Recent Comments

    கொல்லைப்புறத்தில் கொசுக்கடித் தொல்லையா?

    Mosquitoகோடை காலம் வந்தது. தூரத்து இடிமுழக்கத்துடன் கூடிய மழை பெய்யும். மழை நீர் கொல்லைப்புறமாய் தேங்கி நிற்கும். எங்கிருந்தோ வரும் நுளம்பு குடி கொண்டு, மாலைப் பொழுதுகளில் ஊசியால் குத்தி இரத்தப் பரிசோதனை செய்யும். உங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே நுளம்பை அண்ட விடாமல் வைக்கக் கூடிய தாவரங்களை நாட்டுங்கள். நுளம்புத் தொல்லையும் குறையும். தோட்டமும் அழகு பெறும். நுளம்புத் தொல்லை இன்றி, மாலை நேரங்களில் தோட்டத்தின் அழகை காதல் துணையுடன் கரம் கோர்த்து ரசிக்கலாம். (இருந்தாலும், இதெல்லாம் ரூ மச் தான்!) நம்ம செவ்வந்திப் பூச் செடி... அதன் மணம் நுளம்புக்கு அலர்ஜி. ஆதலினால், செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்காமாரின் கூந்தல் மணம் நுளம்புக்குப் பிடிக்காது. மானாமதுரை மச்சானுக்குப் பிடிக்கும்! லெமன் பாம் (Lemon Balm) தேசிக்காய் மணத்துடன் இருக்கும் பல்லாண்டு வாழி. ஆனால் ஒன்று, வேகமாய் வளர்ந்து இடத்தைப் பிடிக்கும். தொகையாய் விதை போட்டுப் பெருகும். எனவே, பூஞ்சாடிக்குள் வைத்து வளருங்கள். மாலையில் ஒரு புறமாய் காதல் துணை, மறுபுறமாய் பூஞ்சாடி சகிதம் கொசுத் தொல்லை அகற்றுங்கள். பூனைகள் காதல் கொள்ளும் கற்நிப் எனப்படும் Catnip இல் உள்ள இயற்கையான எண்ணெய் நுளம்புக்காய் விசிறும் மருந்தை விட பல மடங்கு பலம் வாய்ந்தது. ஆனாலும், பக்கத்து வீட்டுப் பூனைக்கு மணம் பிடித்தால், உங்கள் கொல்லைப்புறம் பூனையின் மலசலகூடமாயும் மாறலாம். லெமன் பசில் (Lemon basil) இன் தேசிக்காய் மணம் நுளம்பை விரட்டும். இதன் இலைகளை கசக்கி தோல் பகுதியில் பூச, நுளம்புத் தொல்லை நீங்கும். லவெண்டர் (Lavendar), பெப்பர்மின்ட், றோஸ்மேரி, உள்ளி போன்றனவும் நுளம்புத் தொல்லை அகற்றும். மேற்குறிப்பிட்ட தாவரங்களை பச்சையாய் இடித்து, வொட்கா குடிவகையில் ஊற வைத்து, அதன் சாற்றை விசிறுங்கள். நுளம்பு வராது. நுளம்பை அடிப்பதாகச் சொல்லி, உங்கள் கன்னத்தில் உங்கள் காதல் துணை அறைவதும் நிற்கும்.

    Postad



    You must be logged in to post a comment Login