Recent Comments

    தாமரையின் தர்ணாவும், தியாகுவின் ‘துரோகமும்’

    ஜோர்ஜ் இ.குருஷ்சேவ்

    thayagam featured-thamaraiமுகப்புத்தகத்தில் அவ்வப்போது கிளம்பும் 'சமீபத்திய சர்ச்சை'கள் (latest scandals) பற்றி எதையாவது எழுத வேண்டும் என்று தோன்றி, எழுதுவதற்குள் அவை தேடிப் பிடிக்க முடியாதபடிக்கு தலைமறைவாகி விடும். மாதொருபாகன், பதினொரு பேய்கள் பற்றி யாருக்காவது ஞாபகமிருக்கிறதா? அதைப் பற்றி இப்போது எழுதப் போனால்... 'உதெல்லாம் ரொம்பப் பழசு, பாஸ்' என்று யாராவது நடிகனின் படத்தைப் போட்டு பின்னூட்டம் விட்டு மானத்தை வாங்க ஆள் நிறைய உண்டு. இந்த முகப்புத்தகத்து வழிப்போக்கனுக்கு, வழியில் மக்கள் திரள் கூடி நின்று விடுப்புப் பார்ப்பதும், அன்றைய சர்ச்சைகள் பற்றி அலசி ஆராய்வதும், பிரபஞ்சத்தில் நமது இருப்பை மற்றவர்களுக்கு உறுதி செய்து, 'நானும் உள்ளேன் ஐயா' என்று பின்னூட்டம் விடும் அளவுக்கு பெரிதும் ஆர்வத்தைக் கிளப்பாவிடினும், அவ்வப்போது போகிற போக்கில் ஒரு பின்னூட்டத்தைப் போட்டு விட்டு, திரும்பிப் பார்ப்பதற்குள், பேசாமல் தலைமறைவாகின்ற பழக்கம் புதிதாகத் தோன்றியிருக்கிறது. தற்போதைய கவிஞர் தாமரை, தியாகு சர்ச்சை எழுந்த போதும், மனதை உறுத்திய பெருவிடயம் ஒன்று அது பற்றிக் கருத்துக் கூற உந்தியது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்தக் கருத்துப் போய் சேராமல், வேறெங்கோ நடக்கும் சம்பாஷணையில் பின்னூட்டம் விட்டுப் பயனில்லை என்ற எண்ணம் மேலிட்டது. இருப்பினும் மனம் கேளாமல் நண்பர் ஒருவரின் பதிவில் பின்னூட்டம் விட்டாயிற்று. 'குடும்ப விவகாரங்களில், வெறும் பெண்ணிய, ஆணாதிக்க, அனுதாப prejudiced கருத்துக்களைத் தவிர்த்து, இரு தரப்பினரதும் நியாயங்களைக் கேட்ட பின்னால் தீர்ப்பளிப்பது எல்லாருக்கும் நல்லது. தங்கள் வேறுபாடுகளைத் தெருவிற்கு கொண்டு வருபவர்களும், தெருவுக்கு வரக் காரணமானவர்களும் குறைந்த பட்சம் அந்தக் குழந்தையின் நலனை கருத்தில் கொள்வது நல்லது.' இது தான் பின்னூட்டம். அது கூட, பரிதாபப்பட்டோ அல்லது பிரதியுபகாரமாகவோ, நண்பர் விட்ட லைக் உடன் அங்கே கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. இதில் தாமரை சினிமாப் பாடலாசிரியை என்ற விடயம் இப்போது தான் தெரியும். அதைவிட, தியாகு யார் என்று விசயமறிந்தவர்களைக் கேட்டு, சிறையில் இருந்தவராம் என்ற பதிலின் பின்னால், நீண்ட நாட்களுக்கு முன்னால் ஜுனியர் விகடனில் தொடர் எழுதியதைக் கண்ட ஞாபகம். (அட, எந்த உலகத்திலே இருக்கிறாய்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.) ஆகவே, அது பற்றிக் கருத்துச் சொல்வதற்கான தகுதி எனக்கில்லை என்று பலரும் வரிந்து கட்டலாம். பின்னர் தொடர்ச்சியாக வெளிவந்த விடயங்கள் ஆர்வத்தை உண்டு பண்ணி, இது குறித்த என் IQ வை அதிகரித்ததை ஒப்புக் கொள்ள வேண்டும். தியாகு ஏதோ ஒரு இடது சார்ந்த அரசியல் இயக்கத்தில் இருப்பது. தியாகு இலங்கை விவகாரம் தொடர்பாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததான செய்தி. (தமிழ் உலகத்தில் மட்டும் தான், சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து, சாகாமல் மரணத்தை வென்ற மாவீரர்கள் எக்கச்சக்கமாக உள்ளார்கள் போலிருக்கிறது, ஈழப்போராட்டத்தில் திட்டமிட்டு சாகடிக்கப்பட்ட ஓரிருவரைத் தவிர! தமிழுணர்வாளர்கள் அமைதி காக்க! வேறு தளங்களில் நாங்கள் பொருதலாம். அவசரம் வேண்டாம்!) தாமரைக்கும் தியாகுவுக்குமான வயது வித்தியாசம் முதல் தியாகுவின் முதல் திருமணம், அது குறித்த தாமரையின் நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும், தியாகுவின் பிந்திய தொடர்புகள் என கிசுகிசு தரத்திலான செய்திகளுடன் அறிவைப் பெருக்க முடிந்தது. இந்த அனாவசிய அறிவு எல்லாம் அஜித்தின் புதிய குழந்தை, தனுஷ் - சிவகார்த்திகேயன் லடாய் போன்ற வாழ்வுக்கு ரொம்பவும் அத்தியாவசியமான ரகத்தினவையே. எனவே அந்த உலக சஞ்சாரம் நமக்கு என்றும் அன்னியமான ஒன்றே, பிரியதர்மிணி அவ்வப்போது அப்டேட் செய்வதும் ஆங்காங்கே கண்ணில் படுவதும் தவிர! ஆனால் இதை வெறும் பிரபலங்களின் கிசுகிசு ரக சுவாரஷ்யங்களுக்குள் அடக்க முடியாமல் இருந்தது. காரணம், என்னுடைய அக்கறை முழுக்க முழுக்க அந்தக் குழந்தையிலேயே இருந்தது. எனவே, இந்தக் கருத்தை எப்படியாவது தாமரையைப் பார்க்க வைக்க வேண்டும் என்று உந்தப்பட்டு, அவரது முகப்புத்தகப் பக்கத்தில் போட, தாமரையின் தற்காலிக நண்பராக எடுத்த முயற்சிக்குத் தடையாக, அவருக்கு ஏற்கனவே நிறைந்திருந்த நண்பர் தொகை இருந்ததால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறித்து எந்த மன வருத்தமும் இல்லை. (ஆமா, அந்தப் பெரிய கவிஞைக்கு நண்பராக, இந்த மூஞ்சிக்கு அப்படி ஒரு எண்ணமும் இருந்ததோ?) இப்போது பொதுவாழ்வில் ஈடுபடுவோரின் குடும்ப வாழ்வு literally and figuratively தெருவுக்கு வந்த பின்னால், அதுபற்றி தெருவோர வாசிகளும் வழிப்போக்கர்களும் கருத்துச் சொல்வது தவிர்க்க முடியாததே. அவ்வுலகத் தகுதிகள் எனக்கு இல்லாவிட்டாலும், குடும்பச் சண்டைகளை Ringside Seat இல் உட்கார்ந்து பார்க்கும் பாக்கியம் நிறையக் கிட்டியிருக்கிறது. அதிலும் புலன் பெயர்ந்த வாழ்வு கொடுத்த அழுத்தங்களும் வசதிகளும் இவ்வாறான காட்சிகளை வீடுகள் தோறும் காண வைத்திருக்கிறது. குடும்பத் தகராறுகளில் விலக்குப் பிடிக்க உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டதும், உத்தியோகப்பற்றற்ற முறையில் ஆஜராகியதும் உண்டு. ஆனால், எந்தக் கட்டத்திலும் ஒரு தரப்புக் குற்றச்சாட்டுக்களை மட்டுமே கருத்துக்கு எடுத்து தீர்ப்பளிக்கும் பழக்கம் ஒரு