Recent Comments

    கொடுப்பதால் பெருமை பெறும் விருது

    Awardஜோர்ஜ் இ.குருஷ்சேவ்

    ரொறன்ரோவில் இது ஒரு வருடாந்த சடங்காகவே மாறி விட்டிருக்கிறது.

    கடந்த வருடத்திற்கான வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான விருது அறிவிப்பு வெளியாகும்.

    (அதென்ன, கடந்த வருடத்திற்கான வாழ்நாள் சாதனை? கடந்த வருடம் வெளியான வெளியீட்டுக்கு கொடுப்பது வேறு. வாழ்நாள் சாதனையை போன வருடம் முடிவு பண்ணி இந்த வருடம் விருது? இந்த வருடம் கொடுத்தால், ஒருவேளை அடுத்த ஆறு மாதங்களுக்குள் வேறு யாராவது வாழ்நாள் சாதனை படைத்து விடுவார்கள் என்ற பயமோ?)

    தமிழ்நாட்டில் இந்து முதல், ஆங்காங்கே முகாம் அமைத்து, இந்துவை 'பார்ப்பனிய இதழ்' என்று ஒற்றுமையாய் திட்டிக் கொண்டே, வாழ்நாளையே தங்களுக்கு இடையிலான இலக்கியச் சர்ச்சைக்காய் ('ஓடுகாலிகளின் கூட்டுச் சதி!' சண்டைக்கு!) அர்ப்பணித்த ஜோல்னாப் பை சிற்றிலக்கிய இதழ்கள் வரை அதன் அதிர்வு எதிரொலிக்கும். (கானடா நாட்டில் வழங்கப்படும் இலக்கிய நோபல் பரிசுக்கு இணையான இந்த விருதைப் பெற்ற முன்னாள் பட்டியல் முதல் விருது பெற்றவர் மீதான வசை பாடல் வரை!)

    புலன் பெயர்ந்த நாடுகளில் இலக்கியம் படைக்கும் மாற்றுக் கருத்தாளர்கள், நள்ளிரவு அறிவிப்பை நித்திரைப் பாயில் பகிர்ந்து, விருது கொடுக்கப்பட்டவருக்கான இலக்கியத் தகுதி, நேர்மை குறித்து முகப்புத்தகத்தில் ஒரு பாட்டம் கலக்கி ஓய்வார்கள். (தங்களுக்கு அழைப்பிதழ் நிச்சயமாய் கிடைக்காது என்று தெரிந்தவர்கள் மட்டும்!)

    இலங்கையில் இலக்கியவாதிகள் ஓகோ, அப்படியா! என்று விட்டு, தங்கள் வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள். புலன் பெயர்ந்த நாடுகளில் (கனடா உட்பட!) உள்ள தமிழுணர்வாளர்களும், விடுதலை இலக்கியம் படைப்போரும் தங்கள் வீட்டு நிலக்கீழ் அறையில், இலக்கிய உலகையே அதிர வைக்கும் இவ்வாறான ஒன்று நடப்பதை தெரிந்து கொள்ளாமல், வோட்டுப் போடுதல், கொடி பிடித்தல், புத்தக வெளியீடு, சினிமா நடிகை வரவேற்பு, கோயில் திருவிழா வகையறாக்களில் மும்முரமாகி விடுவார்கள்.

    விருது விழாவுக்கு தமிழகத்திலிருந்து விருது வாங்கும் கதாநாயகப் பிரபலம் வந்திறங்குவார். (நல்ல காலம், விமான நிலையத்தில் மேளதாளங்களும், வந்தவரோடு போஸ் கொடுக்கும் 'ஊடகவியலாளர்'களும் தவிர்ந்து!)

    அழைப்புக் கிடைத்தவர்கள் தங்கள் இலக்கியப் பங்களிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்த பெருமையுடன், ஆட்டிறைச்சிக் கறி மணக்கும் கோட்டுகளை கிளறி எடுத்து அதை Dry clean பண்ணாமல் போட முடியுமா? இல்லை, வேஷ்டி, நாஷனல், சால்வை அல்லது தமிழ் பண்பாட்டுக் குர்தா, ஷெர்வாணி இத்யாதிகளுடன் ஆஜராவதா என்ற குழப்பத்துடன்... பதினைந்து நிமிட இலக்கிய அந்தஸ்து கிடைத்த விழா ஏற்பாட்டாளர்களின் குடும்பத்தினர், விருது வழங்கும் கொடையாளர்களுக்கே கொடை கொடுத்த கொடையழு வள்ளல்கள், மற்றும் தங்களைப் போன்ற (Invitation) card-carrying இலக்கியப் பிரபலங்களுடன் தோள் உரச கிடைத்த அரிய வாய்ப்பை நழுவ விடாமல், அதை சர்வதேசமும் அறிந்து கொள்வதற்கு வசதியாகவும், அழைப்புப் பெருமையுறா மற்றவர்களுக்கு கடுப்பு ஏற்றவும் 'எனக்கும் அழைப்புக் கிடைத்திருக்கிறது. போவதற்காக இப்போது மலசல கூடத்திலிருக்கிறேன்' என்று காலையிலேயே தொடங்கி முகப்புத்தகத்தில் ஸ்டேட்டஸ் போடத் தொடங்குவார்கள்.

    விழாவை முழு உலகும் கண்டு கழிக்க, அமைப்பாளர்கள் இன்னமும் live streaming, Twitter பயன்படுத்தா விட்டாலும், கலந்து கொள்வோரின் முகப்புத்தக அப்டேட்டுகள் உண்டு. (இதோ, நான் வடையோடு டீ குடித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய ஹைக்கூ கவிதைத் தொகுப்பு மூன்றை விற்று விட்டேன்!)

    தமிழ்நாட்டு நெல்லுக்கு இறைத்த விருது, வாய்க்கால் வழியே புலன் பெயர் புற்களுக்கும் வழிந்தோட.. இன்னும் சிலரும் also ran!

    விருதுப் பேருரையெல்லாம் கலந்து கொள்வோருக்கு மட்டுமானது. வெளியே கண்டதில்லை.

    விருது வாங்கி முடிந்து, வந்தவர் நயாகரா வீழ்ச்சி காண்பதற்கு அவரை காரில் முன்னாசனத்திருத்தி சரியாசனம் காணப் போட்டி போடும் இலக்கிய வாதிகள் ஒருபுறம்.

