Recent Comments

    அப்பிள்

    க. கலாமோகன்

    நான் ஓர் பழக்கடை வைத்துள்ளேன். அங்கே நான் விற்பது அப்பிள்களை மட்டுமே. பல தேசங்களிலிருந்தும் பல வகை நிறங்களில் வடிவங்களில் உள்ள அப்பிள்களை நான் இறக்குமதி செய்கின்றேன். தொடக்கத்திலே எனது திட்டத்தைக் கேட்ட நண்பர்கள் என்னைக் கிண்டலடித்தும் ஒரு வாரத்தில் கடை மூடப்படுமெனவும் தீர்க்க தரிசனம் செய்தனர். எனது மனதோ தளரவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்ததைவிட வாடிக்கையாளர்கள் பெருக்கெடுத்தனர். உண்மையிலேயே வாடிக்கையாளிகள் கூட என்பதே சரி.. எனது மனதைத் தளர வைத்தவர்களும் மெல்ல மெல்ல வாடிக்கையாளர்களாகினார்கள். ஏன் எனக்குள் இந்தத் திட்டம் ஏற்பட்டது என்பது இன்னும் விளங்க முடியாமல் உள்ளது. நான் பிரபல அப்பிள் பிரியன் அல்லன். பழங்களின் வடிவங்களில் எனது மனதை நான் பறிகொடுத்தாலும் அவைகளைச் சாப்பிடுவது குறைவு. வெண்ணிறப் பெண்களின் சொக்கைகளை அப்பிளுக்கு ஒப்பிடாமல் அப்பிள் எனக் கருதிக் கருகிய தினங்கள் பல. இந்தச் சொக்கைகளை அதிகமாகப் பார்த்ததும் பழம் என்ற வகையில் அப்பிள் எனக்குள் பெரிய கெடுவை ஏற்படுத்தாததிற்கான காரணமாக இருக்கலாம்.

    நான் தனியாக இருந்த வேளையில் ஓர் கிழவி கடைக்குள் நுழைந்தாள்.

    “பொன்ஜூர் மடம்!” (வணக்கம்) என்றேன்.

    “கரோலின் (Caroline) உனது கடையைப்பற்றி என்னிடம் நிறையப் பேசினாள். அதனால்தான் நான் உன்னிடம் அப்பிள் வாங்க வந்துள்ளேன்.”

    “யார் கரோலின்?” மெல்லிய குரலில் கேட்டேன்.

    “எனது பேத்தியை உனக்குத் தெரியாதா? கிழமையில் இரண்டு தடவையாவது இங்கு வருவாள். அவள் உனது அப்பிள்களின் தரத்தைப்பற்றிப் பலரிடம் சொல்லியதால் அவர்களும் இங்கு வருகின்றனர் என்பதுகூட உனக்குத் தெரியாதா?”

    “எனக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது உண்மைதான். எனக்கு அவர்களது பெயர்கள் தெரியாது.”

    அவள் அழகி. அவளது சொக்கைளே அப்பிள் வடிவில் சிவப்பாக. . .”

    “உங்களது சொக்கைள் கூட அப்பிள் வடிவில். . .”

    “என்னைத் துரத்திய ஆண்கள் பலர். இதற்குக் காரணம் எனது சொக்கைகளே.”

    “என்னால் விளங்க முடிகின்றது. இப்போதும் உங்கள் சொக்கைகளை அப்பிள்கள் என்று என்னால் எங்கும் பிரகடனப்படுத்த முடியும்.”

    “இளம் பையனே! நன்றி.”

    “உங்களது சொக்கையோ மஞ்சள் நிறத்தில் உள்ளது. இதனைக் கோல்டன் அப்பிளோடு ஒப்பிடலாம். அப்பிள் பழத்தின் நிறங்களும் சுவைகளும் வித்தியாசமானவை.”

    “நீ சொல்வது சரி”

    “எனக்கு மூன்று கிலோ கோல்டன் தேவை.”

    “வழமையில் ஒரு கிலோதான் வாங்குவீர்கள். இன்று வீட்டிற்கு நிறைய விருந்தாளிகள் வருகின்றனரா?”

    வாடிக்கையாளர்கள் சில அப்பிள்களை வாங்கலாம் பலவற்றையும் வாங்கலாம். காரணங்களைத் தேடுதல் எனது தொழிலுக்கு நல்லதல்ல என்பது எனக்குத் தெரிந்தபோதும் என்னையுமறியாமல் கேட்டுவிட்டேன். கிழவியோ எனது கேள்வியால் நெருடப்பட்டது போல தன்னைக் காட்டிக்கொள்ளவில்லை.

    “நான் இந்தப் பழங்களை உரித்து சிறிது சிறிதாக வெட்டி எனது பாணியில் அழகான கேக் செய்து கரோலின் வீட்டிற்குக் கொண்டு செல்லப் போகின்றேன். நாளை அவளது பிறந்து தினம். அப்பிளில் நாங்கள் பலவற்றைப் படைக்கலாம். நான் செய்கின்ற அப்பிள் சாற்றைப்போல கடைகளில்கூட வாங்க முடியாது. உங்களுக்கு நான் நிச்சயமாக எனது அப்பிள் சாற்றைச் சுவைக்கத் தருவேன்.”

    பாட்டி சென்றதும் கரோலின் யார் எனும் விசாரணை எனக்குள் எழுந்தது. எனது கடைக்கு அனைத்து நிறத்தினரும் வருவதுண்டு. பெண்களின் தொகையே அதிகம். இவர்களுள் கரோலின் யார் என எனக்கு எப்படித் தெரியுமாம்?

