Recent Comments

    பொறுப்புள்ள பார்த்தசாரதியாகி விபத்துக்களைத் தவிருங்கள் -2

    வாகனத்தின் ஹோர்ணை மற்றச் சாரதிகளின் கவனத்தை ஈர்க்கப் பயன்படுத்துங்கள்.  உங்கள் கோபத்தைக் காட்டுவதற்கு அதைப் பயன்படுத்தப் போய், ஆபத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அருகில் போகும் வாகனத்தின் குருட்டுப் புள்ளிக்குள் நீண்ட நேரம் நிற்காதீர்கள். அந்த வாகனக்காரர் நீங்கள் இருப்பதை உணராமல் பாதை மாற்ற நேரிட்டால், இரண்டு பேருக்குமே ஆபத்து. சிவப்பு விளக்கில் தரித்திருக்கும்போது, முன்னால் நிற்கும் வாகனத்திற்கு மிக நெருக்கமாக நிற்காதீர்கள். உங்கள் வாகனத்தை அடுத்த பாதைக்கு திருப்ப வசதியான இடத்தை விட்டு வைப்பது நல்லது. இடப் பக்கம் திரும்புவதற்கு வீதியின் நடுப்பகுதியில் நிற்கும்போது, உங்கள் சக்கரங்களை நேராக வைத்திருங்கள். திருப்பி வைத்திருந்தால், பின்னே வருபவர் உங்களை மோதினால், உங்கள் வாகனம் எதிரே வரும் வாகனங்களோடு மோத நேரிடலாம். மஞ்சள் விளக்கு நீங்கள் வாகனத்தை வேகம் குறைப்பதற்காகவே அன்றி, வேகத்தைக் கூட்ட அல்ல. சிவப்பு விளக்கு வருவதற்குள் கடக்க முடியாவிடில், மெதுவாக கடவுங்கள். சிவப்பு விளக்கு வரப் போகிறது என்று தெரிந்தும் கடக்க முயற்சிக்காதீர்கள். அடுத்த பாதையிலிருந்து உங்கள் பாதைக்குள் வர சிக்னல் போட்டவர்களுக்கு பெருந்தன்மையுடன் இடம் கொடுங்கள். வேண்டுமென்று இடம் விடக் கூடாது என்பதற்காக முன் வாகனத்தின் பின் புறத்தை முத்தமிடாதீர்கள். நீங்கள் செய்யும் இந்தப் புண்ணியம் வேலை செய்து, பின் எப்போதாவது எங்காகிலும் நீங்கள் உள் நுழையும்போது மற்றவர்கள் இடம் தந்தால், கையசைத்து நன்றி தெரிவியுங்கள். உங்களுக்கு இடம் தர வேண்டியது அவர்களின் வரலாற்றுக் கடமை என்ற உணர்வில் பேசாமல் போகாதீர்கள். அவ்வப்போது வாகனம் ஓட்ட லாயக்கற்றவர்களைச் சந்திக்க நேரிடலாம். உங்கள் அவசரம் தெரியாமல், மாமியார் வீட்டுக்குப் போவது போல, அவர்கள் மிக மெதுவாக மாட்டு வண்டிக் கணக்கில் உருட்டிக் கொண்டு போவது கோபத்தை வருவிக்கலாம். கோபம் வராமல் பொறுமை காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வாகனம் ஓட்ட ஆரம்பித்த காலத்தில் உருட்டிக் கொண்டு தானே போயிருப்பீர்கள். சில நேரங்களில் விதிமுறைகள் தெரியாமல், குதிரையோடி அனுமதிப் பத்திரம் எடுத்தவர்களும், மனைவீ மீதான கோபத்தை வாகனத்தின் மீது காட்டுபவர்களும், 'எவன் வந்து பின்னால் இடிப்பான், காப்புறுதிப் பணம் எடுக்கலாம்' என்ற நினைப்பில் அலைபவர்களும் என பல சனிபகவான் அவதாரங்கள் அவ்வப்போது விதிவசத்தால் வந்து தொலைப்பார்கள். முன்னே போகும்போது காரண காரியமில்லாமல் நடுவீதியில் காரை நிறுத்துபவர்கள் முதல் மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை மனதில் கொள்ளாமல், குறுக்கே பாய்பவர்கள் வரைக்கும் ஊருலகத்தில் பல பிரகிருதிகள் வாகனம் ஓட்டுகிறார்கள். விபத்து நேராமல் வீடு சேர்வது எமது சாதுரியத்தில் மட்டுமல் அல்ல, எங்களைச் சூழ உள்ள பார்க்காத சாரதிகளின் கையிலும் உள்ளது. வாகனத்தில் ஏறி வீரமோ, விலாசமோ காட்ட முயற்சிக்காமல், விவேகத்தைக் கடைப்பிடியுங்கள். உங்கள் வாகனத்தில் பயணம் செய்பவர்களின் உயிர் உங்கள் பொறுப்பில் என்பதை உணர்ந்து, பொறுப்புணர்வைக் கடைப் பிடியுங்கள். பிள்ளைகளை அருகில் வைத்துக் கொண்டு மற்ற சாரதிகளை தூஷணத்தில் திட்டாதீர்கள். அருகில் உள்ள காதலிக்கு விலாசம் காட்ட ஸ்டண்ட் வேலைகளில் ஈடுபடாதீர்கள். பொலிஸ்காரர் மறித்தால், காதலி முன்னால் அசடு வழிய வேண்டி நேரிடலாம். கோபத்தில் மற்றச் சாரதிகளுக்கு நடுவிரலைக் காட்டப் போய், சில நேரங்களில் மூக்குடைபடவும் நேரிடலாம்.        வாகனம் ஓட்டுவதென்பது உரிமையல்ல, சலுகை. பொறுப்பான பார்த்தசாரதியாய் இருங்கள்! எங்களுடைய பாதுகாப்பு எங்கள் கையில் தான் உள்ளது என்பதை நினைவில் கொண்டு, வாகனத்தை ஓட்டினால், அருகில் உட்கார்ந்திருக்கும் அர்ச்சனாக்களின் அர்ச்சனைகள் இல்லாமல் மாமி வீடு போய் சேரலாம். தன்னுடைய உயிருக்குயிரான மகளை கண் கலங்காமல் காக்கும் உங்களுக்கு உங்கள் மாமி முட்டைக் கோப்பி போட்டுத் தரக்கூடும். (நமக்கு அந்தப் பாக்கியம் இன்று வரைக்கும் இல்லை!)

    Postad



    You must be logged in to post a comment Login