    சினிமா நடிகையைக் கூப்பிட்டு, கை குலுக்க வரிசையில் நிற்க வைத்து பணம் அறவிடுவோர் போல, இந்த இலக்கியப் பிரபலத்தின் நேரடித் தரிசனத்திற்கு பணம் அறவிடும் விருந்திலும், எங்காவது இலக்கியப் புள்ளிகளின் வீடுகளில் நடைபெறும் சந்திப்புகளிலும் தங்கள் இலக்கியப் படைப்புகளை அவரின் கையில் எப்படியாவது திணித்து, அவர் மூலமாய் விமர்சனம் (விமோசனம்?) பெற்று, தமிழ்நாட்டு இலக்கியக் கோட்டைக்குள் நுழைவதற்கான break கிடைக்கும் என்ற கனவுடன் இருப்பவர்கள் மறுபுறம் என ரொறன்ரோ அமர்க்களமாகும்.

    அடுத்தடுத்த வாரங்களில் சனிக்கிழமை இரவுகளில் நடைபெறும் உத்தியோகப்பற்றற்ற இலக்கியச் சந்திப்புகளில், அழைப்புக் கிடைக்காதவர்கள் சேர்ந்து, கோட், வேஷ்டிகளுடன் ஆஜரானவர்கள் பற்றியும், பரிசு பெற்றவர் பற்றி சிறப்பிதழ் வெளியிட்டு, தியேட்டர் பீடா விற்பனையாளன் போல விற்பனை செய்பவர் பற்றியும், அவர்களின் பிரசன்னம் இல்லாத தருணங்களில், கேலியும் கிண்டலுமாய் இலக்கிய சர்ச்சை செய்வதுமாய் (இது தான் ஒரிஜினல் 'ஓடுகாலிகளின் கூட்டுச்சதி'யோ?) இந்த விருது வழங்கல் நிறைவு பெறும்.

    கனடாவில் தமிழர்கள் விருது வழங்குகிறார்கள்!

    அச்சியந்திரங்களை நிறுத்துங்கள்! பிந்திய செய்தியை முந்தித் தரவேண்டும்!

    கனடாவில் விருது வழங்குவதை ஒரு செய்தியாகக் கருதுபவர், தேசியத் தலைவராக மட்டுமே இருக்க முடியும். அதாவது... எங்காவது ஒரு பங்கருக்குள் வெளியுலகத் தொடர்பு எதுவும் இல்லாமல் கரந்துறைபவராக!

    தமிழ் மகன் நிர்வாக விற்பனை நிலையங்களில், உடன் இறைச்சி, மீன் வாங்க சனிக்கிழமைகளில் திரளும் புலன் பெயர்ந்த தமிழர்களுக்கு, இரத்தம் சொட்டச் சொட்ட ஊர் ஆடும், தாயகத்துக் கடலில் பிடிக்கப்பட்ட விளைமீனும் வெட்டி, சேவை வழங்கும் பணியாளர்கள் தவிர, கனடாவில் கிட்டத்தட்ட தமிழர்கள் எல்லோருமே ஏதோ ஒரு விருது பெற்றிருக்கிறார்கள்.

    (பாவம் அந்தப் பணியாளர்கள்! அவர்களுக்கு விருது கிடைப்பதை விட, கனடிய மாகாண அரசுகள் சட்டப்படி அமுல்படுத்தும் குறைந்த பட்ச சம்பளம் ஒழுங்காகக் கிடைத்தாலே இந்த விருது கிடைப்பதை விட பெரும் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால், கலை, இலக்கிய விழாக்களில் ஸ்பொன்சர் விளம்பரங்களுக்காக விருது பெறுபவர்களும், சிறப்புப் பிரதி பெற அழைக்கப்படுபவர்களும் இதே 'நிர்வாகத் தமிழ்மகன்' தொழிலதிபர்கள் தான் என்ற லட்சணத்தில் தான் எங்கள் சமூகம் இருக்கிறது!)

    இன்னமும் வெளியீட்டு விழாக்களில் சிறப்பு பிரதிகள் பெறுவோருக்கு விருது வழங்கும் சம்பிரதாயம் அமுல்படுத்தப்படவில்லையே தவிர, விருது வழங்கப்படாத இலக்கிய, கலை நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை.

    போதாக்குறைக்கு, வீடு விற்பனை முகவர்கள், காப்புறுதி முகவர்கள் மட்டுமன்றி, பத்திரிகைகளில் விளம்பரம் செய்வோர், விழா நிகழ்வுகளைப் படம் பிடிக்கும் 'ஊடகவியலாளர்கள்' எல்லோருமே விருது பெற்றவர்கள். சனத்தொகைக்கு தகாத விகிதத்தில் இத்தனை பத்திரிகைகள், முகவர்கள் எனக் கொண்ட சமூகத்தில் விருது கிடைக்காமல் இருப்பது என்பது மட்டுமே செய்தியாகக் கணிக்கக் கூடிய அளவுக்கு நாறிப் போய் கிடக்கிறது.

    ஊர்களுக்கு மட்டுமன்றி, ஊரில் செய்த உத்தியோகங்களுக்கும் இங்கே சங்கம் அமைத்து, சங்கங்களுக்கு எல்லாம் புலி தலைமையில் சங்கம் அமைத்த தமிழன், ஏன் இன்னமும் விருது வழங்குவோருக்கு சங்கம் அமைத்து, மொத்த விற்பனை விலையில் கழிவு விலைக்கு விருது வாங்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என்பது அந்த விருதுநகர் வியாபாரிகளுக்குத் தான் வெளிச்சம்.

    மொத்தத்தில், கனடாவில் நிகழ்ச்சிகளில் எல்லாம் அர்த்தம் இல்லாமல் கடைப்பிடிக்கப்படும் ஒரு நிமிட மெளன அஞ்சலி போல, விருது வழங்கலும் ஒரு வெறும் சம்பிரதாயம் மட்டுமே. ஆனால் இதையறியாமல், கனடாவில் ஏதோ ஒரு அரசாங்கத்து governing body இருந்து இந்த விருது வழங்குவோரின் திறமைகளையும் தகுதிகளையும் கடுமையாகப் பரிசீலித்து அனுமதி வழங்கியது போலத் தான் பலரும் நினைத்து வருகிறார்கள்.

    விருது வாங்கிப் பெருமை கொண்ட தமிழன், விருது கொடுத்தே பெருமை பெறும் கனடாவில் யாரும் யாருக்கும் விருது கொடுக்கலாம். அந்த விருதுகளும் வெறும் ஏழு டொலர்கள் வரை மலிவாகவும் வாங்கலாம்.

    போலிப் புகழ்ச்சியில் மதி மயக்கம்

    மற்றவர்களின் போலிப் புகழ்ச்சியில் மதி மயங்குவது நமது சமூகமாகத் தான் இருக்க முடியும்... சூரியதேவன் என்று தன்னைப் புகழ்ந்தவர்களை நம்பியவர் மாதிரி!

