Recent Comments

    கணனியில் குப்பை கொ(கூ)ட்டுவது எப்படி?

    பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று நன்னூல் பாடல் கூறுகிறது. நமக்கு புது வருடம் இந்தத் தொடக்கமாயிருந்தாலும், இங்கே வசந்த காலம் தான் எதற்குமே தொடக்கம். இந்த வகையில் வீட்டுக்குள் இருக்கும் பழைய பொருட்களை கழிக்குமாறு கடந்த இதழில் கூறியிருந்தோம். உங்கள் கணனியும் அடிக்கடி முகப் புத்தகத்தையும் யூடியூப்பையும் வலம் வந்திருக்கும். புலம் பெயர்ந்த ஈழத்தவர் யார் யார் சிவபதவி அடைந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மரண அறிவித்தல் தளத்திற்கும் தினசரி வேறு சென்று வந்திருப்பீர்கள். மரண வீட்டுக்குச் சென்றால், ஏன்... சும்மா வெளியே போய் வந்தாலே கால் கழுவி துப்புரவு செய்து வீட்டுள் நுழைவது நம் பண்பாடாச்சே!இதோ, உங்கள் கணனிக்குள்ளும் காற்றுக் கறுப்பு அண்டாதிருக்கும் வகையில் துப்புரவு செய்ய சில வழிகள்... நீண்ட காலப் பாவனையின் போது, வேண்டத்தகாத பொருட்கள் கவனிப்பாரற்றுப் பெருகி, குப்பையாய் நிறைவது போல, கணனியிலும் இணையத் தளங்கள் விட்டுச் செல்லும் காலடிச்சுவடுகள் உட்பட்ட அனாவசியப் பொருட்கள் கணனியை நிறைத்திருக்கும். ccleaner என்ற செயலியை www.piriform.com/ccleaner/downloadஎன்ற தளத்தில் பதிவிறக்கம் செய்யுங்கள். அதைச் செயற்படுத்தும்போது அந்த ஜன்னலில் கீழ் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்துங்கள். உங்கள் கணனியில் உள்ள குப்பைகள் எல்லாவற்றையும் தேடி உங்கள் முன் கொண்டு வந்து கொட்டும். அதை எல்லாம் அழிப்பதா என்று கேட்கும் போது Run Cleaner என்ற பட்டனை அழுத்தி, ஓகே செய்யுங்கள். முடிவில் எவ்வளவு குப்பை இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தது என்பதை அறிந்து பிரமித்துப்போவீர்கள். நீங்கள் புதிதாய் வாங்கும் கணனியில் உங்களுக்குத் தேவைப்படாத பல செயலிகளை போட்டு நிரப்பியிருப்பார்கள். அவை அவ்வப்போது தலையை நீட்டி, அரிகண்டம் தரும். இந்தத் தலையிடியை எப்படி அகற்றுவது என்று மூளையைப் போட்டுக் குழப்பியிருப்பீர்கள். (உங்களுக்கு மூளையில்லை என்று யாராவது சொல்லியிருந்தால், இதை ஆதாரமாகக் காட்டுங்கள்!) PCDecrapifier என்ற செயலி உங்கள் கணனியின் மூலைமுடுக்குகளில் தேடி தேவையில்லாத செயலிகளை அகற்றும். அகற்ற முன்னால் உங்களையும் ஒரு வார்த்தை கேட்கும். அந்தச் செயலியை http://pcdecrapifier.com/ என்ற தளத்தில் தரவிறக்கம் செய்யுங்கள். அதைச் செயற்படுத்தும்போது, அது தேவையில்லாதவற்றை உங்கள் முன்னால் கொட்ட, எவற்றை அழிக்க வேண்டுமோ அவற்றைத் தெரிவு செய்து அழியுங்கள். இடம் மிச்சம். தலையிடியும் குறையும். குப்பைகளை நீக்கி, வீடு துப்புரவாக இருந்தால் காற்றுக் கறுப்பு அண்டாது. அதுசரி... துப்புரவாக்கி, மிஞ்சிய இடத்தை என்ன செய்வது? பழையபடி குப்பை கொட்ட ஆரம்பிக்க வேண்டியது தான்... முகப்புத்தகத்தில்!

    Postad



    You must be logged in to post a comment Login