நாளும் இருந்ததில்லை. இவ்வாறான விடயங்களைக் கேட்டு நம்மிடம் கருத்துச் சொல்ல வருபவர்களிடமும் இது அடிக்கடி வலியுறுத்தப்படும் ஒன்று. காரணம், சொல்லப்படுபவைகள் யாவும் உண்மையாக இருப்பதும் இல்லை. உண்மைகள் யாவும் சொல்லப்படுவதுமில்லை. தங்கள் தரப்பை நியாயப்படுத்துவதற்காகவும், தங்கள் குற்றங்களை மறைப்பதற்காகவும், பழி வாங்கும் குரூர இயல்புடனும் சொல்லப்பட்ட கதைகள் எல்லாவற்றையும் ஆண், பெண் இருதரப்பினரிடம் இருந்தும் கேட்ட அனுபவம் நிறைய உண்டு. இந்த வகையில் தான் தாமரையின் குற்றச்சாட்டை அணுக வேண்டியிருக்கிறது. ஆனால், இந்த தர்ணா சீன், யுத்த முனையிலிருந்து நேரடி றிப்போர்ட் எல்லாம், இடுப்பிலே தாலியைச் சொருகி வைத்திருந்து நாயகனை தாலி கட்டும்படி துரத்துகின்ற தமிழ்ச் சினிமாவுக்கு பொருத்தமாயிருக்கலாம். 'கொண்டவளைத் துறந்தேன், கண்டவள் பின் சென்றேன்' என்று தியாகு மனம் திரும்பி வருவார் என இதே சினிமாவுக்குப் பாட்டு எழுதும் தாமரை நினைத்திருக்கக் கூடும். ஆனால் நிஜவாழ்வுக்கு கொஞ்சம் ஓவர். வழமை போல தன்னை ஒரு victim ஆகக் காட்ட முனையும் தரப்பினரைப் போலவே தாமரை நடந்து கொள்கிறாரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. தாமரை ஒன்றும் வெளியுலகம் தெரியாத 'மாட்டுப்பெண்' இல்லை. இவர் பெண்ணிய வாதியா என்ற விவகாரம் எனக்குத் தெரியாது. ஆனால், தனது சொந்தக் காலில் நின்று உழைப்பவர். தன்னுடைய உழைப்பில் ஒட்டுண்ணியாக இருந்த ஒருவருக்கு உழைத்துப் போட்டதாக வேறு உரிமை கோருகிறார். ஆனால், உழைக்க வக்கில்லாமல், பெண்டாட்டியின் உழைப்பில் சாப்பிட்ட ஒரு ஓடுகாலியைத் தன்னோடு சேர்த்து வைக்கும்படி போராட்டம் நடத்தும் போது தான் கொஞ்சம் இடிக்கிறது. தன்னோடு வாழ விரும்பாத ஒருவனை, கட்டாயப்படுத்திச் சேர்த்து வையுங்கள் என்பது, என்ன வகையான எதிர்காலத்தைத் தரப் போகிறது? திரும்பவும் உட்கார வைத்துச் சாப்பாடு போடும் 'கல்லானாலும் கணவன்' எண்ணத்திலா? சரி, குழந்தைக்குத் தந்தை வேண்டுமென்றாலும், இவ்வாறான தந்தை எம்மாதிரியான முன்மாதிரி? தாமரை தியாகுவை மணம் புரிந்த சூழ்நிலைகள் பற்றியே பலத்த கேள்விகள் உண்டு. இன்னொரு குடும்பத்தைக் கைவிட்டு, தன்னோடு வருபவன் தன்னையும் அதே போல நட்டாற்றில் விட்டு, தலைமறைவாக மாட்டான் என்ற உறுதி தாமரைக்கு எங்கிருந்து கிடைத்தது? பழைய சம்பவங்களை விசாரணை செய்ய வேண்டும் என்றால், இவரோடு சேர்ந்திருந்து வாழ்ந்த காலங்கள் உட்படத் தானே! அப்போது காதல் கண்ணை மறைந்திருக்கக் கூடும். இப்போது அறிவுக் கண்கள் திறந்தனவோ? ஏதோ ஒருவகையில் பழிவாங்கி, அவமானப்படுத்துவது தான் இதன் அடிப்படை நோக்கமாக இருப்பதாகவே படுகிறது. 