    இணையத்தில் விற்பனையான டாக்டர் பட்டங்களை விலை கொடுத்து வாங்கி, தங்களுக்குத் தாங்களே விழா எடுத்தவர்கள் நிறைந்த இனம் இது. தாங்களே ஆளைப் பிடித்து பணம் செலவிட்டு, தங்களுக்கு மலர் வெளியிட்டு விழா எடுத்தவர்களும் உண்டு.

    அந்த விழாக்களில் கலந்து கொள்ளும் மகாஜனங்கள் அங்கே இலவசமாய் கிடைக்கும் சிற்றுண்டிகளுக்கும் டீக்கும் தான் வருகிறார்கள் என்று நினைத்தே, உளைகின்ற மனதுக்கு செயற்கையாய் ஆறுதல் சொல்ல முடிகிறது. திறமைக்கும் நேர்மைக்கும் மதிப்பு இல்லாமல், போலிகளுக்கு பொய்யர்களால் வழங்கப்படும் பொய்மையான பெருமைகளைக் கண்டு மனம் புழுங்காமல் என்ன செய்ய முடியும்?

    விருது வாங்குபவர்களுக்கே தகுதி இல்லாத இடத்தில், விருது கொடுப்பவர்களுக்கு தகுதி இருக்க வேண்டும் என்று யாராவது நினைப்பார்களா? (வாங்குபவர் உட்பட!)

    கொஞ்ச நாளைக்கு முன்னால் ஒருவர் மாவீரர், லெப்டினன்ட் கேர்ணல், மாமனிதர், நாட்டுப் பற்றாளர் என்றெல்லாம் பட்டங்களை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார். (அறிவிப்போடு மட்டுமே முடிகின்ற, செலவில்லாத வேலை. விருது என்றால் விலைக்கு வாங்க வேண்டுமே!) அவருக்கு அதற்கான தகுதி அவர் கையில் இருந்த ஆயுதம் என்பது தவிர வேறெதுவுமில்லை என்பது முழு இனத்திற்கே தெரிந்திருந்தாலும், அதைப் பெருமையாகக் கொண்டாடிய இனம் இது. எட்டாம் வகுப்பு தாண்டாதவர் பேராசிரியர்களுக்கு விருது கொடுத்ததை பெருமையாய் இன்றும் பேசும் பாருக்குள்ளே நல்ல நாடும் நம்ம ஈழம் தான். 'காலத்தை வென்றவன்' என்று கொண்டாடிய அவருக்கு இப்போது 'காலம் சென்றவர்' பட்டத்தை வழங்கக் கூட ஆளில்லை.

    தகுதியானவர்களிடம் விருது பெற்று பெருமை பெறும் எண்ணம் இல்லாமல், எவர் தந்தாலும் போய் வாங்கி, பெருமையாய் புல்லரிக்கும் 'விருது பெற்ற' படைப்பாளிகளை விட, தங்களுக்குத் தரவில்லையே என்று பொருமித் திரிபவர்கள் இன்னொரு பக்கத்தில் என்பது அடுத்த வேடிக்கை!

    இந்த விருது வியாதி கனடாவில் தான் பன்றிக்காய்ச்சல் கணக்கில் பெருந் தொற்று நோயாகியிருக்கிறது. புலன் பெயர்ந்த மற்ற நாடுகளில் இந்தளவில் இருப்பதாக முகப்புத்தகத்தில் எந்த அசுமாத்தமும் இல்லை. 'உலகப் பந்தயங்களில் வெற்றிக் கோப்பைகளை வென்று வந்திருக்கிறேன்' பாணியில் தனக்கு விருது கிடைத்தது என்று வெளியில் மார் தட்டிச் சொல்ல முடியாமல் இருந்தாலும், விபசாரிகளிடம் கிடைக்கும் கணப்பொழுது இன்பத்தில் சுகித்திருப்பவர்கள் போல, அந்த மேடைகளில் கிடைக்கும் சில நிமிட இன்பங்களுக்காய் அலைபவர்கள் இன்னமும் எங்கள் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பது தான் இந்த இனம் பெருமைப்பட வேண்டிய விடயம்.

    இந்த லட்சணத்தில் தான் இந்த வாழ்நாள் விருதும் அரங்கேறி வருகிறது.

    Walled Garden

    தங்கள் அமைப்புக்கு தோட்டம் எனப் பெயர் வைத்தவர்கள் இதை தீர்க்கதரிசனத்துடன் வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் நீண்ட நாளாக இருந்தது. Walled Garden போன்று, தோட்டத்திற்கு சுவர் எழுப்பி, வாயிற்காப்போர்கள் கர்ப்பக்கிருகத்து லிங்க தரிசனம் செய்வோரை தரம் பிரித்து உள்ளே விடும் பாணியைப் பார்த்தால், இந்த சுவர் கொண்ட தோட்டத்தில் லிங்க ஆராதனை செய்ய, அழைக்கப்பட்ட சிலர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பது புலனாகும்.

    ஆரம்பத்தில் பொது இலக்கிய நிகழ்வாக இருந்தது இன்று Black Tie Affair ஆக, மேல் தட்டு elite நிகழ்வாக்கப்பட்டு, விருது வாங்க என்ன, கலந்து கொள்ளவே தகுதி வேண்டும் என்ற பிரமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. யாருக்கு கொடுத்து குஷிப்படுத்த வேண்டும் என்பது முதல், யாருக்கு கொடுத்தால் யாருக்கு கடுப்பு ஏறும் என்ற லாப, நட்டக் கணிப்பு வரை திட்டமிடப்பட்டே நுழைவு அனுமதிகள் வழங்கப்படுகின்றன.

    இதனால், நுழைவுச்சீட்டுக் கிடைப்பதாலேயே இலக்கியப் பிறவிகளாவோரும், இலக்கியப் பிறவிப் பெரும்பயனை எய்துவோரும் உளர். இதற்காகவே இந்த பிதாமகர்களைப் பகைக்காமல் இலக்கியம் படைப்போர் நிறைய!

    நடுநிலைத் தமிழனின் நோபல் பரிசு

    இலக்கியத்திற்கான நோபல் பரிசு ரேஞ்சில் புகழ்ந்தேத்தப்படும் இந்த விருது, இங்கிலாந்தின் Booker, அமெரிக்க Pulitzer, கனடிய Giller பரிசுகள் போல, திறமை வாய்ந்த நடுவர் குழு மூலமாக பரிசீலிக்கப்பட்டு வழங்கப்படுவதான பிரமையை அதன் வழங்குனர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். மேற்குறித்த பரிசில்கள் எல்லாமே எழுத்தாளர்களால் வழங்கப்படுவதில்லை. நோபல் பரிசு தவிர, மற்றவை கடந்த வருடங்களுக்கான வெளியீடுகளுக்கானவையே அன்றி, வாழ்நாள் விருதுகளும் அல்ல.