    மூன்று பிள்ளைகளோடு பிரெஞ்சுக்காரி ஒருத்தி வாரத்திற்கு இரண்டு தடவைகளாவது வந்து தனது கூடை நிறைய அப்பிள் வாங்கிச் செல்வாள். அவள் கரோலினா? பாட்டி தனது பேத்திதான் கரோலின் என்றாள். அவளுக்கு மூன்று குழந்தைகள் எனச் சொல்லவில்லை. நான் இந்த விதத்தில் கரோலினைத் தேட வெளிக்கிட்டால் அனைத்து வெண்ணிறப்பெண்களும் கரோலின் ஆகிவிடக்கூடிய அபாயமும் உள்ளது.

    எனக்கு முன்னர் மாம்பழத்தில்தான் விருப்பம். நிறையச் சாப்பிடுவேன். அப்பிள் அப்போது விருப்பத்திற்குரிய கனியாக இருக்கவில்லை. ஆனால் அப்பிள் கடையைத் திறந்தபின்னர் எனது பிரதான உணவாகிப்போய்விட்டது அப்பிள். எனது வாடிக்கையாளர்கள் என்னிடம் வாங்கும் அப்பிள்கள்பற்றிப் புகழ்ந்து பேசுவதால் நானும் அப்பிள்கள் சாப்பிடத் தொடங்கி இப்போது அது நான் விரும்பும் முதலாவது கனியாகிவிட்டது. காலையில் கடையைத் திறந்தவுடன் ஓர் கோல்டனைச் சாப்பிடாதுவிட்டால் எனது மூட் கலங்கிவிடும். வாடிக்கையாளர்கள் தொடர்ந்தும் வந்துகொண்டிருப்பதால் நான் அப்பிள் சாப்பிடுவதற்குக்கூட நேரம் இருப்பதில்லை. தொடக்கத்தில் அவர்கள் முன்னே சாப்பிடுதல் அநாகரீகம் என நினைத்தேன். ஆனால் எனக்குள் இருந்த அப்பிள் பசி தீவிர வெறியாகியதால் அவர்கள் முன்னேயும் சாப்பிட வெளிக்கிட்டேன். பின்னர் அவர்கள் தாங்கள் வாங்கிய அப்பிள்களை என்னோடும் சேர்ந்து சாப்பிட வெளிக்கிட்டதால் எனது கடைக்கு செழிப்பான புதுக்களை ஏற்பட்டது.

    யார் இந்தக் கரோலின் எனும் கேள்வி எனது தலையைக் குடைய வெளிக்கிட்டதிற்கு நான் பிரமச்சாரியாக இருப்பது சிலவேளைகளில் காரணமாக இருக்கலாம் எனச் சில கெட்ட ஆத்துமாக்கள் நினைக்கலாம். நேற்று நிறையப் பெண்கள் சிவப்புச் சொக்கைகளுடன் எனது கடைக்கு வந்தனர். எல்லோரும் கரோலினாக இருக்கமுடியாது. ஆனால் எல்லோரும் கரோலின் போலவும் எனக்குப்பட்டனர். ஆனால் நாகரீகம் கருதியும் வியாபாரம் பாழாகிவிடக்கூடாது என்பதற்காகவும் அவர்களிடம் பெயரைக் கேட்பதைத் தவிர்த்துக்கொண்டேன்.

    “வணக்கம்!” என்றபடி உள்ளே நுழைந்தவரின் முகத்தைப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. அவர் பழைய நண்பர். பார்த்துப் பல வருடங்கள்.

    “சுகமா? எப்படி எனது கடையைக் கண்டுபிடித்தீர்கள்?”

    “உனது கடையைப் பற்றித்தானே உலகம் முழுவதும் பேச்சு. எழுதுவதை நிறுத்திவிட்டியா?”

    “மறந்தும் விட்டேன்.”

    “ஓர் இலக்கியவாதி கடைநடத்துவதால் பணலாபம் மட்டுமல்ல இலக்கிய லாபமும் உள்ளபோது நீ ஏன் அதனைப் பயன்படுத்தாமல் இருக்கின்றாய்?”

    “முதலில் இதனைச் சாப்பிடு!” என்றபடி அவரது கையில் பச்சை அப்பிளை வைத்துவிட்டு “லாபம் உள்ளதென்பது உண்மைதான். ஆனால் இலக்கிய லாபம் என்பதுதான் விளங்கவில்லை” என்றேன்.

    “கடை என்பது பலருக்கு வியாபார பீடமாக உள்ளதென்பதுதான் உண்மை. ஆனால் இலக்கியவாதிக்கோ அது பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் ஒன்று. வாடிக்கையாளர்களோடு தொடர்புவைக்கும்போது பல வித்தியாசமான அனுபவங்களிற்கு நெருக்கமாகும் வாய்ப்பு உள்ளது. இந்த அனுபவங்களைப் பின்னர் கதையாக்கிவிடலாம் கவிதையாக்கிவிடலாம். பல ஆண்டுகளின் பின்னர் உனது இலக்கியம் அப்பிள் இலக்கியமாகக் கருதப்படும்” என என் நண்பர் எனக்கு இலக்கிய வணிகத் தத்துவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார்.

    இளம்பெண் ஒருத்தி நுழைகின்றாள்.

    “நான் இந்தியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன். அங்கே சாப்பிட்ட அப்பிள்களின் சுவையை இன்றும் எனது நா தேடிக்கொண்டுள்ளது.”

