Recent Comments

    தனக்குத் தெரியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்

    உங்கள் வீட்டை விற்பதற்கு நீங்கள் விற்பனை முகவரை நாடுகிறீர்கள். விற்பனைத் தொகையில் முகவர்களுக்கான தரகுப் பணக் கழிவு உண்டு. அதிலும் தற்போது வீடு விற்கும் விலையில் அந்தத் தொகை கணிசமானது. வழமை போல, 'உவருக்கு ஏன் வீணாய் அவ்வளவு காசு குடுப்பான்?' என்று நீங்களே முகவர் வேலையைத் தொடங்கத் தயாராகக் கூடும். நம்ம பக்கத்து வீட்டுக்காரர் இப்படித் தான் 'வீடு விற்கிறேன், பேர்வழி' என்று புறப்பட்டு, கடைசியில் அதற்கும் பணம் செலவிட்டு, முகவரைப் பிடித்து விற்க வேண்டியதாயிற்று. தனியார்கள் தங்கள் வீடுகளை விற்பது ஒன்றும் தலையால் மண் கிண்டும் வேலை அல்ல. இருந்தாலும், அது மிகப் பெரிய பொறுப்பான விடயம். அதற்கான அறிவு, திறமை, நேரம் உள்ளவர்களால் தங்கள் வீட்டை விற்று பணத்தைச் சேமிக்க முடியும். வீட்டுக்கு வெளியே மட்டையில் 'வீடு விற்பனைக்கு' என்று எழுதி தொங்க விட்டால், வாங்குவோர் வரிசையில் நிற்பார்கள் என்று எதிர்பார்த்தால்... ஜாக்கிரதை! இணையத்தில் வீடு விற்றுத் தரும் நிறுவனங்கள் உள்ளன. நம்ம பக்கத்து வீட்டுக்காரர் அவற்றுக்கு பணம் செலுத்த, அவர்கள் வீடு விற்பனை மட்டையையும் கொடுத்து, இணையத்திலும் விளம்பரம் செய்திருந்தார்கள். ஆனால் இந்த நிறுவனங்கள் அனுமதி பெற்ற விற்பனை முகவர்கள் அல்ல. இந்த நிறுவனங்கள் உங்கள் வீட்டு விபரங்கள், படங்கள், வீடியோக்களை இணையத்தில் விளம்பரப்படுத்தி, ஆடுளு எனப்படும் முகவர்கள் பயன்படுத்தும் தரவுத் தொகுப்பில் சேர்க்க சுமார் இரண்டாயிரம் டொலர் வரை அறவிடுவார்கள். உங்கள் வீடு விற்பனையாகா விட்டால் அந்தப் பணம் அம்போ தான்! உங்களுக்குத் திருப்பிக் கிடைக்காது. ஆனால் முகவர்களுக்கு நீங்கள் ஆரம்பத்தில் எதுவுமே செலுத்தத் தேவையில்லை. உங்கள் வீட்டை விற்பதற்கு விளம்பரங்கள் தொடக்கம் முகவர்கள் செய்யும் எந்த வேலைக்கும் நீங்கள் முற்பணம் செலுத்தத் தேவையில்லை. உங்கள் வீடு விற்பனையாகா விட்டால், முகவருக்கு நீங்கள் எந்தப் பணமும் செலுத்தத் தேவையில்லை. தற்போது ரொறன்ரோ வீட்டுச் சந்தையில் ஒரே வீட்டுக்கு பலர் போட்டி போட்டு விலையைக் கூட்டுவது சாதாரணமாய் நடைபெறும் நிகழ்வு. கேட்ட தொகையை விட, அதிக விலை கொடுத்து வாங்குவது அடிக்கடி நடைபெறும் ஒன்று. நீங்கள் சொந்தமாய் வீடு விற்கும் போது இந்தப் போட்டிக்கு யாரும் வர மாட்டார்கள். காரணம்... முகவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால், போட்டியை ஏற்படுத்தக் கூடிய வகையில் விலையை நிர்ணயிப்பார்கள். போட்டிக்கு வரும் ஒவ்வொருவரும் மற்றவர் என்ன விலையில் வாங்க சம்மதிக்கிறார் என்பதை அறிய முடியாதபடிக்கு நியாயமான முறையில் விற்பனை நடக்கும். ஆனால் தனிhயர் வீட்டை விற்கும்போது, இந்த இரகசியக் காப்பு இருக்காது. வீட்டுக்காரர் யார் யார் இன்ன விலைக்கு வாங்கச் சம்மதிக்கிறார் என்பதை