    தாங்கள் எழுத்தாளர்களாய் உள்ளவர்கள் தங்களுக்கான நலவுரிமை முரண்பாடு (Conflict of interest) பற்றிய கவலையின்றி, ஒரு நடுவர் குழு தெரிவு செய்வதான பிரமையை ஏற்படுத்தினாலும், இதொன்றும் ஹொலிவூட்டின் படைப்பாளி வகையறாக்களின் சங்கங்கள் ஒவ்வொன்றும் வருடாந்தம் வழங்கும் Jury of peers ரகத்தினவையானவையும் அல்ல.

    நடுநிலைத் தமிழனை வலை போட்டு வீசினாலும் பிடிக்க முடியாத சமூகத்தில், இத்தனூண்டு இலங்கைத் தீவிலேயே முகாம் அமைத்து, வேண்டப்பட்டவனை அங்கீகரித்தும், வேண்டப்படாதவனைப் புறக்கணித்தும் இருட்டடிப்புச் செய்தும், மோதிக் கொண்ட இலக்கிய பாரம்பரியத்தில், இவர்களின் தெரிவு காய்தல், உவத்தல் இன்றி திறமையையும், இலக்கியத்திற்கு வழங்கிய பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து தான் வழங்கப்படுகிறது என்று நம்புகின்றவன் இன்னொரு இளிச்சவாய் தமிழனாகவே மட்டும் இருக்க முடியும்.

    ஒரு அரசோ, சமூக அமைப்போ, இலக்கிய விமர்சகர்களைக் கொண்ட அமைப்போ வழங்குவதாக இருந்தால் அதற்கு குறைந்த பட்ச நடுநிலைத் தன்மை இருக்கும் என தத்துவார்த்த ரீதியில் (theoretically மட்டுமே! அந்த லட்சணத்தில் தான் தமிழர்கள் நடுநிலைமை!) நம்பலாம்.

    விருது கொடுத்தே பேர் வாங்கும் புரவலர்கள்

    இந்த விருது வழங்கிக் கௌரவிக்கும் பஞ்ச கௌரவர்களில் பெரும்பான்மையினர் எழுத்தாளர்களே. இவர்கள் எப்படி மற்ற எழுத்தாளர்களின் பங்களிப்பை நடுநிலையுடன் கௌரவிக்க முடியும்? அதை வழங்குவதற்கு தகுதி பெற, இவர்கள் யாராவது மெ/மகா இலக்கியங்களைப் படைத்திருக்கிறார்களா? முன்பின் விருதுகள் பெற்றிருக்கிறார்களா?

    Booker, Giller பரிசு மட்டத்தில், அவற்றுக்கான glitz and glamor உடன் தான் இந்த விருது விழா நடப்பதாக விருது மூலவர் சொன்னார் என, முட்டாள்கள் தினமான ஏப்ரல் முதலாம் திகதிக்கு மறுதினம், 2013ல் வெளிவந்த ரொறன்ரோ ஸ்டாரில் வந்த கட்டுரை கூறுகிறது. (glitz and glamor- the quality of appearing very attractive, exciting and impressive, in a way that is not always genuine என்கிறது ஒக்ஸ்போர்ட் அகராதி. அப்படீன்னா சுப்பர் சிங்கர் மட்டம் தான்!)

    இந்த விருதை தனது மூளையில் உதித்த பிள்ளை (Brainchild) என்றும் தானும் தனது நான்கு நண்பர்களும் இந்த விருதுகளுக்கான திட்டத்தை முன்வைத்ததாகவும் இந்த மூலவர் கூறுகிறார்.

    அதாவது, தன்னோடு சேர்ந்து இந்த 'உலகப் புகழ் வாய்ந்த' விருதை திட்டமிட்ட மற்ற நான்கு நண்பர்களின் பெயரையும் வெளியில் சொல்லி, அவர்களின் திறமைக்கு அங்கீகாரம் வழங்கி, உலகறியச் செய்ய இவருக்கும் மனம் வரவில்லை. (Brainchild என்பதால் ஒரு பிள்ளைக்கு பஞ்ச கௌரவர்கள் தந்தைகளாக இருக்க முடியாது என்ற எண்ணமாக இருக்கலாம்!) தான் மட்டுமே இந்த விருதின் ஆதியும் அந்தமும் என்பதாகத் தன் பெருமை பேசுவதிலேயே அந்த ரொறன்ரோ ஸ்டார் தகவல் போகிறது.

    இந்த பஞ்ச கௌரவரில் இன்னொருவர் சமீபத்தில் காலம் சென்ற எழுத்தாளர் நினைவாக நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றை இலக்கிய, அரசியல் அமைப்பு ஒன்றுடன் சேர்ந்து நடத்தி விட்டு, தன்னால் ஒழுங்குபடுத்தப்பட்டதாக முகப்புத்தகத்தில் செய்தி வெளியிட்டவர். (சிலநேரம் தேநீர், சிற்றுண்டி சப்ளையை இலக்கியப் பங்களிப்பாக அங்கீகரிக்க மாட்டாரோ என்னவோ!)

    மொத்தத்தில் தங்களுடன் சேர்ந்து இந்த இலக்கியப் பணிகளில் செயற்பட்டவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் பெருந்தன்மை இல்லாத இவர்கள், தமிழ் இலக்கியப் பரப்பில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களை அங்கீகரிக்கிறார்கள் என்றால்...

    காரணம் இருக்கிறது!

    பல்லைக்கழ விருதா?

    இந்த விருது முதல் முதலாக ரொறன்ரோப் பல்கலைக்கழகத்தில் சுந்தர ராமசாமிக்கு வழங்கப்பட்ட போது, எனக்கும் அழைப்புக் கிடைத்து, ஆஜராகியிருந்தேன். அத்துடன் சகோதரன் குமார் மூர்த்தி வீட்டில், சுந்தர ராமசாமி அவர்களைப் பேட்டி காணவும் அழைத்திருந்தார்கள். அந்தப் பேட்டி வெளிவந்ததாய் ஞாபகமில்லை. (பின்னால் அழைப்பு எதுவும் கிடைப்பதில்லை! நம்மால் எட்ட முடியாத அளவுக்கு அவர்கள் வேறெங்கோயோ போயிருக்கக் கூடும்!)