'வெத்துவேட்டுக் கொள்கை பேசும் ஆணாதிக்க தியாகு ஒரு அப்பாவிப் பெண்ணுக்கும் மகனுக்கும் இழைத்த அநீதிக்கு' எதிரான, கண்ணகிப் போராட்டமாக இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கணவனின் கொடுமைகளுக்குள்ளால், பிரிந்து போக முடியாமல் துன்பத்திலேயே அவலப்படும் பெண்களுக்கும், இன்பத்திற்கான பொருளாய் பயன்படுத்தி மறையும் ஓடுகாலிகளை நம்பி வாழ்வைத் தொலைத்தவர்களுக்கும் முன்மாதிரியாக, சவால் விட்டு, தனது சொந்தக் காலில் வாழ்ந்து காட்ட வேண்டிய ஒருவர், திடீரென்று தான் காதல் கொண்ட, தியாகுவின் 'புரட்சி உணர்வு' பற்றிக் கேலியும் கிண்டலும் செய்வது பொருத்தமானது இல்லை, அதுவும் இத்தனை ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பின்னால்! வழமையான தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கான 'துரோகமிழைத்து விட்டான்' என்கிற புலம்பல் பல்லவியை தாமரை இசைப்பதாகவே தெரிகிறது. மறுபுறத்தில் தியாகு இடதுசாரிச் சித்தாந்தத்திற்கு தன் வாழ்வை அர்ப்பணித்த பிம்பம் தான் எனக்குத் தெரிகிறது. தங்களைச் சேகுவேராக்களாக நினைக்கும் புரட்சிவாதிகளில் பலர், சேகுவேராவின் தனிப்பட்ட வாழ்வையும் முன்மாதிரியாக கொள்வது தங்களை முழுமையான சேகுவேராக ஆக்கக் கூடும் என நினைக்கிறார்களோ தெரியவில்லை. சென்ற இடமெல்லாம் விதைக்கும் பழக்கத்தை, சேகுவேரா வாழ்ந்த இடங்களில் உள்ள சமூக அமைப்பு முறைகள் ஒரு சாதாரண விடயமாக்கியிருக்கலாம். இன்று இவர்கள் இருவரும் தூக்கிக் கொண்டாடுகிற தமிழ்த் தேசிய நடைமுறைகள் வித்தியாசமானவை தானே. பொதுவாழ்வில் ஈடுபடும் ஒருவர் தனிப்பட்ட வாழ்வில், ஒழுக்க சீலராக வாழும் அறத்தைக் கைக்கொள்ளாதது பற்றி பலரும் இன்று தியாகுவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்கிறார்கள். உத்தியோகபூர்வமாகவே மனைவி, துணைவி என்று வருமானவரிக்கு சொத்துக் காட்டுபவர்கள் முதல் தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அழகான பெண்களைத் தூக்கி வந்து பலவந்தமான உறவு வைப்பவர்கள் வரையுள்ள அரசியல்வாதிகளிடம் இந்தக் கேள்வியை யாரும் கேட்டதைக் கண்டதில்லை. தியாகு அதிகாரத்தில் இல்லாத அரசியல் பேசுவதால், தியாகு மீது பொறாமைப்பட்டவர்களும் (பார்றா, அவனுக்கு வந்த நேரத்தை!), நழுவவிட முடியாத அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் தியாகுவின் அரசியல் எதிரிகளும், சும்மா வழிப்போக்கர்களும் தர்ம அடி போட வசதியாக இருக்கிறது. இவர்களில் பலரும் கண்ணாடி வீடுகளிலிருந்து கல்லெறிபவர்கள் தான். ஏகபத்தினி விரதர்களோ, படிதாண்டாப் பத்தினிகளோ என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. அவர்களின் மனச்சாட்சிகளுக்குத் தெரியும். இப்படி ஒழுக்கசீலர்கள் தான் பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும் என்றால், உலகில் இன்று தூக்கிக் கொண்டாடப்படும் பலருடைய சிலைகளை உடைத்துக் குப்பைக் கூடைக்குள் தான் போட வேண்டியிருக்கும். ஒழுக்கசீலர்களாக