்கெல்லாம் காரணமான பிரபாகரனை ஏன் குற்றம் சாட்டவில்லை? இன்றைக்கு ஆக்ரோஷத்துடன் சம்பந்தனைக் கேட்பவர்கள் அன்றைக்கு பிரபாகரனைக் கேட்டிருந்தால் இவ்வாறான நிலைமை வந்திருக்குமா? இன்றைக்கு சம்பந்தரை வாங்குவாங்கு என்று வாங்குவது சம்பந்தரிடம் துப்பாக்கி இல்லை என்ற துணிவு மட்டும் தானே ஒழிய, ஜனநாயகம் மீது இவர்களுக்கு வந்த காதல் இல்லை. வெறும் உணர்ச்சியைக் கிளப்பி அரசியல் செய்யப் போய் தான் எல்லாவற்றையும் இழந்திருக்கிறோம். அதில் தங்களை தியாகம் செய்தவர்கள் உயிரையும் வாழ்வையும் தொலைத்து, அவர்களின் குடும்பங்கள் கண்ணீருடன் வாழ்ந்து கொண்டிருப்பதை தங்கள் அதிகாரக் கனவுகளுக்கான ஏணியாக்க நினைப்பவர்கள் தான் இன்றைக்கு இந்த மண்குதிரைகளில் ஆற்றைக் கடந்து ஈழம் பிடிக்க நினைப்பவர்கள். கூட்டமைப்பு தன் வாக்குறுதிகளை மீறியதாக தமிழ் மக்கள் நினைத்தால், அவர்களைத் தூக்கி எறிந்து விட்டு, தங்களுக்கு மாற்றுத் தலைவர்களைத் தெரிந்து கொள்வதற்கான பொறிமுறையாக ஜனநாயகத் தேர்தல் முறை வந்திருக்கிறது. அந்த முறையின் மூலம் தாங்கள் 'வெட்டிப் புடுங்கப் போவதாக' சொல்லும் விடயங்களை அடைவதற்கான வழிகளைச் சொல்லி தமிழ் மக்களின் அங்கீகாரத்தை சில வருடங்களின் பின்னால் பெறுவதற்கு இந்த மாற்று அமைப்பினருக்கு எந்தத் தடையும் இல்லை. பிரபாகரன் காலத்து மண்டையில் போடும் கலாசாரம் இன்றைக்கு இல்லை. துணிச்சலாகவே இவர்கள் மக்கள் முன் சென்று அரசியல் செய்யலாம். இவர்கள் உண்மையாக தமிழ் மக்களின் வாழ்வு விடிவு பெறுவதில் அக்கறை உள்ளவர்களாக இருந்தால், தங்கள் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, வழிகளை மாற்றிக் கொள்ளலாம். வெறுமனே கூட்டமைப்பில் குற்றம் கண்டு அதைக் காட்டி மக்களின் வாக்குகளைப் பெறலாம் என்ற நம்பிக்கை பயன் அளிக்காது. கூட்டமைப்பால் செய்ய முடியாததை தாங்கள் எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பதை மக்களுக்குச் சொல்லி அவர்களின் அங்கீகாரத்தைப் பெறுவது தான் முறை. அதுவும் பாராளுமன்ற ஜனநாயக முறைப்படி தான் சாத்தியம். தங்களுடைய தவறுகளை உணர்ந்து, திருத்திக் கொள்ளாமல் கூட்டமைப்பில் பிழை பிடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தால், அதுவே மக்களிடமிருந்து இவர்களை அன்னியப்படுத்தவும் கூடும். இவர்கள் நேர்மையாளர்களாக இருந்தால் ஜனநாயக வழியிலேயே மக்களை வென்றெடுக்கலாம். இப்படி மாறுவேஷங்களில் வந்து அல்லல்படத் தேவையில்லை. ஜனநாயகப் பாரம்பரியங்கள் எங்கள் சமூகத்திற்கு அந்நியமானவை தான். ஆனால், எல்லாவற்றையும் இழந்த கையறு நிலையில் பற்றிப் பிடிக்க வேண்டியது அது ஒன்றை மட்டும் தான்.

    Postad



    You must be logged in to post a comment Login