எல்லோருக்கும் சொல்ல முடியும். இதனால் வீடு வாங்க விரும்புவோர் பெரும்பாலும் இந்தப் போட்டிக்கு வருவதில்லை. எனவே எதிர்பார்த்தபடி அதிக விலைக்கு விற்க முடியாது. முகவருக்கு உங்கள் வீடு இருக்கும் பகுதியில் உள்ள மற்ற வீடுகளின் விலை பற்றிய சந்தை நிலைவரம் தெரியும். ஆனால் நீங்கள் விற்கும்போது, உங்களுக்கு உங்கள் வீட்டின் விலை என்னவாக இருக்கும் என்று தெரியாது. ஒரு தன்னம்பிக்கையில் அதிக விலைக்கு விற்பனைக்கு விட்டு காத்திருப்பீர்கள். அல்லது வீட்டு விலையை நிர்ணயிக்க ஒருவருக்கு பணம் செலுத்தி விலையை அறிய வேண்டியிருக்கும். நீங்கள் முகவருக்கு செலுத்தும் பணத்தை மிச்சம் பிடிப்பது வாங்குபவருக்குத் தெரிந்தால், அவர் அதிலும் பங்கு கேட்கக் கூடும். சில நேரங்களில் வாங்குபவர் முகவரோடு வருவார். அவரோடு பேரம் பேசும்போது, அவரின் தரகுப் பணமும் உங்களின் விற்பனைப் பணத்தில் இருந்து தான் கழிக்கப்படும். இந்த முகவர்களும் தங்கள் அனுபவத்தின் மூலம் உங்களிடம் இருந்து முடிந்தவரை விற்பனைப் பணத்தைக் கழிக்கப் பார்ப்பார்கள். நீங்கள் வீடு விற்கும்போது, உங்கள் வீட்டின் சகல பிரச்சனைகளையும் நீங்கள் வாங்குபவருக்குச் சொல்ல வேண்டும். எதையும் மறைக்க முடியாது. எதையாவது மறைத்திருந்தால், வீட்டை விற்ற நீண்ட நாட்களின் பின்னாலும் வாங்கியவர் உங்களிடம் நட்ட ஈடு கோரி வழக்குத் தொடரலாம். ஆனால், வீட்டு முகவர்கள் இது குறித்து உங்களுக்கு சகல விதமான சட்ட உதவிகளையும் பெற்றுத் தருவார்கள். தனியார் வீடு விற்கும்போது, கடன் கொடுக்கும் வங்கிகள் கவனமாய் இருக்கும். சில நேரங்களில் மோசடிகள் நடைபெறலாம் என்று அவை சந்தேகப்படும். வீட்டின் பெறுமதியை விட அதிகமான விலைக்கு விற்கப்படுவதாக வங்கிகள் கருதினால் அவை தங்கள் பெறுமதி மதிப்பீட்டாளரை அனுப்பி விலையை மதிப்பிடும். ஏதாவது தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், வீட்டுக்கடனை அவை வழங்கா. முகவரைக் கொண்டு வீடு வாங்க முயற்சிப்போர் பெரும்பாலும் வங்கிகளில் முதலிலேயே கடன் வசதிகளை ஒழுங்கு செய்திருப்பார்கள். எனவே வீடு விற்க ஒப்பந்தம் செய்யப்படும்போது, வாங்குபவரிடம் பணம் இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டை விற்று பணத்தைச் சேமிக்கலாம் தான். ஆனால் அதனால் வரக்கூடிய ஆபத்துக்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இல்லாவிடில், தனக்குத் தெரியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம் என்பது போல, ஆப்பிழுத்த குரங்கு போல் மாட்டிக் கொண்டு முழிக்காதீர்கள். சுவடியில் விளம்பரம் செய்யும் விற்பனை முகவர்கள் போன்ற அனுபவமும் அனுமதியும் பெற்ற முகவர்களை அணுகி ஆலோசனை பெறுங்கள். ஆலோசனை பெறும்போது, சுவடியில் உங்கள் விளம்பரத்தைக் கண்டே வந்தோம் என்பதையும் காதில் போட்டு வையுங்கள். விசேட கழிவுகள் கிடைக்கலாம்.

    Postad



    You must be logged in to post a comment Login