வாழ்ந்து, தங்கள் சொத்துக்களையே இழந்து, சமூகத்திற்காகவே மடிந்தவர்களுக்கு இந்தச் சமூகங்கள் என்ன பரிசளித்தன என்பது ஒன்றையும் நாங்கள் மறந்து விடவில்லை. புனிதப் போராளிகள் என்று தொடங்கி போய்ச் சீரழிந்ததையும் இங்கே ஞாபகமூட்ட வேண்டியதில்லை. எனவே தான், குறைந்த பட்ச நேர்மை என்பதை வலியுறுத்த வேண்டியிருக்கிறது. சொந்தமாகத் தன் வாழ்வுக்கும் குடும்ப வாழ்வுக்கும் உழைக்காமல் உலகத்தை மாற்றும் சிந்தனையாளர்களில் நான் நம்பிக்கை கொண்டதில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் தன் நாளாந்த வாழ்வுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாய தேவை உண்டு. அப்படி இல்லாதவன் பட்டினத்தாரின் உலக வாழ்வை நிராகரித்த 'காயமே இது பொய்யடா!' வாழ்வு வாழ்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் உலகத்தை மாற்றியமைக்கும் சிந்தனைக்குப் போவது எந்தப் பொருத்தமும் இல்லை. தனிமனிதர்கள் கட்சி வேலைகளுக்கு தங்களை அர்ப்பணித்து வேலை செய்வதில் தப்பு இல்லை. ஆனால் வெறும் சித்தாந்தம் பேசுவதால் குடும்பத்தின் வயிறு நிறைந்து விடுவதில்லை. கணவனின் இலட்சியப் போராட்டம் நிறைவேற, மனைவி சம்மதித்து உழைத்துக் கொடுக்க முன்வந்தால், அது இன்னமும் நன்றாக இருக்கும். தாமரை, தியாகுவின் குடும்ப உறவிலும் இவ்வாறான ஒப்பந்தம் இருந்ததோ, யாரறிவார்? சிந்தாந்தம் பேசுவது, மனிதனை அவனது தனிப்பட்ட வாழ்வின் கடமைகளிலிருந்து விடுவிப்பதில்லை. அப்படி விடுவிப்பது உலக வழமை என்றால், அந்த வாழ்வு வாழ எனக்கும் பிடிக்கும். சிந்தாந்தம் பேசிக் கொண்டே, தெருவுக்கு ஒரு தோழியரை வைத்திருக்க! அல்லது இன்னொரு 'ஆத்மார்த்த தோழியைக்' கண்டவுடன் முன்னாள் 'ஆத்மார்த்த தோழியைக்' கைகழுவ! 'எல்லாமே அக்கரைப் பச்சை தான்!' என்ற நிதர்சனமான உண்மை தெரிந்ததால், 'எதற்கு அனாவசிய தலையிடி?' என்ற நினைப்பு நமக்கு வந்ததில் என்ன ஆச்சரியம்? ஆனால், தங்கள் இலக்கியப் பிரபலத்தையும், துப்பாக்கியால் கிடைத்த போராட்ட அதிகாரங்களையும் பயன்படுத்தி, தங்கள் சுய இச்சைகளுக்குப் பெண்களைப் பயன்படுத்திய மாமேதைகளையும், மாவீரர்களையும் பற்றி, கைவிடப்பட்டவர்கள் முகப்புத்தகப் பதிவாக்கா விட்டாலும், தகவல் அறிந்தவர்கள் கதை, கதையாய் சொல்வார்கள். இது குறித்தும், மேலெழுந்த வாரியாகத் தீர்ப்புச் சொல்ல முடியாதபடிக்கு consenting adults, position of authority என்ற விவகாரங்கள் எல்லாம் வருகின்றன. அந்த விவாதெமெல்லாம் இன்னொரு தளத்திற்கானவை. குடும்ப வாழ்வு வாழ்கின்ற அனைவருக்குமே அது திணிக்கும் சவால்கள் பற்றித் தெரியும். துன்பம் தாங்காமல் ஓடிப் போகலாமா என்ற விரக்தி முதல், சேறு கண்ட இடத்தில் மிதித்து, தண்ணி கண்ட இடத்தில் கழுவலாமா என்ற சபலம் வரைக்கும் வரும். அதை வெற்றி கொள்பவர்கள் நீண்ட