    “என்னிடம் இந்திய அப்பிள்கள் உள்ளன. எவ்வளவு கிலோ வேண்டும்?”

    “நான் பாரிஸில் பல கடைகளில் இந்திய அப்பிள்களைத் தேடினேன். கிடைக்கவில்லை. கரோலின்தான் உங்களது முகவரியைத் தந்தாள்.”

    “கரோலின் மட்டுமல்ல அவளது பாட்டிகூட இங்குதான் அப்பிள்கள் வாங்குவதுண்டு.”

    “பாட்டியா? அவளின் பாட்டி காலமாகிப் பல வருடங்கள்.”

    “மன்னிக்கவும்! நான் குறிப்பிடுவது நீங்கள் குறிப்பிட்ட கரோலின் அல்ல.”

    “எனக்கு நான்கு கிலோ அப்பிள் தாருங்கள்.”

    அவள் சென்றதும் “உன்னைத் தேடிவருமளவிற்கு நீ நிறைய வாடிக்கையாளர்களைச் சம்பாதித்துள்ளாய்.” என்றார் நண்பர்.

    “எனக்கு வாசகர்களைக் காட்டிலும் வாடிக்கையாளர்கள்தான் அதிகம். இதுவும் நான் எழுதாதிருப்பதற்கான காரணம்.”

    “நீ எழுதினால் இந்த வாடிக்கiயாளர்களை வாசகர்களாக்கிவிடலாம். இதனால் இரட்டிப்பு லாபம் உனக்குக் கிடைக்கும். அதாவது அப்பிளோடு சேர்த்துப் புத்தகங்களையும் விற்றுவிடலாம்.”

    “நீ சொல்வது உண்மைதான். ஆனால் அப்பிள் விற்பனையால் கிடைக்கும் லாபம் புத்தகம் விற்பதால் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை.”

    “நான் இன்னொரு தடவை வருகின்றேன். உனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை இலக்கியத்துக்காகவும் பயன்படுத்த மறக்காதே!” என்றபடி நண்பர் போனதும் நான் இந்திய அப்பிளை ஒன்றை எடுத்துக் கடித்தேன். ஆம்! கடந்த இரண்டு மாதங்களாக நான் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்தபோதும் ஒருநாள் கூட அதனை நான் சுவைத்ததில்லை. மியாம்! மியாம்! மீண்டும் சில அப்பிள்களை வெறியோடு சாப்பிட்டேன். எனக்குள் ஏற்பட்ட இந்தப் பசிக்கு அவள், கரோலின் என்பவளின் நண்பி காரணமாக இருக்கலாம்.

    பழக்கடையைப் புத்தகக் கடையாக்கலாம் என நண்பர் சொன்ன ஆலோசனையை ஏற்றுக்கொள்ள எனது ஆறாவது அறிவு மறுத்தது. ஆம்! எனக்கு அப்பிளோடு ஏற்பட்ட நெருக்கம் இலக்கியத்தை தூர எறிந்துவிட்டது எனலாம்.

    இரவு எனக்குத் தூக்கம் வரவேயில்லை. எண்ணையில் பொரித்த அப்பிள் துண்டுகளைச் சாப்பிடுவதில் நேரம் கழிந்து கொண்டிருந்தது. கரோலின் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் ஆசை என்னைக் குடைந்து கொண்டிருக்கும்போது தூக்கம் எப்படி வருமாம்? அவள் மீது எனக்குக் காதலா? தெரியாது. ஆனால் எனது விழிகளோ அவளைக்காண அவதிப்பட்டன. ஏன்? அதுவும் எனக்குத் தெரியாது.

    போன் கதறியது. இந்த வேளையில் எப்படிக் கதைப்பதாம்? அதனைக் கதறவிட்டேன். சில கணங்களில் அது அமைதியாகியது. எனது கடைக்கு வந்த அனைத்து வெள்ளைப் பெண்களையும் கரோலின் ஆக்கி ஆக்கி கனவுத் தாம்பாளங்களாகப் படைத்தேன். அவை அழகுச் சிலைகளாக உதித்தன. நான் தடக்கி விழுந்தேன் இந்தத் தாம்பாளங்களுள். பின் விழித்தேன்.

    எனக்குள் வெள்ளை இன வெறியா? நிச்சயமாக வர்த்தகனுக்கு இந்த வெறி இருக்கக் கூடாது. ஆனால் எனக்குள் இந்த வெறி இருக்கின்றதா? ஏன் கரோலின்களை வெள்ளைக்காறிகளாகத் தேடினேன்? பிரெஞ்சால் காலனித்துவம் ஆக்கப்பட்ட ஆபிரிக்க நாடுகளில் இருந்து வந்த கறுப்புப் பெண்கள் என் கடைக்கு நிறைய வருகின்றனர். இவர்களுள் கரோலின் இருக்கக் கூடாதா? என் கடைக்கு வரும் இலங்கை, இந்தியப் பெண்கள் என்னுடன் பிரெஞ்சில்தான் பேசுவதுண்டு. இவள்களுள் கரோலின் இருக்கக் கூடாதா? பல மொழிகளிலும், நிறங்களிலும் கரோலினைத் தேடுவதுதான் நல்லது போல பட்டது.

    மீண்டும் போன் கதறியது. யார் அடித்தாலும் திட்டுவதைத் தீர்மானித்துக்கொண்டு ரிசீவரை எடுத்தேன்.

    “வணக்கம்! நான் கரோலின்!”

