Recent Comments

    குளிர்காலத்தில் வீட்டின் உள்ளே தாவரங்களைப் பராமரிப்பது எப்படி என்ற கவலையா?

    அஞ்சற்க... கற்றுத் தர... யாமிருக்கப் பயமேன்?

    thayagam featured-plantsinside

    குளிர் காலத்தில் வெப்ப மண்டலத் தாவரங்களை உள்ளே கொண்டு வருவதன் முன்னால் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னைய தாயகத்தில் வாசித்திருப்பீர்கள்.

    வெண்பனி வெளியே கொட்ட, வீட்டின் உள்ளே குளிர் ஆக்கிரமிக்க, இந்தக் கன்றுகளை எப்படிப் பராமரிப்பது, சரியாகப் பராமரிக்கா விட்டால் கன்றுகள் இறந்து விடுமே என்பது பயந்து போயிருப்பீர்கள்.

    அஞ்சற்க... கற்றுத் தர... யாமிருக்கப் பயமேன்? சூரிய தேவனை வீட்டிற்குள் நுழைய விடுங்கள்!

    உள்ளே கொண்டு வந்த கன்றுகளுக்கு அத்தியாவசியமானது சூரிய ஒளி. அது கோடை காலம் போன்று அதிகமாக இருக்காது. எனவே தெற்கு, மேற்குப் புற ஜன்னல் ஓரமாக அவற்றை வைக்க வேண்டும். சூரிய ஒளி உள்ளே நன்றாக வருவதற்காக ஜன்னல்களை நன்றாகத் துடைத்து விடுங்கள். ஜன்னல் ஓரம் வைக்கும்போதும், இலைகள் கண்ணாடியில் படாதபடிக்கு பார்த்துக் கொள்ளுங்கள். இரவு நேரங்களில் குளிர் அதிகமாக இருந்தால், எடுத்து தூர வைத்து, பின்னர் காலையில் ஜன்னலோரம் வையுங்கள்.

    சூரிய ஒளி போதாது என்று கருதினால், புளோரசன்ட் ரக மின்குமிழ்களைப் பயன்படுத்துங்கள். அவை கன்றுகளுக்கு ஒரு அடி உயரத்துக்குள் நெருக்கமாக இருக்க வேண்டும். பகல் நேரங்களில் போதிய சூரிய ஒளி இருந்தால், இரவில் சில மணி நேரங்கள் மின்னொளி வழங்குங்கள். சீலிங்கில் உள்ள குமிழ்களின் செறிவு தாவரங்களுக்கு போதாது.

    சூரிய ஒளி விழுமாக இருந்தால், சுற்றி வர சூடாக இருக்கும் குளிர்சாதனப் பெட்டிக்கு அருகிலும் வைக்கலாம்.

    ஆனால் சூடாக இருக்குமே என்று சூடான வளி வரும் துவாரங்களுக்கு அருகில் வைக்காதீர்கள். மிகவும் உலர்ந்த காற்று அவற்றூடாக வந்து தாவரங்கள் இறக்க நேரிடும். அளவாகத் தண்ணீர்!

    தாவரங்களுக்கு அடுத்துத் தேவையானது நீர். ஆர்வ மிகுதியால் அதிகளவு நீர் விட்டு தாவரங்களைச் சிவபதவி அடையச் செய்யாதீர்கள்.

    வெளியில் இருக்கும்போது, காற்றோட்டத்தினால் நீரை இழக்கும் தாவரங்களுக்கு அதிகம் நீர் தேவைப்பட்டது போல, வீட்டின் உள்ளே தேவைப்படாது. அதிலும் குளிர்காலத்தில் மண் ஈரம் நிறைந்திருந்தால் அது வேர்கள் அழுகுவற்கு வாய்ப்பாகி விடும்.

    எனவே முடிந்தால், வாளி ஒன்றில் மிக மெதுவான சூடான நீரால் நிரப்பி, அதனுள் தாவரத்தை மூழ்கடித்து, மண்ணில் உள்ள வாயுக்குமிழ்கள் வெளியேறிய பின்னால் ஒரு தட்டில் வையுங்கள். நீண்ட நேரத்தின் பின், நீர் தட்டில் இருந்து வழிந்த பின்னால், ஜன்னல் கரையோரம் வைக்கலாம். ஈரமான மண் நன்கு காய்ந்து, தாவரம் மெதுவாக வாட, மீண்டும் அதே போலச் செய்யலாம். மண் காய்ந்து போகும்போது, தாவர வேர்களுக்குத் தேவையான ஒட்சிசன் மண்ணுக்குள் நுழைய முடியும். அல்லது தட்டில் நீர் நிரப்பி, தாவரச் சட்டியை அதன் மேல் வைக்க, மண் நீரை உறுஞ்சும். பின்னர் தட்டை அகற்றி விட்டு தாவரத்தை ஜன்னல் ஓரம் வைக்கலாம்.

    தேசிக்காய், தோடம்பழம் போன்ற சித்திரஸ் வகைத் தாவரங்கள் எப்போதும் ஈரமாக உள்ள மண்ணுள்ளேயே நிற்க வேண்டும் என்பதால் இவை விதிவிலக்கு.