    ரொறன்ரோப் பல்கலைக்கழகத்தின் மண்டபம் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட போது, இந்த விருது ரொறன்ரோ பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுவதான பிரமை ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதற்குக் காரணம், இந்த பஞ்ச கௌரவர்களில் ஒருவராக இருந்த ஆங்கிலத் துறைப் பேராசிரியரான தமிழர். பிரமையைத் தொடர்வதற்காய், தொடர்பு விலாசம் ரொறன்ரோப் பல்கலைக்கழகமாக இருந்த போதும், இந்த விருது வழங்கலுக்கும் ரொறன்ரோப் பல்கலைக்கழகத்திற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ரொறன்ரோ ஸ்டார் பேட்டியிலோ, விருதுவிழா மலர்களிலோ, உத்தியோகபூர்வ இணையத் தளத்திலோ ரொறன்ரோ பல்கலைக்கழகத்துடன் எந்த விதமான தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படவில்லை.

    தற்போது அந்தப் பேராசிரியர் காலமான காரணத்தினால், ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் பெயருடனான தொடர்பு துண்டிக்கப்படக் கூடும்.

    (தான் மாதாந்தம் எழுதி வரும் தொடர்பத்தியில் கூட, அவரின் மறைவு குறித்து எழுதிய இரங்கல் கட்டுரையில் இந்த விருது வழங்கலுக்கு பல்கலைக்கழகப் பெயரை ஒட்ட வசதி செய்த பேராசிரியரின் பங்களிப்புப் பற்றி மூலவர் குறிப்பிடவேயில்லை!)

    பேராசிரியரின் மறைவு விருது வழங்குவோருக்கு இழப்போ இல்லையோ, அவரைக் கொண்டு தங்கள் இலக்கியங்களை மொழி பெயர்த்து, இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் பலரின் கனவுகள் தகர்ந்து விட்டன. (கவலை வேண்டாம். அதற்காகவே ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பில் பிரபலமான ஒருவருக்கு வாழ்நாளை சாதனை விருது கொடுத்தாயிற்று!)

    ஈழத்தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்காகவே!

    யாழ்ப்பாணத்திற்குள்ளேயே தங்களைக் குறுக்கிக் கொண்ட ஈழத்தமிழர்களுக்குள், அதைக் கடந்து சர்வதேச அளவில் தமிழ் இலக்கியங்களை கண்டறிந்து கௌரவிக்கும் அளவுக்கு வந்திருக்கிறார்களே, ஈழத்தமிழ் இலக்கியம் உலக மட்டத்தில் பேசப் படப் போகிறதே என்று நீங்கள் பேருவகை கொள்ளத் தேவையில்லை. ஈழத்தமிழ் இலக்கியத்திற்கான சாதனையில் நாடகத்திற்காய் தாசீயஸிற்கும், புத்தக வெளியீட்டுக்காய் (?) பத்மநாப ஐயருக்கும் கொடுத்தது தவிர, மற்றவர்களில் பெரும்பாலோர் தமிழ்நாட்டு இலக்கியகாரர்களே.

    'இரத்தம் காய முன் இலக்கிய விழாவா?' என்று சன்னதம் ஆடியதற்காக எஸ்.பொவுக்கு விருது சாத்தியது, மிஞ்சிய காசில் அவசரமாய் ஜீவாவுக்கும் விருது கொடுத்து துடக்கு கழித்தது என ஈழத்தமிழ் இலக்கியத்திற்கான இவர்களின் அங்கீகாரம் இவ்வளவு தான். (இதில் ஜீவாவுக்கானது முழு அளவிலான வாழ்நாள் சாதனையா? அல்லது also ran ரகமா? தெரியாது. காரணம், இவ்வருட விழா இதழில் முன்பு விருது பெற்றோர் பட்டியலில் ஜீவாவின் பெயர் இல்லை).

    இவர்களின் விருது பெறத் தகுதியானவர்களாக இன்னமும் இலங்கை எழுத்தாளர்கள் யாரும் இல்லையா? இருக்கிறார்கள். யார் என்று பட்டியலைப் போட்டால் ஏற்படக் கூடிய கலவரத்தை மனதில் கொண்டு தவிர்த்தாலும், யாராவது ஒருவரின் பெயரைச் சொல்ல வேண்டும் என்றால், நல்லதொரு விமர்சகராக அறியப்பட்ட கே.எஸ்.சிவகுமாரன் அவர்களுக்கு கொடுத்திருக்கலாம். (ஐயா, உங்கள் சந்தர்ப்பத்தைப் பாழாக்கியதற்கு, மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் கொடுக்கும் எண்ணம் இருந்திருந்தாலும், 'உவன் சொல்லிக் குடுத்தது எண்டு முடிஞ்சு போகும்' என்று உங்களுக்குத் தரவே மாட்டார்கள்!)

    இதற்குள் எங்கள் புலன் பெயர்ந்த இலக்கிய உலகுக்குள் உள்ள சில உண்மைகளையும் சொல்லியே ஆக வேண்டும். விருது கொடுக்கப்படும் போதெல்லாம், பெரும் பிரளயம் கிளப்பும் மாற்றுக் கருத்தாளர்கள் தாங்களும் திறமை அறிந்து விருது கொடுக்க எந்தத் தடையும் இல்லை என்பதை உணர்வதில்லை. ஆனால் இவர்கள் ஒன்று திரண்டு, ஒருவரைத் தெரிவு செய்து, முகப்புத்தகத்தில் மூக்குடையும் வரை சண்டை பிடித்து ஒருமித்த கருத்துக்கு வருவதற்குள் வாழ்நாள் (இவர்களின்!) முடிந்து விடும் என்பது தான் கசப்பான உண்மை. இதற்காகவே இவர்களுக்கு வாழ்நாள் சாதனை விருது, ஐ.நா அமைதிப்படைக்கு சமாதான நோபல் பரிசு கொடுத்தது போலக் கூட்டாகக் கொடுக்க வேண்டும்.