    “ஆ! கரோலினா? உங்களது அழைப்புக்கு நன்றி!”

    “உங்கள் கடையில் விற்கும் அப்பிள்களில் எனக்கு நிறைய விருப்பம். அவைகள் அழகியது மட்டுமல்ல சுவைகளையும் அதிகம் தருவது. அவைகளில் கவிதைச் சுவைகளையும் கண்டுள்ளேன்!”

    “உங்களுக்கு எப்படி நான் கவிதை எழுதுவது தெரியும்?”

    “தெரியாது! நீங்கள் அப்பிள்கள் மீது பேசுவன எனக்குள் கவிதைகள் போலப் படுகின்றன.”

    “கரோலின்! நீங்களும் கவிதைகள் எழுதுவதுண்டா?”

    “எழுத்து இல்லை. நிறைய வாசிப்பு. பழங்கள், மரக்கறிகள் மீதான கவிதைகளை மிகவும் வாசிப்பேன். எனக்குப் பூனை மீதான கவிதைகளும் பிடிக்கும்.”

    “நான் எப்போதும் பூனைக் கவிதைகளை வாசித்ததில்லை. எனக்கு அவைகளை வாசிக்கத் தரமுடியுமா?”

    “உங்களது அப்பிள்களே எனக்கு பூனைக் கவிதைகளை வாசிக்கத் தூண்டியது.”

    “எனது அப்பிள்களா?”

    “என்னிடம் மூன்று பூனைகள் உள்ளன. அவைகளுக்கு நிறைய அப்பிள்களைக் கொடுத்தேன். சாப்பிட மறுத்தன. அந்த அப்பிள்களை உங்கள் கடைகளில் வாங்கவில்லை. உங்கள் கடையில் வாங்கிய வாங்கிய அப்பிள்களைத் என்னிடமும் பறித்துச் சாப்பிட்டன.”

    “எனது இதயத்தை பூனைகள் தடவுவதாக உணர்கின்றேன்.”

    “ம்ம்ம்! உங்களிடம் நான் ஓர் விடயம் கேட்கலாமா?”

    “நீங்கள் கேட்பது நிறைவேற்றப்படும்! கேளுங்கள்! ஒரு விடயம் இல்லாமல் பல விடயங்களையும் கேளுங்கள்!”

    “அப்பிள்!”

    “உங்களுக்கு அப்பிள்கள் தேவையா? இப்போதா? இப்போது கடை மூடப்பட்டுள்ளது. உங்களுக்கு அப்பிள்கள் எந்த நிறங்களில், எந்தச் சுவைகளில் தேவையானால் நீங்கள் கடைக்கு வரத் தேவையில்லை. உங்களது முகவரியை, உங்கள் விருப்பின்படி தந்தால், உங்களது மாளிகைக்கு அப்பிள்கள் வரும், அவை என்னால் தரப்படும், நிச்சயமாக..உங்களுக்கு இலவசமாக….”

    “நன்றி உங்களது இலவச விநியோகத்திற்கு. ஆனால் எனக்கு தற்போது அப்பிள்கள் தேவையில்லை. உங்கள் கடையில் வாங்கிய அப்பிள்கள் நிறைய உள்ளன. ஆனால் எனக்கு அப்பிள் கேக் ஒன்று நாளை மதியத்துக்குத் தேவைப்படுகின்றது. உங்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். எனக்கு நாளைக்குப் பிறந்த தினம். சில நண்பர்களையும் பல நண்பிகளையும் அழைத்துள்ளேன். அவர்களுக்கு அப்பிள் கேக் கொடுக்கவேண்டும் என்பது என் இலக்கு. இங்கு நிறையக் கேக் கடைகள் உள்ளன. அவைகளில் சுலபமாக கேக்குகளை வாங்கலாம். ஆனால் எனக்கு விருப்பமில்லை.”

    சிறிய நிசப்தம்.

    “ஏன் என்பதை நான் அறிய முடியுமா கரோலின்?”

    “ஆம்! உங்களது அப்பிள்கள்தாம் காரணம். உங்களது அப்பிள்களைக் கொண்டு சில கேக்குகள் செய்யப்பட்டால் நான் அழைத்திருப்போருக்கு நா விருந்து நிறையக் கிடைக்கும். எனக்கு கேக்குகள் செய்யத் தெரியாது. உங்களுக்கு கேக்குகள் செய்யத் தெரியும் என நான் நினைக்கின்றேன்.”

    “உங்களது நினைப்புச் சரியானது.” எனும் பெரிய பொய்யை அமைதியாகச் சொல்வதில் எனக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படவில்லை. “உங்களுக்கு எவ்வளவு கேக்குகள் தேவை?”

    “5 கேக்குகள். முடியுமா?”

    “முடியும்! எனக்கு அப்பிள் கேக்குகளைத் தயாரிப்பதில் நிறைய விருப்பம். எனது மனைவி என்னைப் பிரிந்தமைக்கு அப்பிள்கள் காரணமாக இருந்தது என்பது எனக்குள் இன்றும் வியப்பாக உள்ளது.”

    “அப்பிள்கள் காரணமாக உங்களைவிட்டு உங்களது மனைவி பிரிந்தாளா? இந்தப் பிரிவு எனக்கும் வியப்பைத் தருகின்றது.”

    “எங்களது காதல் தொடர்பு அப்பிளில் ஏற்படவில்லை. அது மாம்பழத்தில் ஏற்பட்டது.”

    “மாம்பழம் என்றால் என்ன?”