காலம் ஒன்றாய் வாழ்கிறார்கள். ஆனால், சமூகக் கட்டுப்பாடுகளுக்காக ஒருவர் வாழ்நாள் பூராவும் நரகத்தில் வாழ வேண்டிய எந்தக் கட்டாயமும் இல்லை. தினசரி வீட்டுக்கு வரும்போது, கொலைக்களத்திற்குப் போகும் உணர்வு இருந்தால் அந்த வாழ்வு வாழ்வது வீண். ஆனால் எல்லாராலும் அவ்வாறு இலகுவாக உடைத்துக் கொண்டு போக முடிவதில்லை. தாங்க முடியாமல் ஓடித் தப்புகின்றவர்களையும் கண்ணை மூடிக் கொண்டு குற்றம் சாட்ட முடியாது. எனவே, அடிப்படைக் காரணங்களை அறிந்து கொள்ளாமல், இரண்டு தரப்பு கருத்துக்களையும் தெரிந்து கொள்ளாமல், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத 'மண்டையில் போடுகிற வன்னிக்காட்டு Kangaroo court... er... Tiger court தீர்ப்புகளை' அளிக்க முடியாது. எனவே, இந்த விவகாரத்தை குடும்ப விவகாரமாகத் தான் என்னால் பார்க்க முடிந்தது. அதற்கான வியாக்கியானங்கள் மேலே. இதற்கு வெறும் இரண்டு வரிப் பின்னூட்டத்துடன் நடையைக் கட்டியிருக்கலாம். ஆனால், நான் எழுத வந்த காரணம்... அந்தக் குழந்தையைப் பற்றியது! குடும்பத் தகராறுகளுக்குள் குழந்தைகள் சம்பந்தப்படும் போது, அது ஏற்படுத்தும் பாதிப்புகள் பாரதூரமானவை. தங்கள் தரப்பு நியாயத்தைக் குழந்தைகள் மீது திணிக்கும் குரூரமான செயற்பாடுகளைக் கண்டிருக்கிறேன். பழி வாங்கும் திட்டத்தில், பணயக் கைதிகளாக ஒன்றுமறியாக் குழந்தைகள் பலியாக்கப்படுவது எங்கும் நடக்கும் ஒன்று. குழந்தைகளைத் தகப்பனிடமே கைவிட்டு காதலனோடு கம்பி நீட்டிய தாய்மார் முதல், கை விட்டுச் சென்ற மனைவியைப் பழிவாங்கும் நோக்கில், பிறந்த நாள் விளம்பரத்தில் 'உயிரியல் தந்தை நானே' என்ற பகிரங்க வாக்குமூலம் வரைக்கும் நாங்கள் கண்டது தான். ஏமாற்றப்பட்ட கோபமும், அவமானமும் மனிதர்களை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதன் உச்சக்கட்டம் இந்தக் குடும்பத் தகராறு. என்னதான் இருந்தாலும், தங்களுடைய தகராறுகளுக்குக் குழந்தைகளைப் பலியாக்காமல், அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத விதத்தில் நடந்து கொள்ள வேண்டியது அந்தப் பிள்ளைகளை உயிராய் உருவாக்குவதற்கு பொறுப்பான இருவரினதும் கடமை. அதில் தந்தைக்கும் தாய்க்கும் கூட்டானதும் தனியானதுமான தனித்துவமான கடமைகள் உண்டு. அதில் தந்தைக்குரிய கடமையாக ஒவ்வொரு சமூகமும் ஏதோ விதிமுறைகளை வரித்து வைத்திருக்கிறது. எத்தனையோ தந்தையர் தொழில் நிமித்தம் உடல் ரீதியாக குடும்பத்தினருடன் இருக்க முடியாவிட்டாலும், வேறு எங்கோ இருந்தாலும் தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்கிறார்கள். ஆனால் வீட்டில் இருந்து கொண்டும் தன் கடமையைச் செய்ய வக்கில்லாதவர்களும் உண்டு. இதில் தியாகு அந்தக் குழந்தைக்குரிய கடமையைச் செய்யாதது போலவே எனக்குத் தெரிகிறது. தன்னுடைய கடமையைச் செய்ய தான் அனுமதிக்கப்படவில்லை