    இலக்கியத்தைக் கொண்டாடுதல்

    இலக்கியத்தைக் கொண்டாடுதல் என்பது ஒவ்வொரு இனமும் நிச்சயமாய் செய்ய வேண்டியது. ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறைகளுக்கும் வரலாறுக்கும் விட்டுச் செல்வதில் கலை, இலக்கியங்கள் முக்கியமானவை. இலக்கியத்தைக் கொண்டாடுதல் என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பாராட்டப்பட வேண்டியது. ஆனால், வரலாற்றை மறைப்பதற்காக, புலன் பெயர்ந்த இலக்கியத்தின் பிதாமகர்கள் தாங்களே என்றும் தங்களுடைய அளவுகோல்களால் மட்டுமே இலக்கியம் அளக்கப்படலாம் என்றும் தங்களால் அங்கீகரிக்கப்பட்டவை மட்டுமே இலக்கியங்கள் என்றும் ஆங்காங்கே ஆளுக்காள் கிளம்பினால், வரலாறு எதை நினைவில் வைத்துக் கொள்ளும்? இவர்களால் பதிவாக்கப்பட்டவற்றை மட்டும்தான்!

    இவர்கள் செய்வது ஒன்றும் இலக்கியத்தை கொண்டாடுதல் அல்ல. இலக்கியம் மூலமான பிழைப்பு மட்டுமே! ஈழத்தமிழர் வாழ்வும் இலக்கியமும்

    வாழ்வை பதிவாக்குவதே இலக்கியம் என்றால், எங்கள் ஈழத்தமிழ் வாழ்வு தமிழக வாழ்வு போன்றதன்று. ஆயுத முனையில் திணிக்கப்பட்ட அரசியல், எங்கள் வாழ்வை வாழ்வா? சாவா? என்ற நிலைக்குள் தள்ளியிருக்கிறது. அதிலும், கருத்துச் சுதந்திரம் என்பது எங்களுக்கு உயிரைக் கொடுத்து நிலைநாட்ட வேண்டியதாகவே மண்ணின் மைந்தர்களால் ஆக்கப்பட்டிருந்தது. அந்தச் சூழலில் புறநானூறு பாணியில் தலைவனையும், போரையும், தியாகத்தையும் புகழ்ந்த இலக்கியங்கள் தவிர்க்க முடியாதன. ஆனால் அவை இலக்கியங்களுக்குள் வர முடியாதபடிக்கு பிரசார வாடையுடன், சமூகம் கொண்டிருந்த மாயைக் கருத்தோடு ஒத்தோடுவனவாகவுமே இருந்தன. பயத்தில் வாலைச் சுருட்டி நோகாமல் இலக்கியங்கள் செய்தவர்கள் ஒரு பக்கம். இலக்கியம் மறந்து புறநானூறு பாடியவர்கள் ஒரு புறம் என ஈழத்தமிழ் இலக்கியம் கடந்த முப்பது வருடங்களுக்குள் பல்வேறு பரிமாணங்களைக் கண்டிருக்கிறது.

    இலக்கியத்தில் அவற்றுக்கும் இடம் இருந்தாலும், போராட்டத்தின் பெயரால் தமிழர்களுக்கே தமிழர்களால் இழைக்கப்பட்ட அநீதிகளும் அக்கிரமங்களும் பதிவு செய்யப்பட்ட போது, அவற்றை இவர்கள் போன்றவர்கள் இருட்டடிப்புச் செய்யவே முயன்றார்கள்.

    இந்தச் சமூகத்தில் இலக்கியம் என்பது வெறும் தமிழ் நாட்டு இலக்கியம் போன்று luxury அல்ல. உயிர்ப்பிரச்சனை!

    ஆனால் இதே போன்று தமிழகத்திலும் மத வெறியின் பெயரால் இலக்கியங்களில் கை வைத்த போது, இந்த இலக்கியம் கொண்டாடுவோர் என்ன செய்தார்கள்?

    இவர்கள் போய் தமிழ்நாட்டில் விருந்துண்டு, உறவு கொண்டாடும் முகாம்கள் ஒன்றைச் சேர்ந்த பெருமாள் முருகனின் நாவலுக்கு எதிரான போராட்டம் தொடங்கி, 'பெருமாள் முருகன் இறந்து விட்டான்' என்று எழுத்துலகுக்கே முழுக்குப் போட வேண்டிய நிலை வந்த போது, இந்த இலக்கியப் பிதாமகர்கள் எங்கே குரல் எழுப்பினார்கள்? தமிழக இலக்கியக் கும்பலை வளைத்துப் பிடித்து குறைந்தது ஒரு அறிக்கையாவது விட்டிருக்க வேண்டாமா? ஏற்கனவே 2011 ல் இவர்களிடம் விருது பெற்ற பெருமாள் முருகனுக்கு, எதிர்காலத்தில் இவர்களின் வாழ்நாள் சாதனை விருதுக்கு உரியவராகக் கருதப்பட்டவருக்கு, ஆதரவாக குரல் எழுப்ப இவர்களுக்குத் தடையாக இருந்தது என்ன?

    பிழைப்பு!

    நோபல் சமாதானப் பரிசுகள் பல, அந்தந்த நாடுகளில் உள்ள அடக்குமுறை அரசுகளுக்கு செய்தி சொல்வனவாகத் தான் வழங்கப்படுகின்றன. அந்த பரிசுகளை வழங்குவதன் மூலம் அந்த அடக்குமுறைகள் பற்றிய தெரிந்து கொள்ளலை ஏற்படுத்துவதுடன், அவற்றுக்கெதிரான குரல்களுக்கான அங்கீகாரமாகவும், அடக்குமுறை ஆட்சிகளுக்கு எதிராக விடுக்கப்படும் அறிவிப்பாகவும் தான் அவை வழங்கப்படுகின்றன.

    பெருமாள் முருகனின் மாதொரு பாகனுக்கு இவர்கள் விருது வழங்கியிருந்தால், அதுவே மதவெறியர்களுக்கு எதிரான இலக்கியவாதிகளின் சவாலாக இருந்திருக்கும்.

    தங்களிடம் பரிசு வாங்கிய இலக்கியம் படைப்பவர்களுக்கு எழுதவே முடியாத சூழ்நிலை எழும் போது வாய் திறக்காதவர்கள், வேறு இடங்களில் கருத்துச் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்கள் ஏற்படும் போது வாய் திறப்பார்களா? அதில்லாமல் இலக்கியத்தைக் கொண்டாடுகிறோம் என்பதன் அர்த்தம் என்ன?

    அதெல்லாம் இருக்கட்டும்!