    “இதனை Mangue என பிரெஞ்சு மொழியில் சொல்வார்கள்.”

    ஆ! எனக்கு விளங்குகின்றது. எனக்கு Mangue அழகியதாகப் படுகின்றது, ஆனால் விருப்பம் இல்லை. எனது அப்பாவுக்கு நிறைய அதில் விருப்பம்.”

    “அவருக்கு அப்பிள்கள் பிடிக்காதா?”

    “முன்பு பிடிப்பதில்லை. இப்போது பிடிக்கின்றது. அவருக்கு வயது போய்விட்டது. நீங்கள் செய்யும் கேக் நிச்சயமாக அவருக்குப் பிடிக்கும் என நினைக்கின்றேன். உங்களை நாளையில் எப்போது, எங்கு சந்திக்க முடியும் கேக்குகளைப் பெறுவதற்காக.”

    “உங்களது வீட்டுக்கே வந்து தந்து விடுகின்றேன்.”

    அவள் முகவரியைத் தந்ததும் தொடர்பு முடிந்தது. ஆனால் எனது தலையை இரண்டு கைகளாலும் அடித்தேன். எனது வாழ்வில் நான் ஒரு கேக்கையும் தயாரித்ததில்லை. அவைகளில் எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லுவதுதான் சரி. எப்படிக் கரோலினுக்காக 5 கேக்குகளைத் தயாரிக்க முடியும்? அவைகள் அப்பிள் கேக்குகள். எனது தங்கையின் வீட்டில் அவளது முகம் வாடக்கூடாது என்பதற்காக நான் கேக்குகளை நக்கியதுண்டு. அவளுக்கு போன் செய்து எனக்கு 5 அப்பிள் கேக்குகள் தேவை, நாளைக்கு என்று கேட்டேன். தனக்கு கேக் செய்யத் தெரியாது என்றாள்.

    “உனது வீட்டில் நான் கேக்குகளைப் பலதடவைகள் சாப்பிட்டேன்!”

    “ஆம்! அவை எனது கேக்குகள் அல்ல. கடைகளில் வாங்கப்பட்டது. நீ ஏன் 5 கேக்குகள் வாங்குகின்றாய்? உனது பிறந்த நாள்களுக்குக் கூட நீ வாங்குவது சிறிய கேக். யாருக்காக இந்தக் கேக்குகளை வாங்குகின்றாய்?”

    “உனக்குத் தெரியும் நான் அப்பிள்கள் விற்பது. எனது கடையில் வரும் வாடிக்கையாளர்கள் எப்போதும் அப்பிள் கேக்கை என்னிடம் கேட்கின்றார்கள், அதனை விற்கவேண்டும் என்று அன்புத் தொல்லைகளையும் தருகின்றார்கள். எனது கடையை உலகத்துக்கு அறிவிக்க நான் அப்பிளை மட்டும் விற்கக்கூடாது, கேக்குகளையும் விற்கவேண்டும். நான் வேறு இடத்தில் கேக்குளைத் தேடுவேன்.” எனச் சொல்லிப் பேசுவதை நிறுத்தினேன்.

    எனக்கு முன்னால் இப்போது உள்ளது அப்பிள் அல்ல, கரோலின். அவளது குரல் மிகவும் இனிமையாகவும், தேன்குரல் போலவும் இருந்தது. ஆம்! அவளது உடல் தேவதையின் உடல் என்பது என் நினைப்பு. ஆனால் அவளது முகத்தை ரசிக்க எனக்கு அப்பிள்கள் தேவையில்லை, 5 அப்பிள் கேக்குகள் தேவை. நேரத்தைப் பார்த்தேன். மாலை 07:45 ஆக இருந்தது. அட! பாண் கடைகள் பூட்டப்படும் நேரம் ஆகுகின்றது. வேகத்தோடு கடையையொன்றை நோக்கி ஓடினேன்.

    எனக்குத் தெரிந்த கடை பூட்டப்பட்டுக் கிடந்தது.

    எனக்கு விதி சதி செய்கின்றதோ?

    பாரிஸில் பதட்டப்பட வேண்டியதில்லை. எனது நடை தொடங்கியது. அதனது வேகம் கூடியதற்கு கரோலினின் நினைவும், காணப்படாத அவளது முகமும் காரணங்கள். நான் எனது கடையை பிந்திப்போய்த்தான் திறப்பதுண்டு. இப்போதோ வேகம். கரோலினுக்கு நிறைய நன்றிகள், ஹ்ம்ம் முத்தங்களும்.

    நான் வீதிகளின் பெயர்களைப் பார்க்காமல் நடந்தேன்.

    பாண் மணத்தது தூரத்திலும். நான் கடைக்குள் அமைதியாக உள்ளிட்டேன். வயதுபோன அரபுப் பெண் சில பாண்களின் முன் நின்றாள் .

    அவளது களைப்பான சிரிப்பு எனக்கு உவாதமான மூச்சைத் தந்தது. அவள் அழகிய பெண்ணாகவும், அழகிய தாயாகவும் இருந்தாள். அவளது முகம் எனது அப்பிள்களின் முகங்களைக் காட்டிலும் களை கட்டியிருந்தது.

    “மாலை வணக்கம் அம்மா!”

    “வணக்கம்! எனது மகன் தனது நண்பனது விருந்து அழைப்புக்குச் சென்றதால் நான் அவனுக்குப் பதிலாக இருக்கின்றேன். இது கடையைப் பூட்டும் நேரம். சில பாண்கள் மட்டும்தாம் உள்ளன. உங்களுக்குக் குறைந்த விலையில் தருவேன்.”