என்று அவர் பதிலளிக்காமல் தலைமறைவாகினால் இவ்வாறு தான் நாங்கள் ஊகிக்க வேண்டியிருக்கும். அந்தக் குழந்தைக்கு தான் ஏன் இன்று ஊடகங்களுக்கான விற்பனைப் பொருளாக வந்திருக்கிறேன் என்ற உண்மை புரியாமல் இருக்கக் கூடும். ஆனால் இதனால் ஏற்படக் கூடிய உளவியல் பாதிப்புகளை உங்களுக்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் சொல்ல வேண்டும் என்பது தான் இந்த விலாவாரியான விளக்கத்திற்குக் காரணம். இப்படியாக, தன்னுடைய குடும்பத்தைக் கை விட்டு, எவளோ ஒருத்தியுடன் ஓடிப் போன ஓடுகாலி ஒன்று பற்றி எனக்கு நெருக்கமாகத் தெரியும். மனைவியின் உழைப்பில் சொகுசாய் வாழ்ந்து, இன்னொருத்தன் மனைவியுடன் ஓடிப் போனவனோடு, அந்தக் குடும்பத்தின் குழந்தைகளில் ஒருவன் நெருக்கமாய் இருந்தான். மற்றப் பிள்ளைகள் ஓரளவுக்கு அந்தப் பிரிவைத் தாங்கியதாக வெளியில் எங்களுக்குத் தெரிந்தாலும், இந்தப் பிள்ளை உளரீதியாக மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருந்தான். மன அழுத்தம் காரணமாக, அதைக் கட்டுப்படுத்துவதற்கு மருந்துகள் எடுக்கும் அளவுக்கு. இத்தனைக்கும் அந்தத் தாய் அந்தப் பிள்ளைகளைத் தன்னால் முடிந்தவரைக்கும் உழைத்து வளர்த்துக் கொண்டிருந்தார். பொருளாதார ரீதியில் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தாலும், அன்புக்குக் குறைவில்லாபடிக்கு, அந்தக் குடும்பம் இருந்தது. அந்தப் பிள்ளையுடன் எனக்கு நெருக்கம் வந்ததன் காரணங்களில் ஒன்று, என்னுடைய மகனும் அவனும் ஒரே தினத்தில் பிறந்தவர்கள் என்பது. அவனைக் காணும் போதெல்லாம் கட்டியணைத்து, ஆங்கிலத்தில் 'நல்ல பையனாயிரு, அம்மாவைக் கவனமாய் பார்த்துக் கொள்' என்று சொல்வதுண்டு. படிப்பில் மிகவும் கெட்டிக்காரனாக இருந்த அவன் அவனுடைய ஸ்பெஷலிஸ்டைச் சந்திக்கச் செல்லும் தவணையின் போது, அவனது தாய்க்கு மொழி பெயர்ப்பாளராகச் செல்ல வேண்டியிருந்தது. அவனது மன அழுத்தம் குறைந்திருப்பதாகச் சொல்லி அந்த ஸ்பெஷலிஸ்ட், அவனுக்கான மருந்துகளின் செறிவைக் குறைத்துக் கொடுத்திருந்தார். வெளியே வந்து, காரில் ஏறியதும், கட்டியணைத்து, 'உறுதியாக இரு' என்று சொல்வதைத் தவிர எனக்கு வேறு ஏதும் தெரியவில்லை. ஆனால், நாங்கள் ஸ்பெஷலிஸ்டிடம் சென்று இரு வாரங்களுக்குள்... அந்தப் பிள்ளை அவலமான முறையில் தன் உயிரை மாய்த்துக் கொண்டான்! இன்று தாமரைக்குப் பின்னால் அணி திரண்டிருக்கும் நண்பர்களும், ஆதரவு அறிக்கை வெளியிடும் இலக்கியவாதிகளும், ஓடிப் போன தியாகுவின் தலைவர்கள், தோழர்களும், இந்தப் பிள்ளைக்கு ஏற்படும் உளவியல் பாதிப்பு எவ்வளவு தூரம் செல்லலாம் என்று உணர்ந்தால்... தயவு செய்து அந்தக் குழந்தையை இந்தத் தெ(தி)ருக்கூத்திலிருந்து வெளியே எடுங்கள்!

    Postad



    You must be logged in to post a comment Login