    இந்த விருதுவிழா மூலவர் சமீபத்தில் ஒரு கதை எழுதினார். புலிகள் அல்லாத ஈழ விடுதலை அமைப்புகளில் ஒன்று சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்றைக் கேலியும் கிண்டலுமாய் சித்தரித்த கதை. அது குறித்து சம்பந்தப்பட்ட பலர் கொதித்தெழுந்தார்கள். அவர்களின் கொதிப்பு நியாயமானதாக இருந்தாலும், ஒரு படைப்பாளிக்குரிய கருத்துச் சுதந்திரம் பற்றி இவர்கள் யாருமே வாயே திறக்கவில்லை. பேசாமல் பதிவிலிருந்து நீக்கி விட்டு, ஒன்றுமே நடவாதது போல பாவனை பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

    எழுதியவரோ, எழுதியவரை அண்டிப் பிழைப்பவர்களோ தாங்கள் எழுதியதையே நியாயப்படுத்த முடியாவிட்டால், இவர்களின் இலக்கியத்தில், இவர்கள் அடிக்கடி சொல்கின்ற 'அறம்' எங்கே இருக்கிறது?

    பெருமாள் முருகனுக்காவது ஒரு நேர்மை இருந்தது... பெருமாள் முருகன் செத்து விட்டான் என்று தன்னுடைய எதிர்ப்பைக் காட்டுவதற்கு!

    இலக்கியவாதிக்கு எழுதுவதற்கு உரிமை இல்லாத இடத்தில் எதைக் கொண்டாடுவதாம்?

    உயிரில்லா இலக்கியங்களின் கர்த்தாக்கள்

    தாங்கள் இலக்கியவாதிகள், தங்களுக்கு விருது வழங்குவதற்கான தகுதிகள் உள்ளன என்று காட்டும் இவர்களின் இலக்கியங்களின் தரம் என்ன?

    வெளிநாட்டு அனுபவங்களை பட்டிக்காட்டானுக்கு பட்டணம் காட்டியது போல எழுதுவது இலக்கியமாகி விடாது. இதை விட 'இதயம் பேசுகிறது' மணியன் சாதித்தது மேல்!

    எட்டாம் வகுப்பில் படித்த Baron Manchausen னின் புழுகுமூட்டை பாணியில், உயிரில்லாத எழுத்துக்களுக்கு அங்கீகாரம் வேண்டி வெகுகவனமாக திட்டமிடப்பட்ட சந்தைப்படுத்தல் திட்டத்துடன் நடத்தப்படுவது தான் இந்த விருது.

    வெறும் கொலை செய்யும் இயந்திரங்களாக புலிகளால் உருவாக்கப்பட்ட போராளிகளுக்குள்ளும் மென்மையான இதயம் இருக்கிறது என்பதைக் காட்டும் தமிழினியின் கதை, கவிதைகளில் இருக்கும் உண்மையும், உயிர்த்துடிப்பும் கேள்விச் செவி கிரனேட் கிளிப் விளையாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு இருக்குமா?

    இவர்களுக்குள்ளே வாழ்நாள் பூராவும் எழுதாமலேயே, எவரோ எழுதியதை எங்கோ கொடுத்து கால் நூற்றாண்டாய் 'இலக்கியம் செய்தவர்கள்' இருக்கிறார்கள். ரமணி சந்திரன், பட்டுக்கோட்டைப் பிரபாகர், நாஞ்சில் பி.டி.சாமி, தமிழ்வாணன் போல எழுதிக் குவித்ததால் இலக்கிய அந்தஸ்து பெற்றவர்கள் இவர்கள். சும்மா முகப்புத்தகத்தில் பொழுதுபோக்காமல், எதையோ எழுதியதால் எங்கேயோ அங்கீகாரம் பெற்றவர்கள். இவர்கள் 'இலக்கியம் செய்து கொண்டிருப்பது' இவர்களது தொடர்ச்சியான எழுத்துக்கள் மூலமாகவே!

    இந்த உயிரில்லா எழுத்துகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால், தமிழ்நாட்டுப் பிரபலங்களை வளைத்துப் பிடித்து கைக்குள் போட வேண்டும்.

    இவர்கள் ஈழத்தமிழ் இலக்கியத்தை விடுத்து, தமிழக இலக்கியப் பிரபலங்களுக்கு மாலை சாத்துவதன் காரணம் இதுதான்.

    ஈழத்து இலக்கியகாரர்களுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கினால் இந்து செய்தி வெளியிடுமா? ஜோல்னாப் பைகள் குடுமிப்பிடிச் சண்டை நடத்துமா? ரஜனிகாந்த் பாராட்டு விழாவுக்கு வருவாரா? தமிழ்நாட்டில் இது பற்றி யாருமே கணக்கெடுக்க மாட்டார்கள்.

    தமிழகப் பிரபலங்களுக்கு கொடுத்தால்... அந்தப் பிரபலங்களே விழுந்தடித்து பிரபல வெளியீடுகளில் செய்தியாக்குவார்கள். தங்களுக்குத் தாங்களே விழா வைப்பார்கள்.

    விருது வாங்குபவரின் பெருமையில், விருது கொடுத்தோர் குளிர் காய்கின்ற கேலிக் கூத்துத் தான் இது.

    தங்கள் மட்டரகமான எழுத்துக்களுக்கு தமிழ்நாட்டுப் பிரபலங்கள் மூலமாக அங்கீகாரம் பெற்று, புலன் பெயர் இலக்கியத்தின் பிதாமகர்களாக தமிழ்நாட்டில் வலம் வருவதற்கான முயற்சி தான் இது. இந்த மூலவப் பிதாமகரை, புலம் பெயர் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த கனடாவில் நிகழ்வு நடத்த வேண்டிய அளவில் தான் இவர்களின் இலக்கியப் பங்களிப்பு இருக்கிறது.

    தமிழ்நாட்டுப் பிரபலங்கள் தங்களுக்கு கிடைக்கும் விருதுகளுக்கும் விமானச் சீட்டுகளுக்கும் பிரதியுபகாரம் பண்ணாமல் இருக்க முடியுமா?

    இந்த பரஸ்பர பிழைப்பின் ஒரு அம்சம் தான்.... கொஞ்ச நாளைக்கு முன்னால், ஒருநாளுமில்லாமல் திடீரென்று விகடன் வழங்கிய 'சிறந்த புலன் பெயர் இதழுக்கான விருது'.

    இங்கே அழைத்து விருது கொடுத்ததற்கான நன்றிக் கடனாக பெற்றுக் கொடுக்கப்பட்டதே அந்த விருது. முதல் விருது பெற்ற சுந்தர ராமசாமி போன்றவர்களால் வணிக எழுத்துக்கள் என்று கூறப்படுபவற்றை வெளியிடும் விகடன் வழங்கிய விருது, காலச்சுவட்டுக்கு ஜால்ரா போடும் இவர்களால் கொஞ்ச நாள் பெருமையாக பேசப்பட்டது. 63 ல் வெளிவந்த ஜி.நாகராஜனின் குறத்திமுடுக்கு நாவலை, சஞ்சிகையில் இடம் நிரப்பப் போட்டு, 'கடைசிப் பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தன, யாராவது இருந்தால் அனுப்பி வையுங்கள்' என்று அரைகுறையாய் வந்ததை தெரியாமல், அந்த சஞ்சிகையில் அந்த நாவல் வெளிவந்தது என்று விருதுக் குறிப்பில் போடும் அளவுக்கு, விருது வழங்கிய விகடனும், வாங்கிக் கொடுத்தவரும் விவரமானவர்களாக இருந்தார்கள்.