    “அம்மா! நான் உங்களிடம் பாண்கள் வாங்க வரவில்லை. உங்கள் கடையில் முன்பு அப்பிள் கேக்குகளையும் கண்டேன், கடை மூடும் வேளையினால் அவைகள் உள்ளே வைக்கப்பட்டு உள்ளனவா? அவைகள் இப்போதும் இருந்தால் எனக்கு 5 கேக்குகள் தேவை.”

    “தம்பி! எனது மகன் கேக் செய்யும் கலையில் பல பட்டங்கள் பெற்றவர். அவர் செய்யும் கேக்குகள் விரைவாக விற்கப்பட்டுவிடும். இன்று அவர் பச்சை, வெள்ளை, சிவப்பு நிற அப்பிள்களில் பல கேக்குகளை தயாரித்திருந்தார். அவைகள் எல்லாம் விற்கப்பட்டுவிட்டன. நாளை கடை பூட்டப்படுவதால், திங்கள் காலை வந்தால் நீங்கள் அப்பிள் கேக்குகளை வாங்கலாம்.”

    அவளது பதிலில் தெளிவு இருந்தது. ஆனால் எனது தலையை வெடிக்கப் பண்ணியது அந்தப் பதில்.

    “அம்மா! உங்களிடம் உதவி ஒன்றைக் கேட்கலாமா?”

    “கேள்!”

    “எனக்கு அவசியமாக 5 அப்பிள் கேக்குகள் நாளை தேவைப்படுகின்றன. நான் உங்கள் மகன் எவ்வளவு காசைக் கேட்டாலும் கொடுப்பேன். நிச்சயமாக அவருக்கு நாளை ஓய்வு தேவைப்படும். சிரமம் பாராமல் எனக்கு 5 கேக்குளை, அப்பிள் கேக்குகளைத் தயாரித்துக் கொடுப்பாரா? நாளை எனக்கு 5 அப்பிள்கள் இல்லாமல் போனால் எனது உயிர் பிரிந்துவிடும்போல இருக்கின்றது.”

    அம்மா எனது முகத்தைச் சாந்தமாகப் பார்த்தார்.

    “தம்பி! உனது காதலியின் பிறந்த தினமா?”

    “ஆம்! அம்மா. எனது காதலியின் பிறந்த தினம்.”

    “ஏன் 5 கேக்குகள் தேவை!”

    “அவளுக்கு நிறைய நண்பிகள் உள்ளன. அவள்களை அழைத்துள்ளாள்.”

    “ஏன் 5 உம் அப்பிள் கேக்குகள்?”

    “அவளுக்குப் பிடித்த பழம் அப்பிள் மட்டுமே.”

    “ஹ்ம்ம்… எனக்கு இப்போது விளங்குகின்றது. எனக்கும் பிடித்த பழம் அப்பிளே. பின்பு எனக்கு என் கணவரைப் பிடிக்காதுவிட்டதுக்கும் அப்பிள்தான் காரணமாக இருந்தது.

    இந்தக் கதை பெரியது. உங்களுக்கு இப்போது சொல்ல நேரமும் இல்லை. நான் அப்துலை அழைப்பேன். உங்களுக்காக கேக்குகளை நாளை தயாரிப்பதற்கு அவனிடம் நேரம் இருக்கின்றதா என்பதைக் கேட்க.”

    அவள் தனது Handphone ஐ எடுத்தாள்.

    அம்மா: “மாலை வணக்கம் அப்துல்.”

    அம்மா: “மூடப்போகின்றேன், சில பாண்கள் மட்டும்தாம் உள்ளன.”

    அம்மா: “இன்று விற்காது விட்டால் நாளை விற்க முடியாது. அதனால்தான் கொஞ்சம் நின்றேன். எனக்கு வயது ஏறிவிட்டது, நான் இப்போதும் பலமாக உள்ளேன்.”

    அம்மா: “எனக்கு முன் ஓர் அழகிய ஆண் உள்ளார். உன்னைப்போல இளையவர். அவருக்கு நாளை 5 அப்பிள் கேக்குகள் தேவை. நாளை நீ வேலை செய்யாதுவிட்டாலும், எனக்கு முன் நிற்கும் தம்பிக்கு உதவி செய்வாயா? அவர் கேட்கும் அப்பிள்கள் அவனது காதலியின் பிறந்த தினத்துக்காக.”

    அம்மா: “அப்துல் உனக்கு நிறைய நன்றி. என்றும் போல உனக்கு 1000 முத்தங்கள். நாளை எப்போது அவர் இங்கு வருவார் கேக்குகளைத் தேட என்பதை நான் கேட்பேன். உனது மனைவிக்கும், எனது பேரப் பிள்ளைகளுக்கும் 1000 முத்தங்கள்.”

    அம்மா: “முத்தங்கள். தம்பி! எத்தனை மணிக்கு உங்களுக்குக் கேக்குகள் தேவை?”

    “மதியம் 12 மணிக்கு.” எனச் சொல்கின்றேன்.

    அம்மா: “நன்றி. கேக்குகளைக் கொடுத்துவிட்டு எனது வீட்டில் சாப்பிடு. நான் நாளைக்கு ஆடு சமைக்கப் போகின்றேன். அதனது தலையும் உள்ளது. தலையை நீ உனது வீட்டுக்குக் கொண்டு போ.”