    அத்துடன் உங்கள் அதிஷ்ட மூங்கில் (இது உண்மையில் மூங்கில் அல்ல!) நீருக்குள்ளேயே இருக்க வேண்டும். நேரடிச் சூரிய ஒளியில் வைக்காதீர்கள். கருகலாம். ஆனால் இவற்றின் வேர்கள், குழாய்நீரில் உள்ள குளோரினால் இறக்கலாம். எனவே வடிகட்டிய நீர், ஊற்றுநீர் போன்றவற்றை அவற்றுக்குப் பயன்படுத்துங்கள். சொல்லாமல் கொல்லும் ஈரப்பதன்!

    குளிர் காலத்தில் வீட்டிற்குள்ளே உள்ள வளியின் ஈரப்பதன் காய்ந்து உலர, அது தாவரங்களைப் பாதிக்கும். அதனால் இலைகள் காய்ந்து கருகி,  இறக்க நேரிடலாம். எனவே நீர் விடுவதை விட, ஈரப்பதன் குறித்து மிகவும் கவனமாக இருங்கள். இலைகள் காயும்போது, பூச்சிகள் தாவரங்களில் குடி கொள்ளலாம். நீருள் மூழ்கடித்து அல்லது கிருமி கொல்லும் சவர்க்காரக் கரைசலைப் பயன்படுத்துங்கள். அதற்காக சமையலறை, குளியலறை போன்ற ஈரப்பதன் அதிகமான அறைகளில் கன்றுகளை வைக்கலாம். நீர் விசிறியில் நீர் நிரப்பி அடிக்கடி மெல்லிய நீர்த் திவலைகளை விசிறுங்கள். இது இலைகளை ஈரமாக வைத்திருக்கும். அத்துடன் சிறுகற்கள் நிறைந்த தட்டு ஒன்றில் நீர் நிரப்பி, தாவரங்களுக்கு அருகில் வைப்பதன் மூலமும், எல்லாத் தாவரங்களையும் ஒன்றாக வைப்பதன் மூலம் அவை சுவாசிக்கும்போது வரும் நீர் மூலமாயும் ஈரப்பதனை பேண உதவும்.

    அத்துடன் Humidifier எனப்படும் ஈரப்பதன் பேணும் கருவியைப் பயன்படுத்தலாம். கதவு, சமையலறை ஜன்னல் போன்றவற்றை அடிக்கடி திறக்க வேண்டி யிருந்தால், குளிர் காற்று திடீரென்று நுழைந்து தாவரங்களை அதிர்ச்சிக் குள்ளாக்காமல், அவற்றிலிருந்து நேரடியாக காற்று நுழையும் பாதையில் கன்றுகளை வைக்காதீர்கள். திடீர் குளிர் அதிர்ச்சியால், தாவரங்கள் பிராணனை விடக் கூடும்.

    இப்படியாக நம் வீட்டு கறிவேப்பிலை அர்த்தநாரீஸ்வரர் மாதிரி, ஒரு பாதி உயிர் விட்டு, மறுமீதி ஒருவாறாய்த் தப்பிப் பிழைத்தது.

    வீட்டுக்குள் ஒரு கண்ணாடி மாளிகை!

    தாவரங்கள் வளர்க்கும் கண்ணாடி அறை போன்று, பிளாஸ்டிக்கால் மூடி, தாவரங்களை வைக்க தட்டுகள் அமைந்த சிறு greenhouse கள் கடைகளில் விலையாகின்றன. அவற்றை வாங்கி, அவற்றுள் தாவரச் சட்டிகளை தட்டின் மேல் வைத்து மூடி விட்டால், வெப்பநிலை ஓரளவு சீராக இருக்கும். ஆனால் குளிர் குறைந்து வரும் போது, கடும் சூரிய வெளியில் உள் வெப்பநிலை அதிகரித்து தாவரங்கள் இறக்கலாம். எனவே கடும் சூரிய ஒளி நாட்களில் அவற்றின் வாயில்களைத் திறந்து விடலாம்.

    இல்லாவிடில், இரவுகளில் ஒளி புகும் பிளாஸ்டிக் சீட்டுகளால் மூடியும் விடலாம். குளிர்காலத்தின் தாவரத்தில் அதிகமாக வளர்ச்சி ஏற்படாமல், குளிர்காலத்தில் அமைதியாக தாவரங்கள் உறங்க வேண்டும். எனவே பசளைகள் பயன்படுத்துவதைத் தவிருங்கள். புதிய வளர்ச்சி ஏற்பட்டால், அவற்றினால் குளிருக்கு ஈடு கொடுக்க முடியாது தாவரங்கள் இறக்க நேரிடலாம்.

    கவலை வேண்டாம். விரைவில் குளிர் விட்டு, வசந்தம் வரும்.

    கன்றுகளை வெளியே வைத்து போவோர் வருவோருக்கு எல்லாம் சீன் காட்டலாம்.

    யாம் பெற்ற அறிவின்பம் பெறுக இவ்வையகம் என பெருமனதுடன் நினைத்தால், இந்தத் தகவலை முகப்புத்தக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே! தயங்காமல் கீழுள்ள பட்டன்களை அழுத்துங்கள்,

    நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களையும் எங்களுக்கு நண்பர்களாக்கலாம், நாங்கள் என்ன மறுக்கவா போகிறோம்!

    Save

    Postad



    You must be logged in to post a comment Login