    புதிய இலக்கிய மாபியா

    கவனமாகத் திட்டமிட்ட சந்தைப்படுத்தலுடன், கனடிய அரச நிறுவனங்கள், தொண்டர் நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் (corporations), 'தமிழ்மகன்' தொழிலதிபர்கள் என பல்வேறு வழிகளில் பெரும் நிதி திரட்டி புலம் பெயர்ந்த நாடொன்றில் இருந்து நடத்தப்படும் இந்த நிகழ்வு, இன்று தமிழ்நாட்டில் பேசப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அந்த நிதி வசதிகள் காரணமாக glitz and glamor உடன் அரங்கேற்றப்படும் இந்த நிகழ்வுடன் இவர்களின் 'இலக்கியப் பணி' முடிவடைவதில்லை.

    அதனுடன் சேர்த்து தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்த்தல், பிரசுரித்தல் என்று விரிவடைகிறது.

    அங்கே இன்னொரு பிரச்சனை உருவாகிறது. இவர்களும் இவர்களை அண்டிப் பிழைப்பவர்களும் மட்டுமே புலன் பெயர் இலக்கியத்தின் பிரம்மாக்களாக அடையாளப்படுத்தப்பட்டு முதன்மைப்படுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் இவர்களுக்கு இருக்கும் செல்வாக்கினால் இவர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் சாதாரண எழுத்தாளர்களுக்கு மட்டுமன்றி, அங்கே பெயர் பெற்றவர்களுக்குக் கூட ஏற்படுகிறது.

    இன்று கிட்டத்தட்ட இது ஒரு இலக்கிய மாபியாவாக உருவெடுத்திருக்கிறது. தோட்டத்தில் மட்டுமல்ல, தொகுப்புகளிலும் வேண்டப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவதால், இவர்களின் மனம் கோணாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இவர்களை அண்டிப் பிழைப்பவர்கள் இங்கே அதிகம். பலரின் வாய்கள் அடைக்கப்பட்டு மெளனமாக இருக்கின்றன, சனிக்கிழமை இரவு இலக்கியச் சந்திப்புகளில் விஸ்கிகளால் திறக்கப்படும் வரை!

    தமிழ்நாட்டு இலக்கியச் செம்மல்களுக்கு இந்த விருது இலக்கியத்திற்கான நோபல் பரிசு மட்டத்தில் இல்லாவிட்டாலும், சாகித்திய அகடமி விருது, ஞானபீடப் பரிசு மட்டத்தில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கக் கூடும். அட, நம்ம ரஜினிகாந்தே இந்த விருது வழங்கப்பட்டவர், தனக்குத் தானே எடுத்த பெருவிழாவில் கலந்து கொண்டு, கனடா நாட்டில் விருது கொடுக்கப்பட்டது பற்றிச் சிலாகித்திருக்கிறார்.

    உலகெங்கும் மின்னோலை புழக்கம் கூடி, தபால் அனுப்பும் பழக்கம் அருகியதால், நட்டத்தில் ஓடும் அரச தபால் நிறுவனங்கள், வருமானத்திற்கான வழியாக வளர்க்கும் நாய்க்குக் கூட முத்திரை வெளியிடக் கூடிய வசதியை ஏற்படுத்தப் போக, பிழைப்பு வாதிகள் தங்களுடைய தலைவர்களுக்கு எல்லாம் முத்திரை வெளியிட, கனடா அரசு தங்கள் தலைவர்களுக்கு முத்திரை வெளியிட்டதாக புல்லரிக்கும் ரஜனி ரசிகர் மட்ட ஈழத்தமிழ்ப் பாமரர்கள் போல, ரஜினிக்கு என்ன, தமிழக இலக்கிய முகாம்களுக்கே இந்த விருது பிரமிப்பானதாக இருப்பதில் என்ன ஆச்சரியம்?

    எனவே, இந்த விருதைப் பெறுவதை வாழ்நாள் சாதனையாக நினைப்பவர்கள் நினைத்து விட்டுப் போகட்டும்.

    எழுத நினைப்பவர்கள் எழுதுங்கள். விருதுகளுக்காக அல்ல!

    திசை தெரியாமல் தவிக்கும் எங்கள் ஈழ மக்கள் சரியான திசையில் பயணிக்க வேண்டும் என்பதற்காக எழுதுங்கள்!

    எங்களை அங்கீகரிக்கிறார்கள் இல்லையே, சரியானவர்களுக்கு கொடுக்கிறார்கள் இல்லையே என்று மனம் வெதும்புபவர்கள் அதன் மூலமே இவர்களுக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கிறீர்கள்.

    எங்களை அங்கீகரிக்க இவர்கள் யார் என்ற வித்துவச் செருக்குடன் எழுதுங்கள்.

    சொல்லப்பட வேண்டியவை என்று நினைப்பவற்றை, சொல்லலாமே என்று நினைப்பவற்றை எழுதுங்கள்... உங்கள் இதயத்திலிருந்து எழுதுங்கள்!

    மணிமுடிகளின் பாதாரவிந்தங்களை பணிந்து பொற்காசுகளுக்காய் பாடியவர்களும், சங்கம் அமைத்து அரங்கேற்றியவர்களும் இருந்தாலும், தலை வணங்காத் திமிருடன் வாழ்ந்த காளமேகங்களும் சித்தர்களும் பாடிய பாடல்கள் இன்றும் வாழுகின்றன.

    உண்மையான இலக்கியம் என்றும் வாழும். அதற்கு போலிகளின் அங்கீகாரம் தேவையில்லை.

    எங்காவது எங்களை அடையாளம் காணும்போது, என்றோ எழுதி, எப்போ மறந்து போனதை புன்சிரிப்போடு ஞாபகப்படுத்தி, 'அதை ரசித்தேன்' என்று ஒரு உண்மையான வாசகன் சொல்லும் போது ஏற்படும் பெருமையும் திருப்தியும், இந்த வியாபாரிகளின் சுப்பர் சிங்கர் மட்ட விருதுகளால் ஈடு செய்யப்பட முடியாதவை!

    Save

    Save

    Save

    Postad



    You must be logged in to post a comment Login