    அம்மாவிற்கு நான் நிறைய நன்றிகளைச் சொன்னேன். அவளது கிருபையினாலேயே எனக்குக் கிடைக்கப் போவது 5 அப்பிள் கேக்குகள். அவைகளை என் கேக்குகளாகச் சொல்லலாம். நான் வெளியே திரும்பும் வேளையில், நான் வேண்டாம் என மறுத்தும் அம்மா எனக்கு 2 பாண்களைத் தந்தார். அவைகள் சுடவில்லை. ஆனால் அவளது அன்பால் எனது இதயம் சுடப்பட்டது.

    இன்றைய இந்த இரவு ஒருவேளை எனக்கு நரகமாகவும் இருந்திருக்கலாம். இது கொஞ்சம் சொர்க்கத்தைக் காட்டியதற்குக் காரணம் நாளை வரப்போகும் கேக்குகள்.

    கட்டிலில் கிடந்தபோது நான் நாளை முதலாவதாகப் பார்க்கும் கரோலினின் முகம் தெரிந்தது. சில கணங்களில் எனக்குள் ஓர் கேள்வி. இந்தக் கேள்வி பெரிதாக வளர்ந்தது. எனக்கு நாளை 5 கேக்குகளும் நிச்சயம் கிடைக்குமா? நாளை தனக்குக் களைப்பென்று வராமல் விடுவானா அப்துல்?

    எனக்குக் கடவுள் பக்தி இல்லை. இப்போது பக்தி வந்தது. “கடவுளே! நான் ஒவ்வொரு தினமும் உங்களுக்காக விரதம் இருப்பேன். நாளை 5 கேக்குகளையும் அப்துலைச் செய்ய விடுங்கள்!”. பின் நான் தூங்கிவிட்டேன், கரோலினை அணைத்து , முத்தமிட்டு, வாத்சாயன வித்தைகளை துடிப்போடு செய்துவிட்டுத் தூங்கினேன். எனது தூக்கத்தில் கேக்குகளே கனவுகளாக வந்தன. அவைகளில் சில அழகியன, பல அபாயகரமானவை.

    ⏩⏩⏩⏩⏩⏩

    12 மணிக்கு முன் நான் பாண் கடைக்கு வந்தேன். மூடப்பட்டுக் கிடந்தது. எனக்குள் ஆத்திரம் அம்மாமீது. அது திறக்கப்படுமா? 12 மணிவர 20 நிமிடங்கள் இருந்தன. எனது ஆத்திரம் அர்த்தமுள்ளதா? அம்மா எனது பணத்தைப் பெறுமுன்னர் அப்துலை 12 மணிக்கு கடையில் சந்திக்குமாறு சொல்லியிருந்தாள். எனது அவதியை நான் திட்டிக் கொண்டேன். இந்த 20 நிமிடங்களும் எனக்கு 20 மணித்தியாலங்களாகப் பட்டன. 20 நிமிடத்தின் பின்னர் கடை திறக்கப்படாமல் விட்டால், எப்படிக் கேக்குகள் கிடைக்கும்? எப்படிக் கரோலினைப் பார்ப்பேன்?

    பாண் கடைக்கு முன்னால் சிறு வீதி. அது வளைந்து கிடந்தது. இந்த வளைவுக்குள் சில கணங்கள் நடந்தால் என்ன? எனக்கு அழகியதாகப்பட்டது இந்த வீதியும் வளைவும். நடை தொடங்கியது. சிறிய வீதிக்குள் பல வாசனைத் திரவியங்கள் விற்கும் கடைகள். அவைகளைக் கண்டபோது எனக்கு கரோலின் நினைவு வந்தது முகம் தெரியாதபோதும்.

    அவளது பிறந்த தினம் இன்று. அப்பிள்களோடு மட்டும் போவதா? என் சார்பில் ஒரு தனித்துவமான அன்பளிப்பு? அது சரியானதுதானா? அவள் எனது வாடிக்கையாளி. காதலியா? ஆம்! அவளில் எனக்குக் காதல் உள்ளது. ஒருவேளை அப்பிள் காதலாக அது கருதப்படலாம். அது எனது விருப்பு. உண்மையைச் சொன்னால் எனது வாடிக்கையாளிகள் எல்லோரும் தேவதைகளே. இப்போது கரோலினுக்கு அப்பிள் கேக்குகள்தாம் தேவை… பரிசு பின் வரும் தினங்களில்.

    வளைந்த வீதியை விட்டுப் பாண் கடையை நோக்கி நடந்தபோது அது திறக்கப்படவில்லை. ஆனால் கண்ணாடியின் பின்னர் ஒருவர் தென்பட்டார்.

    நான் கையைக் காட்டி “கேக்” எனச் சொன்னேன். கதவு திறப்பட்டது.

    “நான் அப்துல்! உங்களது 5 கேக்குகளும் தயார். எனக்கு நேரம் இல்லாததால் கேக்குகளை விரைவாக எடுங்கள்.”

    “மிகவும் நன்றி கேக்குகளுக்கு.” என்றபடி 20 ஈரோவை நீட்டினேன்.

    “நீங்கள் அம்மாவிடம் கொடுத்த பணம் போதுமானது.” என அவர் கடையைப் பூட்டத் தொடங்கினார்.

    5 கேக்குகளும் பாரமாக இருந்தன. ஒரு மணி நேரத்தில் அவளிடம் கேக்குகள் கொடுக்க வேண்டும். அவளது முகம் தெரியாது. ஆனால் அதை ரசித்தேன். அவளது முகத்தின் அழகு….. ஆம்! அழகேதான்….. எனது இதயத்தைத் தடவியது.

    இலக்கியத்தை விட்டு அப்பிள்கள் விற்றதால் எனக்குக் கரோலின்…. அவள் எனக்கு ஓர் புது அப்பிள்போல….

    பின் நவீனத்துவ, Pop Art கவிதை போலும்.

    டாக்சியில் ஏறினேன். ஓட்டுனர் பாதுகாப்பாக கேக்குகளை அடுக்கினார்.

    “ஹ்ம்ம்ம்! சுவையான வாசம்.”

    “அவை அப்பிள் கேக்குகள்! எனது காதலியின் பிறந்த தினத்துக்காக.”

    “பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என நினைக்கின்றேன்.”

    “ஆம்! அவளது நிறைய நண்பிகள் வருகின்றனர்.”

    “நானும் வரலாமா? எனக்குக் காதலிகளே இல்லை……. இதை ஜோக்காகச் சொன்னேன். எனக்கு நிறையக் காதலிகள் உள்ளனர். எனது டாக்சியில் தனிப் பெண்கள் பயணம் செய்தால் அவள்களை வளைப்பது சுலபம். இதுதான் நீங்கள் இறங்கவேண்டிய இடம்.”

    நான் இப்போது வெளியே.

    அவள் எனக்குத் தந்த இலக்கத்தின் முன் போன் கபின் இருக்குமாறும், என்னை அதன் முன் நிற்குமாறும் சொன்னாள். அது அசுத்தமான பழைய போன் கபின். அதற்குள் போன் கூட இல்லை. உதவாத கபின் ஏன் அங்கு என்று கேட்காமல் நான் கரோலினின் முகத்தைக் கனவு செய்தும், தேடிக் கொண்டுமிருந்தேன்.

    பன்னிரண்டு பத்து. ஆனால் அவளைக் காணவில்லை. அந்த வீதியில் ஆண்களே நடந்தனர், பெண்கள் இல்லை. பெண்கள் நிச்சயமாகப் பிந்தல் கலாச்சாரிகள். எனது முதல் காதலி எனக்குத் தந்த நேரம் ஒரு மணி. அவள் 3 மணிக்குத்தான் வந்தாள். இந்தக் காத்திருப்பில் சுகம் உள்ளது.

    “வணக்கம்!”

    என்னைத் தட்டியெழுப்பியது என் பின்னால் கேட்ட ஆண் சொல்.

    “உங்களைத் தாமதப் படுத்தியதற்காக மன்னிக்கவேண்டும். வேகமாக இந்த கேக்குகளைச் செய்ததற்கு மிகவும் நன்றி. இவைகளின் மணம் சுகமாக உள்ளது. கரோலின் இந்த மணத்தைத் தியானிப்பாள்”

    நான் அவரைப் பார்த்தேன். முதியவர். ஆனால் திடமான உடலோடு. அவரது முகத்தில் செழிப்புப் புன்னகை இருந்தது.

    “அப்பிள்களை நானும் கரோலினும் விரும்புவதுண்டு. மிகவும் சுவையானவைகளை உங்களது கடையில் மட்டும்தான் வாங்கலாம். நானும் ஓய்வு, அவள் சில வாரங்களின் முன்புதான் ஓய்வு எடுத்தாள். அவளது நண்பிகள் பலர் வந்துள்ளனர் அவளது பிறந்த தினத்துக்காக.. உங்கள் கடையைப் பற்றியும், உங்களது அப்பிள்கள் மீதும்தான் அவள்களிடம் பேசிக்கொண்டுள்ளாள். உங்களுக்கு நிச்சயமாக நிறைய ஓய்வு பெற்ற பெண்கள் வாடிக்கையாளர்களாகுவார்கள். அவள் ஓய்வு பெற்ற பெண்களது அமைப்பின் தலைவி.

    “இது ஓர் அப்பிள்களின் நாடு. முன்பு நாம் இதமான அப்பிள்களைச் சுவைத்தோம். இப்போதோ போலி அப்பிள்களே விற்கப்படுகின்றன. ஆனால் உங்களிடமோ தரமான, அழகான அப்பிள்கள். எனக்கு நேரம் இல்லை…… “ என்ற போது ……………….

    “நான் வீட்டுக்குக் கொண்டுவந்து தருகின்றேன்…..”

    “உங்களுக்குத் தொல்லை வேண்டாம். உங்களது கேக்குகள் பாரமானவையல்ல. சீனி குறைவாக இருக்கும் எனக் கருதுகின்றேன். இது சிறப்பானது. உங்களுக்கு நிறைய நிறைய நன்றி.”

    அவர் திடமாக நடக்கத் தொடங்கினார்.

    பின்.

    “மன்னிக்கவேண்டும்! உங்களது கேக்குகளின் பணத்தை கரோலின் நாளை காலையில் உங்கள் கடைக்கு வந்து தருவார். பணத்தை விட ஓர் பரிசும் உங்களுக்கு உள்ளது. நான் அது எனச் சொல்லமாட்டேன்.”

    எனது அப்பிள் கடையை மூடுவதாக நினைத்தேன் இந்தக் கணத்தில்.

    ஆம்! இது ஓர் நினைப்பு மட்டுமே.

    (தொடக்கம் 15 வருடங்களின் முன்பு, முடிவு 06/11/2015 -22.50)

    (காலச்சுவடு 2016, தமிழ்நாடு, இந்தியா)

    Save

    Postad



    You must be logged in to post a comment Login